பா.ஜ.க. முதலமைச்சரின் பேச்சுக்கு கண்டனம்

நாங்கள் வேடிக்கைப் பார்க்கமாட்டோம்

- நேபாளம் எச்சரிக்கை

புதுடில்லி. பிப். 17 நேபாளத்திலும் இலங்கையிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற திரிபுரா மாநில பாஜக முதலமைச்சர் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிபுரா முதல்வர் விப்லப் தேவ் பேச்சு ஆட்சேபத்துக்கு உரியது என்று இந்தியாவுக்கான நேபாள தூதர் நிலம்பர் ஆச்சார்யா கூறியுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலர் அரிந்தம் பக்க்ஷியை தொடர்பு கொண்ட நேபாள தூதர் தமது நாட்டின் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்து விட்டதாக அமித்ஷா கூறியதாக விப்லப் தேவ் பேசினார். அடுத்து எஞ்சியுள்ள நேபாளத்திலும் இலங்கையிலும் பாஜகவை தொடங்கி ஆட்சி அமைக்க உள்ளதாக அமித்ஷா கூறியதாக பேசினார். நேபாளம், இலங்கையில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று திரிபுரா முதல்வர் விப்லப் தேவ் பேசியது தான் சர்ச்சை ஆகியுள்ளது.

விவசாயமே அழிந்துபோனாலும் ஆறுவழிச்சாலை உறுதியாம்

- நிதின்கட்கரி மிரட்டல்

விழுப்புரம், பிப். 17 விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி சேலம் - சென்னை சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதின் கட்கரி பேட்டியளித்துள்ளார். 6 வழிச்சாலை அமைப்பதற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார். ரூ.7,500 கோடி செலவில் சேலம் - சென்னை 6 வழிச்சாலை பணிகள் மேற்கொள்ளப்படும். நிலம் எடுக்கும் பணிக்காக மட்டுமே ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய  அமைச்சர் நிதின் கட்கரி பேட்டியளித்துள்ளார். சாலை அமைக்க கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை விலையை விட அதிக பணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தருகிறது. சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையில் ஈரடுக்கு பறக்கும் சாலை அமைக்க ஆலோசிக்கப்படும் என்றும் நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார்.

Comments