மோடிக்கு நெருக்கமான அதிகாரிக்கு எதிரான சான்றுகளை சி.பி.அய். அழித்து வருகிறது

புதுடில்லி. பிப். 11- மோடியின் நெருங்கிய நபரும், முன்னாள் புல னாய்வுத்துறை தலைமை அதிகாரியுமான ராகேஷ் அஸ்தானா வுக்கு எதிரான ஆதாரங்களை மத்திய புலனாய்வுத்துறை அழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிபிஅய் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கின் கோப்புகள் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் இருப்பதாக டில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்றும், அந்த விவரங்கள் நீதிமன்றத்தில் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.  முன்னதாக தனக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி ராகேஷ் அஸ்தானா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஆதாரங்களை புலனாய்வுத்துறை அழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவர் மீண்டும் மத்திய புலனாய்வுத்துறை தலைமைப் பதவிக்கு வருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஸ்தானா மீது மோசடி மற்றும் லஞ்சம் பெற்றதாக குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 1984ஆம் ஆண்டு குஜராத் மாநில பிரிவைச் சேர்ந்த அய்.பி.எஸ். அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த அவர், மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நெருக்கமான அதிகாரிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.

குஜராத், கோத்ரா ரயில் தீ வைக்கப்பட்ட வழக்கை விசாரித்த குழுவில் இடம்பெற்றவர் அஸ்தானா. நரேந்திர மோடி பிரதமரான போது குஜராத்தில் இருந்து மத்திய அரசுக்கு அழைக்கப்பட்ட 20 அதிகாரிகளில் அஸ்தானாவும், நிதியமைச்சகத்தில் செயலராக பதவி வகிக்கும் ஹஸ்முக் அதியாவும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள்.

ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட இவர் கால்நடைத் தீவன வழக்கில் லாலு பிரசாத் யாதவிடம் தொடர்ந்து ஆறு மணி நேரம் விசாரணை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மோடிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த காரணத்தால் இவர் மீதான ஊழல் வழக்குகள் இன்றுவரை விசாரிக்கப் படாமல் உள்ளன. தற்போது சான்றுகளை அழிக்க சிபிஅய் முயன்றுவருவது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி மய்யத்தில் பயின்றால்

தேர்வு இல்லாமல் ஓட்டுநர் உரிமம்

மத்திய அரசு பரிசீலனை

நாக்பூர், பிப். 11- ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது ஓட்டுநர் பயிற்சி மய்யத்தில் பயின்றவர்களுக்கு தேர்வு கிடையாது என்ற விதியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்த பரிசீலனையை மத்திய சாலை போக்குவரத்துத்துறை பரிசீலித்து வருகிறது. மேலும் பரிசீலனையை, இணையத்தில் வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டுள்ளது. திறன் பெற்ற ஓட்டுநர்களை உருவாக்கும் வகையில், ஓட்டுநர் பயிற்சி மய்யங்களில் இருக்க வேண்டிய வசதிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை உருவாக்க மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகம் உருவாக்கி உள்ளது.

இவ்வாறு உருவாக்கப்படும் ஓட்டுநர் பயிற்சி மய்யங்களில் பயிற்சி எடுக்கும் ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமத்துக்காக விண்ணப்பிக்கும் போது நடத்தப்படும் தேர்வில் பங்கேற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற பரிந்துரையும் அதில் இடம் பெற்றுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மய்யத்தில் பயிற்சி பெறும்போது,  சிறப்புப் பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும், அதனால், சாலை விபத்துகள் குறை யும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

நீட்'  தேர்வால் 

திருவாரூர் மாணவர் தற்கொலை!

மனஉளைச்சலால் பூச்சி மருந்தை ஊசி மூலம் செலுத்தி உயிர்விட்டார்!

திருவாரூர், பிப்.11- நீட் நுழைவுத் தேர்வால் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வைக் கொண்டு வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ‘நீட்' தேர்வால் பலர் தற்கொலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவாரூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேப்பத்தாங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் மகன் கார்த்திக், கடந்த ஆண்டுநீட்' தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த மாணவன் கார்த்திக், இரண்டு நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அதிகாலை மாணவன் கார்த்திக் உயிரிழந்தார். +2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வினால் மருத்துவக் கனவு பறிபோய்விட்டதாக மாணவனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ‘நீட்' தேர்வினால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியையும், சோகத் தையும் ஏற்படுத்தி யுள்ளது.

கரோனா தொற்றுக்கு

மேலும் 7 புதிய அறிகுறிகள் கண்டுபிடிப்பு

அய்தராபாத், பிப். 11- கரோனா வைரஸ் தொற்றானது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல், வறட்டு இருமல், சுவை திறன் இழப்பு, தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், நுகர்வு திறன் இழப்பு போன்றவைகள் கரோனா அறிகுறி களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

இந் நிலையில், மேலும் 7 பாதிப்புகள் கரோனா தொற்றுக்கான அறிகுறிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. அவை, தசை வலி, மூட்டு வலி, வயிற்று போக்கு, சருமப் பிரச்சினை, கை,கால் விரல்களின் நிறம் மாறுதல், வெண்படலம் ஆகியவை கரோனாவுக்கான அறிகுறிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

Comments