பா.ஜ.க. தலைவர்மீது பெண் மோசடி புகார்

விழுப்புரம்,பிப்25- மோசடி செய்த பா...வின் மாவட்டத் தலைவர்மீது பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சி புரத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி காயத்ரி (வயது 45). இவர் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

என் உறவினரின் நண்பரான பா... மாவட்டத் தலைவர் கலிவரதன், எனக்கு கட்சியில் மாவட்ட பொறுப்பு வாங்கி தருவதாக கூறினார். என் கணவர் விரும்பாததால், மறுத்துவிட்டேன். ஆனால், அவராகவே என்னை கள்ளக்குறிச்சி மகளிரணி பொதுச் செயலர் என சுவரொட்டி அடித்து, எங்கள் பகுதியில் ஒட்டினார்.

என் கணவர் கண்டித்ததை அறிந்த கலிவரதன், அவர் கூறுவது போல் நடக்காவிட்டால், என் குடும்பத்தை அழித்து விடுவதாக மிரட்டினார். இதனால், என்னை கட்சி பணிக்கு, அவர் அழைத்துச் செல்வதை, எங்களால் தடுக்க முடிய வில்லை.தீபாவளி பண்டு பட்டாசு மற்றும் நகையை குறைந்த விலையில் வாங்கித் தருவதாக கூறி, என்னிடம் கட்டாயப்படுத்தி வாங்கிய, 5 லட்சம் ரூபாயை இதுவரை தரவில்லை. மகளிரணி தலைவி பொறுப்பு வாங்கி தருவதாகவும், கவுன்சிலர் சீட் வாங்கி தருவதாகவும் கூறி, 5 லட்சம் ரூபாயை, கட்டாயப்படுத்தி வாங்கினார். என் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். அதை அலைபேசியில் படம் எடுத்து, என்னை மிரட்டி வருகிறார். மோசடி செய்த கலிவரதன் மீது நடவடிக்கை எடுத்து, என்னிடம் அபகரித்த, 10 லட்சம் ரூபாயை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

 

செவ்வாய் கோள் ஆய்வு வாகனத்திலிருந்து பெறப்பட்ட காட்சிப் பதிவில் தெளிவான காட்சிகள்

கேப் கேனவரல்,பிப்.25-அமெரிக்க விண் வெளி ஆய்வு அமைப்பான, 'நாசா' அனுப்பியுள்ள, 'ரோவர்' எனப்படும், ஆய்வு வாகனம், செவ்வாய் கோளில் இருந்து அனுப்பியுள்ள படங்கள் மற்றும், 'காட்சிப் பதிவு' மிகத் தெளிவாக உள்ளதால், விஞ்ஞானிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

செவ்வாய் கோளுக்கு, கடந்தாண்டு ஜூலையில் நாசா அனுப்பிய விண் கலத்தில் இருந்து, 'ரோவர்' எனப்படும், செவ்வாய் கோளின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும் ரோந்து வாகனம், சமீபத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.அந்த ஆய்வு வாகனம், பல்வேறு புகைப் படங்களையும், காட்சிப் பதிவுகளையும் அனுப்பி வைத்துள்ளது.

இது குறித்து, நாசா விஞ்ஞானிகள் கூறிஉள்ளதாவது:எங்கள் கனவின் ஒரு பகுதிதான், இந்த படங்கள். செவ்வாய் கோளில், 400 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்ந்ததாக கருதப் படுகிறது. அதை உறுதி செய்வதற்காக இந்த ஆய்வு வாகனம் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது.ஒரு செவ்வாய் கோள் ஆண்டு, அதாவது, பூமியைப் பொறுத்த வரை, இரண்டு ஆண்டுகள், அங்கு இந்த வாகனம் ஆய்வில் ஈடுபடும்.

செவ்வாய் கோளின் மேற்பரப்பில் உள்ள மண், கற்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்படும். அதே போல், அங்கு துளையிட்டும் ஆய்வுகளை மேற் கொள்ளும். இந்த ஆய்வு வாகனத்தில், ஆறு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. அதில், அய்ந்து சிறப்பாக வேலை செய்கின்றன. பல்வேறு கோணங் களில் இருந்து, செவ்வாய் கோளில் ஆய்வு வாகனம் தரையிறங்குவது தொடர்பாக எடுத்துள்ள காட்சிப் பதிவு மிகத் துல்லியமாக உள்ளது.

ஆய்வு வாகனத்தில் இருந்த ஒரு, 'ஒலி வாங்கி' முதலில் வேலை செய்யவில்லை. பின், அது செயல்படத் துவங்கியுள்ளது. செவ்வாய் கோளில் காற்று வீசுவது போன்ற ஓசை உள்ளிட்டவை தற்போது கிடைத்துள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments