'கப்சா'-வுக்கு அளவேயில்லையா?

மின்சாரம்

 உண்மையைச் சொல்ல வேண்டுமானால் காஞ்சி சங்க ராச்சாரியாருக்கு இந்த அற்புதம், மந்திர ஜாலம் இவற்றில் நம்பிக்கை கிடையாது என்று சொல்லப்படுவதுண்டு. அதே நேரத்தில் அவர்மீது அளவுக்கு மீறிய மரியாதையையும், மதிப்பையும் கூட்ட அவருடைய  பக்த கோடிகள் அவர்மீது அசாத்தியமான - அசாதாரணமான சக்தி கொண்டவர் என காட்ட, அவரவர்களுக்கும் தோன்றிய வகையில்உதார்விடுவதில் போட்டிப் போட்டுக் கொண்டு திரிவார்கள்.

குமுதம்‘ - வரதராசன் என்ற அய்யங்கார் பார்ப்பனரின் கைக்குச் சிக்கிய நாள் முதல் (ஜெயிலுக்குப் போக வேண்டிய வரைக் காப்பாற்றியவர் முதல் அமைச்சர் கலைஞர்) ஒவ் வொரு இதழிலும் சாயிபாபாவை விஞ்சும் அளவில் அற்புதக் கை சரக்குகளை அள்ளிக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்.

சங்கராச்சாரியாரின் செல்வாக்கைக் கூட்டினால், அதன் பலன் பார்ப்பனர்களுக்குப் போய்ச் சேரும் என்பதால் இந்த (சி)த்து வேலைகளில் இறங்குவது கண்கூடு!

இந்தவார குமுதத்தில்கூட (10.2.2021) ஒரு கப்சா!

பக்தரிடம் எள்ளுப் புண்ணாக்கு கேட்ட பரமாசார்யா!” என்பது தலைப்பு

கட்டுரை இதோ:

மகா பெரியவர் முக்கியமாகக் கடைப்பிடிக்கச் சொன்ன சாஸ்திர விதிகளில் ஒன்று,

வேதம் படித்தவர்கள் சமுத்திரம் அதாவது கடல் தாண்டிச் செல்லக் கூடாது என்பது.

அப்படிச் சென்றவர்கள் மீண்டும் தன்னை தரிசிக்க வரும்போது அவர்களுக்குத் தீர்த்தம் தருவது, பிரசாதம் கொடுப்பது, அவர்கள் தரும் காணிக்கைகளை ஏற்பதில் தான் ஏற்றிருக்கும் சன்யாச தர்மத்திற்கு பங்கம் வராத முறையையே அனுசரித்தார்.

பரமாசார்யாளின் பரம பக்தரான ஒருவர், தவிர்க்க முடியாத காரணத்தால் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய சூழல் வந்தது.

வேறு வழியில்லாமல், மனதுக்குள் மகானையே நினைத்துக் கொண்டு, மானசீகமாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டு புறப்பட்டார் அவர்.

அங்கே சென்று தன் அலுவலகப் பணிகளைச் செய்த சமயத்திலும்கூட மனதுக்குள் ஆசார்யாளையே நினைத்துக் கொண்டார். ஒரு வழியாக சென்ற வேலை முடிந்து அவர் ஊருக்குத் திரும்பும் நாளும் வந்தது. அங்கே இருந்து புறப்படும்போதே மனதுக்குள் ஒரு சபதம் எடுத்துக் கொண்டார் அவர்.

புறப்படும் நிமிஷத்தில் இருந்து, இங்கே வந்து சேர்ந்து மகானை தரிசிக்கும் வரை ஆகாரம் எதுவும் சாப்பிடுவதில்லை. ஆசார்யாளை தரிசித்து அவர் கேட்கும் காணிக்கையை வாங்கித் தந்த பிறகுதான் சபதத்தை முடிக்க வேண்டும். இதுதான் சாஸ்திரத்தை மீறி சமுத்திரம் தாண்டிச் சென்ற தன் செயலுக்குப் பரிகாரமாக இருக்கும் என்று தனக்குத்தானே நிபந்தனை விதித்துக் கொண்டார் அவர்.

விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் நேராக வீட்டுக்குச் சென்று நீராடிவிட்டு உடனடியாக காஞ்சி மடத்துக்குப் புறப்பட்டார்.

மகானை தரிசிக்க நீண்ட வரிசை காத்திருந்தது. அந்த வரிசையில் அவர் சென்று நின்றபோது மதிய நேரம் நெருங்கியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு நாளாக சாப்பிடாத பசி மயக்கத்தோடு நின்று கொண்டிருந்த அவர், திடீரென்று தன் பெயரைச் சொல்லி யாரோ அழைக்க தயக்கத்தோடு திரும்பிப் பார்த்தார்.

சார்..உங்களைத்தான் கூப்பிடறேன். அதோ பெரியவா உங்களைப் பார்த்து சைகை செய்யறார் பாருங்க!”

அணுக்கத் தொண்டர் ஒருவர் சொல்ல, மகான் இருந்த பக்கம் திரும்பினார், பக்தர். அங்கே இருந்தே பேசினார் மகான்.

என்னைப் பார்க்கற வரைக்கும் சாப்ட மாட்டேன்னு விரதம் எடுத்துக் கொண்டிருந்தாயே.. இதோ பார்த்துட்டேன். முதல்ல அவர் கூட போய் சாப்பிட்டுட்டு வா!"

மகான் சொல்ல , அப்படியே அதிர்ந்துபோனார், பக்தர். தான் எங்கோ ஒரு வெளிநாட்டில் இருந்து மனதில் வேண்டிக் கொண்டது எப்படி மகானுக்குத் தெரிந்தது? அந்த ஆச் சரியம் விலகாமலே தொண்டரோடு சென்று, சாப்பிட்டுவிட்டு வந்தவருக்கு அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது.

புன்னகை வதனத்துடன் அவரை அழைத்த மகான், “என்ன போஜனம் ஆச்சா? அடுத்தது என்ன? நான் கேட்கறதை வாங்கித் தரணும். ஆனா, ஆசாரத்தை மீறினவாகிட்டே இருந்து நான் எதுவும் எனக்குன்னு வாங்கிக்க முடியாதே.. அதனால், நீ ஒண்ணு பண்ணு . உன்னால முடிஞ்ச அளவு தையல் இலையும் எள்ளுப் புண்ணாக்கும் வாங்கிக் குடு!னு சொல்ல, அப்படியே திகைத்து திக்கு முக்காடிப் போனார் பக்தர். தன் மனதுக்குள்ளேயே இருந்து பார்த்தவர் மாதிரியல்லவா பேசுகிறார் மகான்! விழி நீர் நிரம்ப நின்றவர் மனதுக்குள், ஒரு சந்தேகம் முளைத்தது.

எல்லாம் சரி..ஆனால், தையல் இலையும் எள்ளுப் புண்ணாக்கும் அல்லவா கேட்கிறார். நாம் நினைத்தது மகானுக்குத் தரவேண்டும் என்றுதானே! இவை எப்படி அவருக்குப் பயன்படும்? பக்தர் மனதுக்குள் மட்டுமல்ல, அங்கே இருந்த பலருக்கும்கூட மகான் எதற்காக இவற்றைக் கேட்கிறார்? என்ற சந்தேகம் எழுந்தது.

அதை உணர்ந்தவர்போல மகானே சொல்லத் தொடங்கினார். “என்னடா இவர் இதையெல்லாம் கேட்கறாரேன்னு யோசிக் கறியா? எள்ளுப் புண்ணாக்கை மடத்துல இருக்கற பசுக்களுக்கு குடுப்பா. அதுகள் தர்ற பால் சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்கு ஆகும். தையல் இலை வர்ற பக்தர்களுக்கு அன்ன தானம் செய்ய உதவும்...! அதாவது நேரடியா பலன் தராது. ஆனா உபயோக மாகும். சாஸ்திர விதியை மீறாதபடி உன் கிட்டே இப்படித்தான் வாங்கிக்க முடியும். புரிஞ்சுதா?"

புரிந்து கொண்ட பக்தர் மெய்சிலிர்க்க, நா தழுதழுக்க, விழிகள் நீர் சுரக்க மகான் திருவடிகளில் விழுந்து நமஸ்கரித்தார்.

பக்தரின் மனம் அறிந்து பரமாசார்யா நடத்திய திருவிளையாடலை நினைத்து சிலிர்த்துப் போனார்கள் எல்லோரும்.

குமுதம்‘ 10.2.2021 பக்.94-97.

இதில் ஒன்றைக் கவனிக்கத் தவறிடக் கூடாது. சமுத்திரம் தாண்டிச் சென்ற அந்தப் பக்தர் யார்? அவர் பெயர் என்ன? ஊர் என்ன? கடலைத் தாண்டி எந்த நாட்டுக்குச் சென்றார்? இது போன்ற விவரங்கள் எல்லாம் எப்பொழுதுமே இருக்காது. உண் மையாக அப்படி நடந்திருந்தால்தானே - அவர் பெயர் என்ன? ஊர் என்ன என்பதை எழுத முடியும்.

தங்கள் சமூகத்து ஆசாமி ஒருவரைத் தூக்கி நிறுத்தி, அந்த ஆசாமி மூலம் பலன் பெறும் பார்ப்பன யுக்தியைப் புரிந்து கொள்வதற்குப் பெரியாரின் ஈரோட்டுக் கண்ணாடி தேவைப்படும்.

மாயா ஜாலங்கள் குறித்து காஞ்சி சங் கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி யின் கருத்து வேறு வகையானது (பெட்டி செய்தி காண்க).

1975ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வு. 1975 ஆகஸ்டு 15இல் சென்னையில் தொலைக் காட்சி தொடக்க விழா. காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் பாதப் பூஜையைப் படம் எடுத்துத் தொலைக் காட்சியில் காட்டிட வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனத்தாரின் துடிப்பு! (அப்பொழுதெல்லாம் அவாள் மயம்தானே!)

படம் எடுக்க முயற்சி செய்தபோது ஆச் சாரியார் மறுத்தாராம். மீறி எடுத்தார்களாம்! விளைவு காமிராக்காரரின் கை விளங்கவில் லையாம் - இந்தச் செய்தியை வெளியிட்டதுதினமணி கதிர்என்னும் புளுகு மணியே (22.8.1975).

அது உண்மையில்லை என்று பிறகு வெளி வந்தது. இப்படித்தான் தங்கள் ஆச் சார்யாள்களைத் தலையில் தூக்கி வைத்து தல புராணங்களை எழுதிக் குவிப்பார்கள்.

அப்பொழுதே தினமணிக்கு உண்மை இதழ் வாயிலாக (1.9.1975 பக்கம் 30) சவால் விட்டோம். ஆச்சாரியாரின் மறுப்பை மீறி நாங்கள் படம் எடுக்க வருகிறோம் - எங்கள் கையை விளங்காமல் செய்யட்டுமே பார்க்கலாம் என்று சவால் விட்டோம்!

தினமணி கதிர்’ 45 ஆண்டுகளுக்கு முன் சங்கராச்சாரியார்பற்றி கயிறு திரித்தது. இப்பொழுது வரதராஜ அய்யங்கார் வசம், வசமாக சிக்கியகுமுதத்தில்ஒவ்வொரு வார இதழும் சங்கராச்சாரியார் பற்றி அற்புத அதிசயங்களை அள்ளிவிட்டுக் கொண்டு உள்ளது.

இந்த வாரதுக்ளக்கில் வெளி வந்த ஒன்று இதோ:

ஆர்.உமா மகேஸ்வரி: உங்களுக்கு இருந்த பார்வைக் கோளாறை, காஞ்சி பெரியவர் சரி செய்ததாகக் கேள்விப்பட் டோம். அது உண்மையா?

பத்மா சுப்ரமணியம்: சிறு வயதிலிருந்தே எனக்கு காஞ்சி மஹா பெரியவரிடம் ஒரு அபரிமிதமான பக்தி உண்டு. ஒரு முறை எனக்கு  கண்ணில்  பிரச்சினை தோன்றியது. திடீரென்று கண் சிவந்து எரிச்சல் தரும். திடீரென்று வரும்; அதுவாகவே போய் விடும். அப்படி கண் சிவக்கும்போது என்னால் எதை யுமே சரியாக பார்க்க முடியாது; படிக்க முடியாது. கிட்டத்தட்ட ஒன்றரை வரு டங்கள் இந்தப் பிரச்சினையுடன் நான் அவதிப்பட்டேன். எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை. இந்தப் பிரச்சினை பற்றி மஹா பெரியவரிடம் சொல்ல வேண்டும் என்றெல்லாம் எனக்கு தோன்றவே இல்லை. ஆனால் ஒரு சமயம் நான் காஞ்சி மடத்திற்கு சென்றிருந்த சமயத்தில், எனக்கு அந்த கண் பிரச்சினை வந்துவிட்டது. அதைத் தூரத்திலிருந்தே கண்டுபிடித்த மஹா பெரியவர் என்னை அருகில் வரச் சொல்லி, என்னுடைய கண்களை நேருக்கு நேராக உற்றுப் பார்த்தார். சொன்னால் எவ்வளவு பேர் நம்புவார்கள் என்று கூட எனக்கு தெரியவில்லை. அதற்குப் பிறகு நான் எந்தவித சிகிச்சையும் எடுக்கவில்லை. ஆனால் என்னுடைய கண் பிரச்சினை சரியாகி விட்டது. இன் றைக்கு வரைக்கும் எந்தப் பிரச்சினை யும் இல்லை. அன்றைக்கும் சரி, இன் றைக்கும் சரி எனது கண்கண்ட தெய்வம் காஞ்சி மஹா பெரியவர்தான்.

('துக்ளக்', 10.2.2021)

சங்கராச்சாரியார் பார்த்த பார்வையி லேயே கண் பிரச்சினை தீர்ந்து விட்டதாம் - சொல்லுகிறார் பார்ப்பன அம்மையார்.

அப்படியானால் சாட்சாத் அதே சங்க ராச்சாரியார் தன் கண்ணுக்கான அறுவைச் சிகிச்சையை சங்கர நேத்ராலயாவில் செய்து கொண்டாரே! அது ஏன்? சங்கராச் சாரியார் பெயரில் (சங்கர நேத்ராலயா) கண் மருத்துவமனை ஏன்? ஏன்?

பார்ப்பனத் தன்மையிலும், சமஸ்கிருதத் திலும் தீரா வெறி கொண்ட பார்ப்பன அம் மையார் பத்மா சுப்ரமணியம் அளித்துள்ள பேட்டியும் இந்த வகையைச் சார்ந்ததே!

இந்தப் பார்ப்பன இனப் பற்று, பார்ப்பனர் அல்லாதாரிடம் இல்லையே - என் செய்வது! அவாள் மாதிரி கற்பனை செய்து தூக்கிப் பிடிக்க வேண்டாம், உள்ளதை உள்ளபடி உரைத்து நம் இன மக்களைச் சீராட்ட வேண்டாமா?

Comments