இந்திய உயர் நீதித்துறையின் பணி வழக்குகளை விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டியதே, வழக்காடிகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்து வைப்பதல்ல!

காலீஸ்வரம் ராஜ்

[மக்களாட்சியில் நடுவராக செயல்படுவதற்கு நீதிமன்றம் மறுப்பது மட்டுமன்றி, தனது உத்திகளை  நிறைவேற்றிக் கொள்வதற்கு அது நிர்வாகத்திற்கு உதவுவதாகவும் இருக்கிறது என்று டேவிட் லண்டேயும்  (David Landau) சோரலிண்ட் டிக்சனும் (Rosalind Dixon)விவரித்திருப்பது போன்றது இது. இந்த நடைமுறையில், அரசின் பல்வேறுபட்ட நியாயமற்ற செயல்பாடுகள் பலவற்றை உச்சநீதிமன்றம் நியாயப்படுத்தச் செய்கிறது.]

ஷகீன்பாக் போராட்டத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட தங்களது முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரிய மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பினை அதன் அரசியல் தொடர்பில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாததாகும். 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதியன்று அளித்த தங்களது தீர்ப்பில், போராட்டம் நடத்துவதற்கான உரிமை முழுமையான உரிமை அல்ல என்றும்,  அது மேற்கொள்ளப்பட வேண்டிய இடம் காலம் ஆகியவை உரிய அரசு அதிகாரிகளின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டது என்றும், அந்தத் தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இத்துடன் தொடர்புடைய சட்ட மற்றும் அரசமைப்பு சட்டப் பிரச்சினைகளைப் பற்றி சிந்திப்பது ஒரு பக்கமிருக்க,  சுதந்திரத்துடன் தொடர்புடைய இது போன்ற அடிப்படைக் கேள்விகளைக் கையாளும்போது உச்சநீதிமன்றம் கடைப்பிடிக்கும் ஒழுக்க நன்னெறி பற்றிய விவாதத்திற்கு வழி வகுப்பதாக அது இருக்கிறது.

போராட்டங்கள் ஓர் அரசியல் சவாலே ஆகும் 

இந்த இரு தீர்ப்புகளுமே, தெருப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது வெளி வந்தவையாகும்.  இந்த தீர்ப்புகளின் கருத்துருவாக்கத்தின்படி, எந்த நேரத்தில் வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் போராட்டங்களை மேற்கொள்வது அவ்வளவு எளிதானதல்ல. குடியுரிமை திருத்த சட்டமும், வேளாண் சட்டங்களும் அவற்றுக்கு எதிராகப் போராடிய போராட்டக்காரர்களை மிகமிகப் பெரிய அளவிலான துன்பங்களை எதிர்கொள்ளச் செய்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில்,  நாடு முழுவதையும் இந்த சட்டங்கள் கவலை கொள்ளச் செய்துள்ளன என்று தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஒரு கொள்கைக்காக, ஒரு குளிர்காலப் பருவம் முழுவதிலும் அந்தப் போராளிகள் கடுந் துன்பங்களை அனுபவித்தனர். இந்தக் கொள்கைக்காகப் போராடுவதில் அவர்கள் மிகப் பெரிய விலை ஒன்றை கொடுக்க வேண்டியதாக ஆயிற்று. சற்றும் கருணையே இன்றி, கொடிய துன்பம் தரும் தேசத் துரோகக் குற்றம் மற்றும் தீவிரவாதச் செயல்பாடுகளில் ஈடுபட்ட குற்றச் சாட்டுகளின் கீழ் அவர்களில் பலர் மீது வழக்குகள் தொடுத்து அரசு துன்புறுத்தி வருகிறது. போராட்டக்காரர்கள் மீது மட்டுமன்றி, அவர்களுக்கு ஆதரவு அளித்த நகைச் சுவை நடிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் அரசின் இந்த நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க விடப்படவில்லை. கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் முதற்கொண்டு, அமைதியாக ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்து செயல்படும் சுதந்திரம் வரை, இந்திய அரசமைப்பு சட்ட 19 ஆவது பிரிவின் கீழ் உறுதி அளிக்கப்பட்டிருக்கும் அனைத்து சுதந்திரங்களுக்கும் மிகப் பெரிய அளவிலான இடையூறுகள் நேர்ந்தன.

அந்தோலன் என்னும் மிகுந்த தீவிரம் கொண்ட குற்றமான, முரண்பட்ட கருத்துக்களை வெளிப் படையாக தெரிவித்த குற்றத்துக்காக இன்னமும் சிறையில் வாடிக் கொண்டிருப்பவர்கள் பலர் இன்றும் உள்ளனர். 22 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலரான தீஷா ரவி என்பவர் அண்மையில், அரசுக்கு எதிராக சதித் திட்டம்  தீட்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சியினருக்கு எதிராக விடப்படும் ஓர் அரசியல் சவாலாக இந்தப் போராட்டங்கள் விளங்குவதால், அது போன்ற தேவையற்ற அப்பாவிகள் கைது செய்யப்படும் செயல்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன.  அதாவது இந்தப் போராட்டங்கள் எல்லாம் அரசுக்கு எதிரான அரசியல் சவால்கள் என்ற இந்தக் கருத்தை,  சந்தர்ப்ப சாட்சியங்களின் விவரங்களுடன்  நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

பிரச்சினைகள் மிகுந்த சமன்படுத்துதல் என்ற செயல்பாடு 

ஷகீன்பாக் போராட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் பற்றி, மிகமிக முக்கியமான கேள்வி ஒன்றை ஒரு குடிமகனால் எழுப்ப முடியும். போராட்டத்திற்குக் காரணமான பிரச்சினைகள் பற்றியதொரு விசாரணையை உரிய காலத்தில் நீதித்துறை மேற்கொள்ளத் தவறியதன் காரணமாகவே, அந்தப் போராட்டங்கள் தெருவுக்கு வரவேண்டிய ஒரு கட்டாய நிலைமை எழுந்தது. இந்தியாவில் அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து மிகப் பெரிய போராட்டங்களுமே, அது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது பற்றியதாக இருக்கட்டும், அல்லது   குடியுரிமை திருத்த சட்டமாக இருக்கட்டும் அல்லது வேளாண் சட்டங்களாக இருக்கட்டும்,  அரசமைப்பு சட்டப்படி இச்சட்டங்கள் செல்லத் தக்கவைதானா என்று விசாரித்து, பரிசீலித்து உடனடியாக தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டிய பிரச்சினைகளாகும். தேவையற்ற, அளவுக்கு அதிக அளவிலான அதிகாரத்தை பிரயோகிக்கும் நிருவாகத்தைப் பற்றியும்,   பெரும்பான்மையினருக்கு எதிராக நாடாளுமன்றம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும், பரிசீலனை செய்து அரசமைப்பு சட்டப்படியான தனது கடமையை ஆற்றுவதை  உச்ச நீதிமன்றம் உறுதிப் படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய உச்ச நீதிமன்றம்  தவறிவிட்டது. அதற்கு மாறாக,  ஷகீன் பாக் வழக்கு ஆணையின் வழியில், மற்ற போராட்டங்களுக்கும் சமன் செய்வது (மத்தியஸ்தம் செய்வது) என்ற வழியில் தீர்வு காண்பதற்கு மேற்கொண்டிருக்கும் நீதிமன்றத்தின் முயற்சிகளைத் தொடர்ந்து,   அதனால் பதில் கூற இயன்ற அளவுக்கும் அதிகமான கேள்விகளை உச்சநீதிமன்றம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஷகீன்பாகின் முதல் அசல் தீர்ப்பில்,  இந்தப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதற்கான முயற்சியை மேற்கொண்ட உச்ச நீதிமன்றத்தினால் எந்த விதத் தீர்வையும் ஏற்படுத்த இயலாமல் போயிற்று. விசாரணையின் போது நீதிமன்றத்தின் கடமை விசாரணை நடத்தி நீதி வழங்குவதுதானே அன்றி, வழக்காடிகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்வது அல்ல. மத்தியஸ்தம் செய்யும் அணுகுமுறை, உறுதியான நீதி மன்றத் தீர்ப்புக்கு சரியான மாற்றாக இருக்க முடியாது. நிருவாகத் துறையின் ஒரு நீட்சியாகவே நீதித்துறை இருக்கிறது என்பது போலவே செயல்பட்டு வழங்கிய அந்த தவறான தீர்ப்பை, முட்டாள்தனத்தைத் திருத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பை உச்சநீதிமன்றத்துக்கு மறுசீராய்வு மனு அளித்திருந்தது. ஏறக்குறைய ஒரு உள்நாட்டு நெருக்கடி என்ற அளவில் நிலவிய ஒரு அரசியல் சூழலில் இருந்து ஒரு சோதனை அளவிலான பாடத்தை உச்ச நீதிமன்றம் பெற்றிருக்க முடியும்.

அரசமைப்பு சட்ட நீதிமன்றங்களில் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு தத்துவம்தான் அரசமைப்பு சட்டப்படியான நன்னெறி ஒழுக்கம் என்பதும். இந்த தத்துவத்தை தனிப்பட்ட நபர்கள் அளவில் அல்லாமல் அமைப்புகளின் அளவிலேயே பி.ஆர். அம்பேத்கர் பயன்படுத்தியுள்ளார். சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையில், இந்த சட்டங்கள் அரசமைப்பு சட்டப்படி செல்லுமா அல்லது செல்லாதா என்பது பற்றிய ஒரு தீர்ப்பு உரிய காலத்தில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்தால்,  தெருக்களில் போராளிகள் பட்ட துன்பங்கள் எல்லாமே தேவையற்றவையாக ஆகிப் போயிருக்கும்.

நியாயமாக சிந்தித்து பயன் நிறைந்த அளவில் செயல்படுதல் 

நியாயமான, பயன்நிறைந்ததொரு நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்கும் ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால்,  தெருப் போராட்டங்களை அர்த்தம் நிறைந்ததொரு வழியில் அது தடுத்து நிறுத்தியிருக்கும். நியாயமான நீதிமன்ற வழக்குகளின் மூலம் பிரச்சினைகளுக்கு பயன் நிறைந்த வழியில் தீர்வு காணமுயற்சிக்கும் போது, சமூக இயக்கங்களும் அதிக அளவில் தீவிரமாக செயல்படாதவர்களாகவும், குறைந்த அளவில் மட்டுமே எதிர்ப்பைத் தெரிவிப்பவர்களாகவும் இருக்கின்றனர் என்பதை பல ஆய்வுகளின் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன. இங்கிலாந்து நாட்டில் மேற் கொள்ளப்பட்டிருக்கும் பசுமைப் புரட்சி, இதர மேற்கு அய்ரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அதிக வேகமான செயல்பாட்டில் இருக்கிறது என்றும், சமூக இயலாளர் லூக் மார்டெல் (Luke Martel) கூறுகிறார். இதன் காரணம், இங்கிலாந்து நாட்டில் உள்ள பொது விசாரணை நடைமுறை மூலமாக, சுற்றுச்சூழல் கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவற்றை அரசியல் நடைமுறையுடன் ஒன்றிணைக்கவும்,  ஒதுக்கி வைப்பது, ஓரங்கட்டுவது போன்ற காரணங்களால் இயக்கங்களில் ஏற்பட இயன்ற தீவிரவாத மனப்பான்மையைக் குறைக்கவும் இயலும் என்பதுதான். இந்தக் கொள்கை அரசமைப்பு சட்டப்படியான ஜனநாயக நாடுகளில் பின்பற்றத் தொடங்க இயலக் கூடும்.

போராடுவதற்கான உரிமையுடன் சாலைகளில் செல்வதற்கான உரிமையை சமன்படுத்துவது என்ற பாடப் புத்தகக் கோட்பாட்டை, அரசமைப்பு சட்டப்படியான இன்றைய சூழ்நிலையில் வலியுறுத்த வேண்டிய தேவை ஏதும் இல்லை. ஒரு சாதாரணமான இந்தியக் குடிமகனுக்கு அச்சம் கொண்டிருப்பது என்பதே ஒரு புதிய சாதாரணமான நிலை என்று இருக்கும்போது, நீதிமன்றத்தின் ஒரே வேலை, கருத்து வேறுபடும் உரிமைக்குப் பாதுகாவலனாக செயல்படுவது ஒன்று மட்டும்தான்.

பொது இடங்களைக் காலவரையின்றி ஆக்கிரமித்திருப்பதற்கு எதிராக, போராட்டம் என்னும் சட்டப்படியான குரலில் கொடுஞ்செயல்களை நடத்துவ தற்கான உரிமத்தைக் காவல் துறையிடமிருந்து பெற்றிருப்பது மெய்ப்பிக்கப்படலாம் என்று தங்களது முந்தைய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு இருப்பதை, இந்த சீராய்வுமனுவில் மிகச் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சீராய்வு மனுவையும் நிராகரித்ததன் மூலம், மற்றொரு நியாயமற்ற அரசியல் சூழ்நிலையில், தாராள மனமற்ற அரசின் அச்சுறுத்தும் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் மீண்டும் வலி யுறுத்துவ தாகவே இருக்கிறது. முந்தைய கண்ணோட்டத்தை உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியிருப்பது,  உணர்ச்சியே அற்றதுவோ அல்லது நம்பமுடியாத விந்தையாக இருப்பதுவோ அல்ல. நீதித்துறையின் மறுசீராய்வு மனு நடை முறையைத் தவறாகப் பயன்படுத்தும் ஒரு நிகழ்வை எடுத்துக்காட்டுவதாக உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு உள்ளது.

மக்களாட்சியில் நடுவராக செயல்படுவதற்கு நீதிமன்றம் மறுப்பது மட்டுமன்றி, தனது உத்திகளை  நிறைவேற்றிக் கொள்வதற்கு அது நிருவாகத்திற்கு உதவுவ தாகவும் இருக்கிறது என்று டேவிட் லண்டேயும்  (David Landau) சோரலிண்ட் டிக்சனும் (Rosalind Dixon)  விவரித்திருப்பது போன்றது இது. இந்த நடைமுறையில், அரசின் பல்வேறுபட்ட நியாயமற்ற செயல்பாடுகள் பலவற்றை உச்சநீதிமன்றம் நியாயப்படுத்தச் செய்கிறது.

அரசின் குறுக்கீடுதான் ஒரு மாபெரும் கவலையாகும்  

ஹிமாட்லால் கே.ஷா வுக்கும் காவல்துறை ஆணையருக்கும் இடையேயான 1972ஆம் ஆண்டு வழக்கில் உச்சநீதிமன்ற அரசமைப்பு சட்ட அமர்வு அளித்த தீர்ப்பினை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த போதிலும், அதனை முறையாகப் பாராட்டி, அந்த விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்வதற்கு ஒரு கருத்தை அதன் நிகழ்வு, செயல்பாட்டுடன் தொடர்புபடுத்திப் பொருத்திப் பார்ப் பதற்கு, தனது 2020ஆம் ஆண்டு தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் செய்யத் தவறிவிட்டது. உரிமைகள் களத்தில் அரசு குறுக்கிடுவதுதான் நீதிமன்றத்தை அதிக அளவில் கவலைப்பட வைக்க வேண்டியதாகும்.  ஹிமாட்லால் கே.ஷா வழக்கின் தீர்ப்பில், பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை காவல்துறை அதிகாரிகளுக்கு மிகமிக அதிக அளவில் வழங்குவதற்கு ஏற்றவாறு அகமதாபாத் காவல்துறை கண்காணிப்பாளருக்கு  யதேச்சதிகாரம் அளித்து விதிகள் உருவாக்கப் பட்டுள்ளன என்பதால் அந்த விதிகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது . அது மட்டுமன்றி, ஹிமாட்லால் கே.ஷா வழக்கில்,  மக்கள் கூடிப் பேசுவதற்கான சுதந்திரம் மக்களாட்சி நடைமுறையின் ஓர் இன்றியமையாத கூறு என்றும் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்திக் கொள்ளவும், கருத்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதற்கும் பொது வீதிகள்தான் இயல்பான இடங்கள் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குட்டியில் குமரன் மாத்யூ (Justice kuttyl Kurien Mathew) தெரிவித்துள்ளார்.

இந்த மறுசீராய்வு மனு வழக்கில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது அந்த மனு மட்டுமல்ல; நீதி மன்றமும் கூடத்தான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

நன்றி: 'தி இந்து' 19.02.2021

தமிழில்: ..பாலகிருட்டிணன்

Comments