அரிமா நோக்கு - “அய்ரிஷ் பார்ப்பனத்தி”

இந்தியத் துணைக்கண்டத்தில் சென்னை மாகாணம் பார்ப்பனர்களின் பிடியிலும், ஆதிக்கத்திலும் அகப்பட்டு பரலோக வாழ்வு பற்றிய சிந்தனையே மேலோங்கி கிடந்தது. படிக்கும் வாய்ப்பை பெற்றிருந்த பார்ப்பனர்களும், அதிகார வெறிபிடித்து பதவிக்காக அலைந்து கொண்டிருந் தனர். பார்ப்பனர் அல்லாதாரில் படித்தவர்கள் பார்ப்பனர் களுடன் மோதி, பார்ப்பனர் அல்லாதாரின் மேம்பாட்டுக் காக பணி செய்வதில் ஈடுபட்ட நிலை. சமூகம் சீர்திருந்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பாடுபட யாரும் இல்லாத நிலைதான் தந்தை பெரியார் பொதுவாழ்க்கைக்கு வரு வதற்கு முன்பு வரை.

அந்த காலகட்டத்தில் ஆந்திரப் பார்ப்பனர் வீரேசலிங்கம் சமூக சீர்த்திருத்த பணியில் ஈடுபட்டார். தமிழ் பகுதியில் யாரும் இல்லை. சென்னை அடையாறில் பிரும்ம ஞான சபை எனப்படும் அமைப்பு இயங்கியது. அதன் தலைவராக 1907இல் அன்னிபெசன்ட் எனும் அயர்லாந்து நாட்டு பெண் இருந்தார். 1847இல் லண்டனில் பிறந்த இவர், பாதிரியார் ஒருவரை மணந்தார்.

மணவாழ்க்கை வெற்றி பெறாத நிலை. நாத்திக நன்னெறியே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார். கடவுளின் பெயரால் பதவியேற்பு உறுதிமொழி எடுக்க மறுத்துக் கிளர்ச்சி செய்து இறுதி வெற்றியை ஈட்டிய சார்லஸ் பிராட்லாவின் நண்பராகி மதமற்ற கொள்கையைக் கொண்டார். 1874இல் நேஷனல் செக்யுலர் சொசைட்டியில் இணைந்தார். இதன் தலைவர் பிராட்லா. 1885இல் சமதர்மக் கொள்கையுள்ள ஃபேபியன் சொசைட்டியில் சேர்ந்தார். 1889இல் பிரம்மஞான சபையால் கவரப்பட்டார். மறு ஆண்டே ஜோசியம், மந்திர தந்திரங்களில் ஈடுபட்டார். இப்படிப்பட்ட குழம்பிய மனநிலை கொண்டவர் இந்தியா வுக்கு வந்து, சென்னையில் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டு பெயர் ஈட்டினார். 1893 ஆண்டு முதல் 1907 வரை இந்தியாவுக்கு வெளியே பிரம்ம ஞானத்தை பரப்பும் பணியில் செலவழித்தார். இந்தியாவுக்கு வரும் போது காசியில் காலத்தைக் கழித்தார். அங்கே மத்திய ஹிந்து கல்லூரியை 1898இல் ஏற்படுத்தினார். 1907இல் பிரம்மஞான சபையை ஏற்படுத்தித் தலைவராக இருந்த கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் இறந்தார்.  அன்னிபெசன்ட் அம்மையைத் தலைவராக்கிட ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி தலைவரானார்.

இந்தியர்களின் கடந்தகாலப் பெருமைகள், நிகழ்காலக் கடமைகள் போன்றவற்றை தெரிந்து, தெளிந்தவர் போல் பிரசங்கங்கள் பொழிந்தார். ஆரியர்கள் வகுத்த முறைதான் ஜாதிப் பிரிவுகள் என்றார். ஆனால் அவை நீடிக்க வேண்டும் என பேசினார். தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களே (ஸ்மார்த்தப் பிரிவு) அவருக்கு நண்பர்கள். 1915 செப்டம்பரில் ஹோம் ரூல் எனும் அமைப்பை தொடங்கினார். சி.பி.ராம சாமி அய்யர், .ரங்கசாமி அய்யங்கார் போன்றோரை தொடர்புகொண்டு கூட்டங்கள் நடத்தினார். பிரிட்டிஷ் அரசைத் தாக்கினார். அரசின் நடவடிக்கைகள் பாய்ந்தன. பெரிய போராட்ட வீரர் போல் காட்டிக் கொண்டு மக்களின் அனுதாபத்தை கவர்ந்திட முயற்சித்தார். சேலம் பி.வரதராஜுலு நாயுடு ஹோம் ரூல் இயக்கத்தில் சேர்ந்து தமிழில் சொற்பொழிவாற்றினார். கொஞ்சம் செல்வாக்கு கூடியது. ஆனாலும் அரசு அவர்களின் அரசியல் நடவடிக்கைகளைத் தடை செய்தது.

பார்ப்பனர்களின் கூட்டுறவின் விளைவாக, இந்துமதப் புராண, இதிகாச, சாஸ்திரங்களின் பெருமையை அன்னி பெசன்ட் பேசினார். அவற்றின் பொய்மையையும் பார்ப் பனரல்லாதார்க்குச் செய்யும் துரோகத்தையும் பார்ப்பன ரல்லாதார் கண்டனம் செய்து அம்பலப்படுத்திடும் வேளையில் அன்னிபெசன்ட்டின் செயல்கள் எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல் ஆனது. அந்த நேரத்தில் மதுரையில் ராவ்பகதூர் விருது பெற்ற ஒருவருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் பார்ப்பனருக்குத் தனியாகவும் பார்ப்பனரல்லாதாருக்கு தனியாகவும் 100 கெஜ தூரம் விட்டு நாற்காலி, மேசைகள் போடப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. விருந்தில் ஜாதிப் பாகுபாடு காட்டும் ஹோம் ரூல் காரர்கள், வாழ்வில் எப்படி அனுசரணையாக நடந்துகொள்வார்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. பெசன்ட்டுக்கு எதிர்ப்பு வலுப்பெற்றது.

அவருடைய பிரம்மஞான சங்கத்தில் பல்வேறு ஒழுங்கீனங்கள் நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்தது. டாக்டர் டி.எம்.நாயர் நடத்திய ஆங்கில வார ஏடு ஆன்டிசெப்டிக்கில் ஒரு செய்தி. சார்லஸ் லீட்பீட்டர் என்பவர் தன் சீடர்களான சிறுவர்களிடம் நடந்துகொண்ட ஒழுக்கக் குறைவான பாலியல் வக்கிரங்களை அக்கட்டுரை விவரித்தது. அமெரிக்கச் சிறுவனிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில் அந்த ஆள் பதவியை விட்டு விலகினார். இரண்டு ஆண்டுகள் கழித்து தோஷம் இல்லாதவனாக ஒருவனைத் தேர்ந்தெடுத்தனர். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எனும் பெயர். ஆந்திரப் பார்ப்பனர். டாக்டர் நாயரின் கட்டுரையை தி ஹிந்து ஏடு பெரிய அளவில் மறுபிரசுரம் செய்தது. பையனின் தந்தை பெசன்ட் மேல் வழக்கு தொடர்ந்தார். பிரம்மஞான சங்கத்தின் மீதும் வழக்கு. தன் மகனை தன்னிடம் திரும்பத் தருமாறு கோரிக்கை. பெசன்ட்டின் பெயர் கெட்டுப் போனது. மேலும் நீதிக்கட்சி ஏடுகளான ஜஸ்டிஸ், திராவிடன், ஆந்திரப் பிரகாசிகா நாள்தோறும் எழுதித் தாக்கின. ஹோம் ரூல் என்பது பார்ப்பனர் ரூல் என்பதே என்பதை அம்பலப்படுத்தின. பெசன்ட்டின் அமைப்பில் கடைப்பிடிக்கப்படும் ஜாதிப் பாகுபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டன. ஆங்கிலேயரை அன்னியன் எனக்கூறும் பெசன்ட் ஆரியப் பார்ப்பனர்கள் அவர்களைக் காட்டிலும் அன்னியர்கள் என்பதை மறைப்பது ஏன் எனக் கேட்கப்பட்டது. “பெசன்ட் அய்ரிஷ் பார்ப்பனத்திஎன்றே எழுதப்பட்டது.

அயர்லாந்திருந்து இந்தியாவுக்கு வந்து, ஹிந்து மாணவர் சங்கம், ஹிந்து இளைஞர் சங்கம், ஹிந்து கல்லூரி என்றெல்லாம் தொடங்கியவர். ஹிந்து மதத்தின் மட்டமான கொள்கைகளைப் பெருமைப்படுத்தி எழுதி, ஹிந்து கர்வம் கொள்ளச் செய்ததன் மூலம் பார்ப்பனர்களின் நண்பராகவும் தோழராகவும் ஆனார். அதைவிடவும் மோசம், பார்ப்பனர் அல்லாதாரின் எதிரியானார். மக்கள் தொகை யில் 86 விழுக்காடு இருப்பவர்களை வெறுத்து, 3 விழுக் காட்டினரின் நலனுக்காக உழைத்தவராகக் காட்டிக் கொண்ட கபட வேடதாரி. கிருத்துவர், மதச்சார்பற்ற பகுத் தறிவாளர், சமதர்மவாதி, மந்திர தந்திரங்களை நம்பியவர். ஜோசியம் போன்ற மூடத்தனங்களில் நம்பிக்கை கொண் டவர். இந்தியர்களை அடிமைப்படுத்தி ஆண்ட நாட்டி லிருந்து வந்து ஆட்சியாளர்களை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்ட பல வேஷம் போட்டவர், போராட்டங்கள் தான் ஒரே வழி என முழக்கம்  எழுப்பிப் புரட்சியாளராகக் காட்டிக்கொண்ட சனாதனி, ஒழுக்கம் கெட்ட மத அமைப் பின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் எனத் தூற்றப் பட்டவர் அன்னிபெசன்ட்.. அனைத்திற்கும் மேலாக, தோல் வர்ணத்தின் காரணமாக மேல் வருணம் எனக்கூறி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனப் பற்றாளர், பாதுகாவலர். பார்ப்பனர் அல்லாதாரின் நலனுக்கு எதிராகப் பேசி, எழுதி, நடந்துகொண்ட சுயநலவாதி. விளம்பரம் விரும்பி. காங்கிரசில் சேர்ந்து, தலைமைப் பதவியையும் கைப்பற்றி ஏகாதிபத்ய எதிர்ப்பாளர் போல் நடித்தவர். ஆபே டியுபாவால் வஞ்சக நரி எனவும் வன்கணநாதன் எனவும் இக(புக)ழப்பட்ட பார்ப்பனரின் நட்பில் தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட சந்தர்ப்பவாதி.

 நாட்டை ஆண்ட பிரிட்டிஷாருக்கும் பார்ப்பனர்களின் வல்லாண்மை பற்றிய அனுபவம் இருந்தது. அதனால் 1854இல்  ஓர் ஆணை பிறப்பித்தனர். வருவாய் வாரிய நிலை ஆணை எண் 128(2)இன் படி காலிப்பணியிடங்கள் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டனர். ஆனால் அதிகாரிகள் அதனைக் கடைப்பிடிக்காமல் இருந் தனர். 1871இல் கார்னிஷ் எனும் சென்சஸ் கண்காணிப்பாளர் இவ்வாறு கூறினார். நாட்டின் நலன் கருதி செயல்படும் நடவடிக்கைகள் பார்ப்பனக் கண்ணாடி கொண்டு பார்க்கப்பட்டதாக இருக்கக்கூடாது என்றார். பார்ப்பனப் பணியாளர் எண்ணிக்கை அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே இருக்க வேண்டும் என்றார். எல்லா அதிகாரிகளும் அதை கடைப்பிடிக்கவில்லை. இந்நிலையில் அன்னி பெசன்ட் பார்ப்பனர் பக்கம் சாய்ந்து பேசிச் செயல்பட்டார். பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு இது கோபத்தை ஏற் படுத்தி அவருக்கு எதிராக செயல்பட வைத்தது. சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவு நிகழ்த் திய ஜஸ்டிஸ் சி.சங்கரன் நாயர், வர்ணப் பிரிவினையும் ஜாதிகளும் ஒழிக்கப்படாத வரை அரசியல் முன்னேற்றம் எவ்வித பலனையும் அளிக்காது என்று 1908இல் குறிப் பிட்டார்.

அதையொட்டியே 1916இல் தொடங்கப்பட்ட தென்னிந் தியர்  நல உரிமைச் சங்கம் வெளியிட்ட பார்ப்பனர் அல்லா தார் கொள்கைப் பிரகடனத்தில் கல்வி கற்றலின் முக்கியத் துவம் வலியுறுத்தப்பட்டது. பார்ப்பனப் பெண்களைக் காட்டிலும் பார்ப்பனரல்லாத நாயர் பெண்கள் அனைவரும் படித்துள்ளதை எடுத்துக்காட்டி பெண் கல்வி வலியுறுத்தப் பட்டது. அந்த அடிப்படையில் பெசன்ட் கூறிய ஹோம் ரூல் நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலர் ஆட்சியில் துலாக் கோல் நியாயமாகவும் சரியாகவும் பிடிக்கப்பட்டது. அப்பம் பங்கிடும் குரங்கு வந்ததைப்போல், அன்னிபெசன்ட்டின் வருகையும் நடவடிக்கைகளும் பார்ப்பனர்களுக்கு நல்லது செய்யும் என்பதை டாக்டர் நாயர் 14.3.1917இல் சென்னை விக்டோரியா மன்றத்தில் முத்தியால்பேட்டை முஸ்லிம் அஞ்சுமான் சார்பில் நடத்தப்பெற்ற கூட்டத்தில் குறிப் பிட்டார். தொலைநோக்குப் பார்வை கொண்ட நீதிக்கட்சித் தலைவர்களின் தன்னலமற்ற தொண்டுகளின் விளைவே, இன்றைய பார்ப்பனரல்லாதாரின் வாழ்வு.

Comments