பின்வாங்கிய பிரதமர்!
மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் பங்கேற்க முதலில் இசைவு தந்த பிரதமர் மோடி, பிறகு மறுத்துவிட்டார்.
மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் சிறந்த கல்வியாளர் - அவர் எழுதிய ஒரு நூல் அண்மையில் வெளிவந்தது - அதில் பல உண்மைகளை வெளிப்படுத்தி இருப்பதால், பிரமதர் பின்வாங்கி இருக்கக் கூடும்.
எல்லாம் அவாளின் கேந்திரமாச்சே!
மத்திய நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு கடந்த ஆண்டைவிட ரூ.5000 கோடி குறைவு. கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கோ கடந்த ஆண்டைவிட ரூ.1,200 கோடி கூடுதல் ஒதுக்கீடு.
கேந்திர வித்யாலயா என்றால் பெரும்பாலும் அவாள்தான். ஹிந்தி... இத்தியாதி... இத்தியாதியாச்சே!
எங்கேயோ உதைக்குதே!
அரசு கொள்கைப்படி 1000 டாஸ்மாக் கடைகள் மூடல். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 3,300 கடைகள் மூடல். இதன்படி மொத்த கடைகள் இருக்கவேண்டியது 2000. ஆனால், இருப்பதோ 5,200 கடைகள்.
ஆமாம் - எங்கேயோ உதைக்குதே கணக்கு!
போதை விடயமாயிற்றே! கூட்டிக் கழித்தா இதுதான் கணக்கு!
இந்தியர் மயம்!
அமெரிக்க நாசாவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பவர் பவ்யாலால் என்பவர் வெள்ளை மாளிகையில் நியமனம் செய்யப்பட்டார்.
பரவாயில்லையே, அமெரிக்காவின் முக்கியப் பொறுப்புகளில் எல்லாம் இந்தியர்கள் நியமனம் அதிகரிப்பு!
அர்ப்பணம்!
பாகிஸ்தானில் சிந்து மாகாணம் அய்தராபாத் நகரில் 126 ஆண்டுகள் பழைமையான சிவன்கோவில் புனரமைப்பு!
பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு ‘அர்ப்பணம்!'
எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான்!
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்காக செலவழிக்கப்படுவது வெறும் 3 புள்ளி 1 விழுக்காடே; 6 விழுக்காடு ஒதுக்கப்பட வேண்டும் என்று 1968 முதல் ஒவ்வொரு தேசிய கல்விக் கொள்கையும் (NEP) கூறிக் கொண்டுதான் இருக்கிறது.
சூத்திரர்களும், பஞ்சமர்களும் நூற்றுக்கு நூறு படித்துவிடலாமோ!
யார் பொறுப்பு?
1500 டன் தானியங்கள் இந்திய உணவு கார்ப்பரேஷன் கிடங்குகளில் சேதம்!
அதானியிடம் வேளாண்மை சென்றால் இது தவிர்க்கப்படும் என்பார்களோ! இந்த சேதத்துக்கு யார் பொறுப்பு என்று கண்டுபிடித்து, உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் அல்லது தண்டம் வசூலிக்க வேண்டும்.
வரவேற்கத்தக்கது!
சிவகங்கை மாவட்டம் - மானாமதுரை கிராமத்தில் மதுக்கடைகள் கிடையாது.
மதுவுக்கும்,
மானாமது(ரை)க்கும் இடையே வரவேற்கத்தக்கப் பகை!
தொட்டிலை ஆட்டும் கை!
13 ஆண்டுகள்இந்தியப் பெண்கள் கூடைப் பந்து அணியின் கேப்டனாக அனிதா பால்துரை - இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
இரு குழந்தைகளுக்குத் தாயானவர் இவர். தொட்டிலை ஆட்டும் கை, தொல்லுலகை ஆளும் கை!
அய்.நா.வுக்குச் சென்றிருப்பாரே!
புதுக்கோட்டை - வாராப்பூரைச் சேர்ந்த 10 வயது சிறுமி நிஷாந்தினி தவில் வாசிப்பதில் சும்மா வெளுத்துக் கட்டுகிறார்.
பொதுவாக தவில், நாதசுரம் போன்ற கடின உழைப்புத் தேவைப்படும் கலைகளின் பக்கம் பார்ப்பனர்கள் தலைகாட்டமாட்டார்கள். இந்த 10 வயது பெண் மட்டும் அக்ரகாரத்தில் பிறந்திருந்தால் அய்.நா.வில் வாசிக்கச் செய்திருக்கமாட்டார்களா?
எச்சரிக்கை!
நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தால் மீண்டும் கரோனா தொற்றும்!
கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கை இது!
தூங்குவது நிஜமா?
புதுச்சேரி ஆளுநர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் முதலமைச்சர்
வி.நாராயணசாமி அவர்கள் தலைமையில் பட்டினிப் போராட்டம்!
அடாவடித்தனம் செய்வதற்கேன்றே மத்திய பா.ஜ.க. அரசால் செய்யப்பட்ட ஏற்பாடு - நிஜமாகத் தூங்குவோரை எழுப்பலாம் - தூங்குவது போல பாசாங்கு செய்பவரை எழுப்புவது கடினமே!