'கவிக்கொண்டல் ' மானமிகு மா. செங்குட்டுவன் மறைந்தாரே!


'கவிக்கொண்டல்' மா.செங் குட்டுவன் நேற்று (5.2.2021) மாலை 5.30 மணியளவில் மறைந்தார் என்பது அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

மாணவர் பருவத்திலேயே தந்தை பெரியாரால், திராவிட இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டு தனது 93ஆம் வயது வரை சுயமரியாதைக்காரராக, திராவிட இயக்கத் தீரராக வாழ்ந்து மறைந் தவர் 'கவிக்கொண்டல்' மானமிகு மா. செங்குட்டுவன் அவர்கள் ஆவார்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் இவர்களின் அன்புக்கும், நன்மதிப்புக்கும் உரியவராக வாழ்ந்தவர்.

'விடுதலை', 'நம் நாடு', 'மாலை மணி', 'நவமணி', 'தனியரசு', 'மன்றம்', 'மும்பை தமிழின ஓசை' முதலிய ஏடுகளில் பணியாற்றி முத்திரை பதித்தவர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் "கலைமாமணி விருது", "புரட்சிக் கவிஞர் பாவேந்தர் விருது" பெற்ற சிறப்புக்குரியவர். திராவிடர் கழகத்தின் சார்பில் "பெரியார் விருதும்" அளிக்கப்பட்டவர்.

'கவிக்கொண்டல்' இதழை நீண்ட காலம் சிறப்பாக நடத்தியவர். வெளிநாடுகள் உட்பட பல கவியரங்கங்களில் பங்கு பெற்றவர். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பெரியார் திடலுக்கு வந்து நம்மோடு உரையாடத் தவறாதவர்.

அவர்தம் பிரிவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல - திராவிட இயக்கத்திற்கே ஏற்பட்ட இழப்பாகும். அவரது அன்பு மகன்கள் அன்பரசு, மதிவாணன், புகழேந்தி, முத்துச்செல்வன் ஆகியோருக்கும் மற்றும் அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், திராவிட இயக்கத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கிவீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை

6-2-2021

குறிப்பு: இன்று மாலை 4 மணியளவில் சென்னை பீட்டர்ஸ் சாலை ஆனந்த் குடியிருப்பிலிருந்து (நியூ கல்லூரி எதிரில்) இறுதி ஊர்வலம் புறப்பட்டு மயிலாப்பூர் இடுகாட்டில் இறுதி நிகழ்ச்சி நடைபெறும். 

Comments