ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று, கோவில், பூங்கா, சுற்றுலா தலங்களுக்கு வரும் காதலர்களிடம் மேற்கத்திய கலாச்சாரம் வேண்டாம் எனக் கூறி அவர்கள் மீது  தாக்குதல் நடத்துவது என்பதை ஹிந்துத்துவா அமைப்பினர் ஒவ்வொரு ஆண்டும் செய்கின்றனர். ஆனால், இது போன்ற மேற்கத்திய கலாச்சாரமான ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவில் இந்து கோவில்களில் நடை திறந்து  சிறப்பு பூஜைகள் செய்யக்கூடாது என கூறும் ஹிந்துத்துவா அமைப்பினர் நள்ளிரவில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மீதோ, அர்ச்சகப் பார்ப்பனர்கள் மீதோ தாக்குதல் நடத்தாமல் பத்திரிகைகளில் அறிக்கை விடுவதுடன் நின்று விடுகின்றனரே?

- மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில்: நண்பர் சித்து அவர்களே, வன்முறையைத் தூண்டியதாகவும், ’பிராமணாள் துவேஷம் - மகாபாத கம் என்ற மனுதர்ம வழக்கும், உம்மீது பாயப்போகிறது! ஜாக்கிரதை!

கேள்வி:  பள்ளிகள் தொடர்ந்து மூடிக் கிடந்தால், பள்ளிக்கு வர வேண்டிய பிள்ளைகளின் எண்ணிக்கை யில் பெரும் குறைவு ஏற்படும் என்று யுனிசெப் எச் சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்திலும் அத்தகைய சூழல் இருப்பதாக கல்வியாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையை எப்படி வெல்வது?

- மு.காசிராஜன், நெல்லை

பதில்: இப்போதே 98.4 சதவிகிதம் மாணவர்கள் பள்ளிக்கு, பெற்றோர்களின் அனுமதியோடு வருகின்ற னர். பள்ளி வாழ்க்கையையே மாணவர் சமூகம் பெரி தும் விரும்புவதால் தமிழகத்தில் அதுபற்றி கவலைப்பட வேண்டாம்!

கேள்வி: ஹிந்துமகா சபை அமைப்பின் தலைவர் சாவர்க்கர் கோயிலுக்குப் போகாத ஓர் நாத்திகர் என்பதும், ஆனால் அந்த அமைப்பில் இருந்தவர்கள் நாத்திகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் உண்மையா?

- வேல்முருகன், வேளச்சேரி

பதில்: ஹிந்து மதத்தில் - இராமனின் மந்திரி, தசரதனின் மந்திரி ஜாபாலி ஒரு நாத்திகர் என்றெல்லாம் கதை உண்டே! புத்தரே ஒரு நாத்திகர் என்றாலும் அவரை ஹிந்துமத வளையத்துக்குள் வைத்துக் கொண்டார்கள். பெரியாரை அப்படி செரிமானம் செய்ய முடியாததால் கடவுள் மறுப்பை நாத்திகம் என்று ஏற்காமல் வேத மறுப்பையே நாத்திகம் என்றுகூறி, ஆரியக் கலாச்சாரத்தைக் காப்பாற்ற இப்படி ஒருபுதுரூட்போட்டு விட்டார்கள் போலும்!

கேள்வி: கரோனா காலத்தில் ஜோதிடத்தைப் பற்றி என்ன தான் சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊற்றியிருந்தாலும், மீண்டும் வெட்கமில்லாமல் வியாபாரத்தை ஆரம்பித்து விட்டார்களே, ஜோதிட வியாபாரிகளும், ஊடக முதலாளிகளும்?

- சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில்: வெட்கமாவது - வெங்காயமாவது! ஷெல்லி என்ற அறிவுஜீவி ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் தான் ஜோதிடத் தொழிலையே விட்டுவிடுவதாகத் தெரிவித்தாரே! விட்டுவிட்டாரா? வித்தை காட்டுகிறர்கள் - வெட்கம் ஏதுங்க?

கேள்வி: விவசாயிகள் போராட்டத்தை வன்முறை வழியில் திருப்ப முயற்சித்த நடிகர் தீப் சிங். பா...வோடு தொடர்புடையவராமே, அவருக்குப் போராட்டத்தில் என்ன வேலை?

- ..தென்றல், ஆவடி

பதில்: அதுதான் பா... வேலை - புரியவில்லையா?

கேள்வி: சுற்றுச் சூழல் சீர்கேடு, உயிர்ச்சூழல் பாதிப்பு போன்ற பேரபாயங்களையெல்லாம் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், தனியாருக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் இயற்கை வளங்களைப் பலியிடத் தயாராக இருக்கிறதே பா...அரசு?

- செந்தில்ராஜ், காரைக்குடி

பதில்: ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை அமல்படுத் துவது மட்டுமே பா... ஆட்சியின் ஒரே இலக்கு - புரிகிறதா?

கேள்வி: மத்திய பட்ஜெட் ஏறக்குறைய இந்தியாவின் விலைப்பட்டியலைப் போலவே இருக்கிறதே அய்யா?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: ‘விண்ணோடும், முகிலோடும் விளையாடி மேலே... மேலே...’ இதுதான் மத்திய பட்ஜெட்!

காகிதம்இல்லா பட்ஜெட் என்ற பெயருடன், ஏழ்மை ஒழிப்புக்கான ஆயுதமில்லா பட்ஜெட்டும் கூட!

கேள்வி: என்.எல்.சி. நிறுவனத்தில் முழுக்க முழுக்க வடவர்களையே தெரிவு செய்திருப்பது கொடுமை அல்லவா? இதைத் தடுக்கும் வழி என்ன?

- .வெ.ரா. தமிழன், சீர்காழி

பதில்: தொடர் போராட்டம் - நெய்வேலியில் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. வேலை கிட்டா இளைஞர்களைத் திரட்டி, போராடினால் 3 வேளை சோறாவது கிடைப்பதின் மூலம் பட்டினியை ஒழித்துவிடலாம் - இதுதானே இன்றைய பரிதாப நிலை?

கேள்வி: பத்து ஆண்டுகளுக்கு முன்பே கலைஞர் தொடங்கி வைத்த காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு, இப்போது பிரதமர் அடிக்கல் நாட்டுகிறாராமே?

- கா..வளர்மதி, நெய்வேலி

பதில்: ‘பழைய கள் புது மொந்தை

படம் பழசு தலைப்பு புதுசு

- அவ்வளவுதான்!

கேள்வி: ஒட்டுமொத்த பூமியையும் கடவுள் தான் உண்டாக்கினார் என்றால் இராமன் பாலம் என்பதற்கு மட்டும் புனிதத்துவம் கோருவதேன்?

- சீ.ராஜராஜன், பிச்சாண்டார் கோவில்

பதில்: பூமியை கடவுள் படைத்திருந்தால் பூகம்பம் வருவதை அவர் ஏன் அறிந்து தடுக்கவில்லை; கடல் சீற்றம், புயல், ஆழிப்பேரலை - ‘சுனாமிஇவை வரலாமா என்றும் கேட்டு விடாதீர்! பகுத்தறிவு வந்துவிடும் - அது வந்தால் ஆபத்து! ஆபத்து யாருக்கு என்று புரிந்திடுவீர்!

Comments