பா.ஜ.க.வின் ஆள் பிடிக்கும் அரசியல்!

தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட அய்ந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சி நடந்துவருகிறது, ஆனால் மேற்குவங்கம் மற்றும் கேரளத்தில் பாஜகவிற்கு பினாமிக் கட்சிகள் எதுவும் கிடைக்கவில்லை.

 ஆகையால் அங்கு கூட்டணி கிடைக்காமல் ஆட்சியில் அமர பிரபலங்களை மிரட்டி அடிபணிய வைக்கிறது,  மேற்குவங்கத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியை மிரட்டி தனது கட்சியில் இணைத்து முதல்வராக அறிவிக்க 2019 முதல் அமித்ஷா திட்டமிட்டு வந்தார். ஆனால் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி அமித்ஷா கொல்கத்தா வரும்போதெல்லாம் மருத்துவமனையில் சேர்ந்து கங்குலி தப்பித்துக் கொள்கிறார்.  தமிழகத்தில் அதே போன்று ரஜினிகாந்தை 2017 முதல் தயார் படுத்திவந்தார்கள். அவரும் ஆன்மீக அரசியல் என்று கூறிக் கொண்டு மெல்ல மெல்ல பாஜகவில் ஒருவராக தன்னை மறைமுகமாக மாற்றிக் கொண்டுவந்தார். 

 ஆனால் தமிழகத்தில் பாஜகவின் மீதான கடுமையான வெறுப்பு அலையைக் கண்டு அஞ்சி கரோனாவை காரணம் காட்டி அரசியலே வேண்டாம் என்று அறிக்கை விட்டுவிட்டு அமைதியாகிவிட்டார். இருப்பினும் அவரைச் சந்திக்க அமித்ஷா சென்னை வருகிறார் என்றதும் அவரும் மருத்துவமனையில் சேர்ந்து தனக்கு உடல் நிலை சரியில்லை என்று பதுங்கிவிட, இதனால் அமித்ஷா தனது சென்னை வருகையையே ரத்து செய்துவிட்டார். இந்த நிலையில் கேரளாவின் பக்கம் அவர்களது பார்வை திரும்பி உள்ளது, அங்கு சுரேஷ் கோபி, மோகன் லால் போன்ற திரைப் பிரபலங்களை தமது கட்சிப் பக்கம் இழுத்துப் பார்த்தார்கள். 

ஆனால் கேரள மக்கள் நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பார்க்கின்றனர். ஆகையால் திரைப்பட நடிகர்களை வைத்து அரசியல் செய்ய முடியாது என்ற நிலையில் கல்வியாளர்கள் யாராவது கிடைப்பார்களா என்று தேடும் போது, இந்தியாவெங்கும் மெட்ரோ ரயில் திட்டங்களை அறிமுகப்படுத்திய மெட்ரோமேன் என்று செல்லமாக அழைக்கப் படும் சிறீதரனை வளைத்துப் போட்டுள்ளனர்.  தற்போது கேரளாவில் பல மாவட்டங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்துகொண்டு வருகின்றன. 

ஆகையால் சிறீதரனை முதல்வராக முன்மொழியும் திட்டம் ஒன்றை வைத்துள்ளனர்.  இதற்கு சிறீதரனை இணங்கவும் வைத்துவிட்டனர். செய்தி ஏட்டுக்கு பேட்டியளித்த சிறீதரன் தன்னை முதல்வராக்க பாஜக விரும்பினால் நான் பாஜகவில் இணைவேன் என்று சுற்றி வளைத்துக் கூறியுள்ளார்.  கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மாநிலத்தை கடன் வலையில் இருந்து வெளியேற்றி, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.

மேலும், எந்தவொரு அதிகாரமும் இல்லாத அரசமைப்புப் பதவியில் மாநிலத்திற்கு பங்களிக்க முடியாது என்பதால் ஆளுநர் பதவியில் ஆர்வம் இல்லை என்று சிறீதரன் கூறி விட்டார்.

மெட்ரோ மேன்  சிறீதரன் விரைவில் கட்சியில் சேரப்போவதாக பாஜகவின் கேரள தலைவர் கே.சுரேந்திரன்  அறிவித்தார்.

88 வயதான சிறீதரன், நேற்று பிப்ரவரி 21ஆம் தேதி சுரேந்திரன் தலைமையிலான மாநிலம் தழுவிய சுற்றுப்பயணமான விஜயயாத்ராவின்போது முறையாக கட்சியில் சேர்ந்தார்.

இது குறித்துப் பேசிய சிறீதரன் தனது முடிவு, பாஜக வால் மட்டுமே மாநிலத்திற்கு நன்மைகளை வழங்க முடியும் என்ற நம்பிக்கையால் ஏற்பட்டது என்று கூறினார்.

மக்கள் பயணிக்கும் வழியை மாற்றுவதில் அவர் செய்த பணிக்காக ஏராளமான தேசிய மற்றும் பன்னாட்டு கவுரவங்களைப் பெற்றுள்ளார். 2001ஆம் ஆண்டில் அவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. 2008-இல் பத்ம விபூஷன் விருது வழங்கி பாராட்டப்பட்டார். 2005ஆம் ஆண்டில் அவருக்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் செவாலியர் டி லா லெஜியன் டி ஹொன்னூர் விருது வழங்கப்பட்டது. 2003ஆம் ஆண்டில் டைம் பத்திரிகை ஆசியாவின் ஹீரோக்களில் ஒருவர் என்று அழைத்தது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இவருக்கு 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த ஒரு விருதும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது, தற்போது கேரளாவில் ஒரு பிரபல முகத்தை முன்னிறுத்த வேண்டும் என்ற ஒரு நெருக்கடி காரணமாக ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கி இவரிடம் தண்டமிட்டுள்ளது.

இதுதான் பா.ஜ.க. பீற்றிக் கொள்ளும் தார்மீக அரசியலின் அப்பட்டமான யோக்கியதை!

இதற்கு மக்கள் வரும் தேர்தல் மூலம் சரியான பாடம் கற்பிப்பார்கள்.

Comments