தாழ்ப்பாள் இல்லா வீடா தமிழ்நாடு?

'தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டித் துறை, அஞ்சல் துறை, பி.எச்..எல். நெய்வேலி அனல் மின் நிலையம், திருச்சி, ஆவடி, அரவங்காடு போன்ற இடங்களிலுள்ள பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், .என்.ஜி.சி., அய்..சி., ஜிப்மர் மருத்துவமனை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி, சரக்கு சேவை வரி, சுங்க வரி போன்ற நடுவண் வரித்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் முதலியவற்றில் இந்திய அரசு திட்டமிட்டு, தமிழர்களைப் புறக்கணித்து வட மாநிலத்தவரையும் மற்ற வெளி மாநிலத்தவரையும் வேலையில் சேர்த்து வருகிறது.

மேற்கண்ட நிறுவனங்களில் வேலைக்காக நடத்தப்படும் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதுதல், வினாவிடைத் தாள்களை முன்பே வெளியில் பெற்று தேர்வெழுதுதல் போன்ற பல்வேறு மோசடிகள் வடநாட்டுத் தேர்வு மய்யங்களில் நடக்கின்றன. திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, தமிழ்நாடு அஞ்சல் துறை முதலியவற்றில் அவ்வாறான ஊழல் வழிகளில் தேர்வெழுதி தமிழ்நாட்டில் வேலையில் சேர்ந்த வடநாட்டினர் அவ்வப்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; வழக்குகள் நடக்கின்றன.

தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்காக 2017-இல் நடத்திய தேர்வில், வடநாட்டினர் கலந்து கொண்டு தேர்வெழுதி மோசடியாக அதிகம் பேர் வெற்றி பெற்றனர். அந்த ஊழல் அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, அவர்கள் கைது செய்யப் பட்டனர். அந்தத் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன.

 2019-இல் தமிழ்நாடு ரயில்வே துறையில் பழகுநர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 100க்கு 95 விழுக்காட்டினர் வட மாநிலத்தவர்களாக இருந்தார்கள்.

2020-ஆம் ஆண்டு தென்னக ரயில்வே துறையில் பணிக்குச் சேர்க்கப்பட்ட 3,218 பேரில் மிகப்பெரும்பாலோர் இந்திக்காரர்களும், மற்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆவர். இதில் பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் சேர்க்கப்பட்ட 541 பேரில் 400-க்கும் மேற்பட்டோர் இந்திக்காரர்களே! தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

பழகுநர் பயிற்சி முடித்தவர்களில் 20 விழுக்காட்டினரை மேற்படி வேலைகளுக்குப் பணியமர்த்தம் செய்ததாகச் சொல்லும் தென்னக ரயில்வே துறை, இந்தப் பணிகளைக் கூட பயிற்சி முடித்த தமிழர்களுக்கு வழங்கவில்லை. இதிலும் வட இந்தியர்கள் அதிகம் சேர்க்கப் பட்டுள்ளனர்.

தமிழகத்தின் குக்கிராமங்களின் அஞ்சல் அலுவலகங்களில் கூட அஞ்சலகத் தலைவர் பணிக்கு பீகார், உத்தரப்பிரதேசம் அரியானா மாநிலத்தவர்கள் வேலைக்கு அமர்த்தப் படுகின்றனர்.

 தலைமைப்பதவியில் ஒரு வட இந்தியர் அமர்த்தப் படும் போது அவரது பரிந்துரையின் பெயரில் அவருக்கு கீழே உள்ள அனைத்துப் பதவிகளிலும் வட இந்தியர்கள் வந்து விடுகின்றனர். நாகர்கோவிலின் சுற்றுவட்டார அஞ்சலகங்களில் கடந்த சில ஆண்டுகளாக பணியாளர்கள் அனைவருமே வட இந்தியர்கள் நியமிக்கப் பட்டுவிட்டனர்.  தமிழ் தெரியாத அவர்களுடன் தமிழ்நாட்டுப் பொது மக்கள் எப்படி தொடர்பு கொள்ள முடியும் என்பது முக்கிய கேள்வியாகும்.

திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில், ரயில்வே பணியமர்த்து வாரியம் (ஆர்ஆர்பி) மூலம் கிரேடு-3 தொழில்நுட்பப் பணியாளர்கள் 540 பேருக்கு வேலை வழங்கிட சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் ராஜஸ்தான், பீகார், உத்திரப் பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர் மட்டும் 525 பேர் தேர்வாகியுள்ளனர். தமிழர்கள் என்று பார்த்தால் வெறும் 15 பேர் மட்டும் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 கரோனா பயணத்தடை தீவிரமாக இருந்த ஜூலை மாதம் எங்கோ இருந்த உத்தரப் பிரதேசம், பீகார், அரியானா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து எளிதில் '' பாஸ் பெற்று இவர்களுக்கு என்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டு திருச்சி வந்து பணியில் சேர்ந்துள்ளனர். அதேவேளையில் இதே பணிக்காக நேர்முகத்தேர்விற்கு வர '' பாஸ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இப்பொழுது நெய்வேலி நிலக்கரிச் சுரங்க பணியாற்றிட வெளி மாநிலத்தில் தேர்வு நடத்தப்பட்டு,  பெரும்பாலும் வட நாட்டவரே குவியும் நிலை. வெறும் எட்டு பேர்தான் தமிழ்நாட்டவர். கேட்டால் தேசியம் என்பார்கள். தேசியத்தைப் பற்றி தந்தை பெரியார் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. தாழ்ப்பாள் இல்லாத வீடா தமிழ்நாடு?

Comments