'விஜயபாரதமே!' விசாலப் பார்வை தேவை!

ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரதத்தில்' (26.2.2021) சில கேள்விகளும் பதில்களும் வெளி வந்துள்ளன.

அவற்றைப் படிக்கும் பொழுது அந்த இதழும், அது தூக்கிப் பிடிக்கும் சித்தாந்தமும் எத்தகைய கேலிக்கு உரியன என்பது விளங்காமற் போகாது.

ஹிந்துக் கடவுளர்களைத் தரக் குறைவாகப் பேசும் திமுக என்ற ஒரு குற்றச்சாட்டு.

'ஹிந்து' மதம்  என்ற ஒன்று உண்டா என்பதே முதன்மைக் கேள்வி - இந்தக் கேள்வி வெகு காலமாகக் கேட்கப்பட்டுதான் வருகிறது.

ஒழுங்கான பதில் இல்லை.

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மட்டும் கொஞ்சம் தொட்டுக் காட்டினார்.

'வெள்ளைக்காரன் ஹிந்து என்ற பெயரைக் கொடுத்தானோ, நாம் பிழைத்தோமோ!' ('தெய்வத்தின் குரல்', முதல் பாகம், பக்கம் - 267) என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஒப்புக் கொண்டாரே!

கிறித்துவனான வெள்ளைக்காரன் கொடுத்த பெயரில்தான் ஹிந்து மதம் என்ற வண்டி ஏதோ ஓடிக் கொண்டுள்ளது.

ஹிந்து மதத்தைத் தரக் குறைவாகப் பேசுவதாக ரொம்பவும்தான் குறைபட்டுக் கொள்கிறது ஆர்.எஸ்.எஸ். இதழ்.

உண்மையிலேயே கடவுளின் பெயரால் பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு என்ற வருணத்தையும், ஜாதியையும் உருவாக்கிய மதமே ஹிந்து மதம்தான்!

பிறப்பின் அடிப்படையிலேயே உயர்ந்தவன், தாழ்த்தவன், தீண்டத்தகுந்தவன், தீண்டத்தகாதவர் என்று பிறவிப் பேதத்தை இன்று அளவும் கடைப்பிடிக்கும், நிலை நிறுத்தும் வேலையைச் செய்து கொண்டிருக்கும் - 'விஜயபாரத' வகையறாக்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு மற்றவர்கள் குறை கூறுகிறார்களே என்று ஒப்பாரி வைப்பது?

இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள் - வைப்பாட்டி மக்கள் என்று கூறுவதைவிட தரக் குறைவாகப் பேசிட என்ன இருக்கிறது?

இன்னும் சொல்லப் போனால் பிறப்பின் அடிப்படையில் வேசி மக்கள் என்றும், உழைப்பாளி மக்களைப் பஞ்சமர்கள் என்று ஊருக்கு வெளிப்புறத்தில் ஒதுக்கி வைத்துத் தீண்டத்தகாதவர்கள் என்றும் ஆக்கப்பட்ட பெரும்பான்மையான மக்கள் ஹிந்து மதத்தை எந்த அளவுக்குக் கடுமையாக விமர்சனம் செய்யவும், கண்டிக்கவும் உரிமை உண்டே!

காரணம் தன்மானம் என்பது உயிரினும் ஓம்பப்பட வேண்டிய ஒன்று. குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தவன் தான்கோயில் அர்ச்சகனாக ஆக முடியும், சங்கராச்சாரி ஆக முடியும் என்று விதி வைத்துக் கொண்டு இந்த 21ஆம் நூற்றாண்டிலும் ஜாதி ஆணவத்தின் சின்னமான ஹிந்து மதத்தை விமர்சிக்காமல், குறைகளை எடுத்துக் காட்டாமல், தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டும் என்று 'விஜய பாரதங்கள்' எதிர்பார்க்கின்றனவா?

பார்ப்பனரான காகாகலேல்கர் 1961 ஜூலை மாதம் தமிழ்நாட்டில் அமைச்சர் கக்கன் தலைமையில் நடந்த ஒரு பள்ளிக்கூட விழாவில் பேசினார்.

"தீண்டாமை என்பது சமய சம்பந்தப்பட்டிருக்கிறது. அதை சமய சம்பந்தத்தினால்தான்  தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைவன் என்ற முறையிலும் உங்களிடம் பேசுகிறேன். நல்ல ஒழுக்கமுள்ள ஒரு ஹரிஜன் எப்போது சங்கராச்சாரியார் பீடத்தில் அமருகின்றாரோ அப்போதுதான் தீண்டாமை ஒழிந்ததாகக் கருதப்படும்" (மயிலைநாதன் எழுதிய "பெரியார் படைத்த மனிதன்" பக்கம் 123-124)

முதல் பிற்படுத்தப்பட்ட ஆணையத்துக்குத் தலைமை வகித்தவரும் இதே காகாகலேல்கர்தான். பார்ப்பனரான இவரே இந்து மதத்தின் தீண்டாமை நிலையைச் சுட்டிக்காட்டி குறை சொல்லியுள்ளாரே. அவரையும் தி.. - தி.மு.. பட்டியலில் சேர்க்கப் போகிறதா 'விஜயபாரதம்?'

"தென்னாட்டுப் பிராமணர்கள், தாங்களே வகுப்புத் துவேஷிகளாக இருந்து கொண்டு, மற்றவர்களைப் பார்த்து 'வகுப்புத் துவேஷிகள்', 'வகுப்புத் துவேஷிகள்' என்று கூப்பாடு போடுவார்கள்" என்றார் லாலாலஜபதி. ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரதத்தை' படிக்கும்போது இதுதான் நினைவிற்கு வருகிறது.

ஹிந்துத்துவாவைத் தூக்கிப் பிடிக்கும் 'விஜயபாரதங்களே!' முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளப் பாருங்கள். மனிதனை மனிதனாக, சமத்துவம் உள்ளவனாகப் பார்க்கும் விரிந்த மனத்தைக் கைக் கொள்ளுங்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் ஆவேசக் குரலைத் திரித்து வசைபாடுவதாகத் திசை திருப்பாதீர்கள்.

ஒடுக்கப்பட்ட மக்கள் நீண்ட காலத்திற்குப் பொறுமையாக இருக்க மாட்டார்கள் என்பது இயற்கையின் நியதி!

Comments