இந்திய கூட்டாட்சி முறைக்கு எதிரான மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து மாநிலங்கள் உரிமைக் குரல் எழுப்ப வேண்டும்

வேளாண் சட்டங்கள் பற்றிய நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் உரை

சென்னை,பிப்.21- பகுத்தறிவாளர் கழகம் சார்பில் "இந்தியக் கூட்டாட்சி முறையைத் தகர்த்திடும் மூன்று வேளாண் சட்டங்கள் 2020" தமிழ், ஆங்கில பதிப்பு நூல்கள் வெளியீட்டு விழா நேற்று (20.2.2021) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பங்கேற்பாளர்கள் நேரிலும், காணொலியிலும் இணைந்திருந்தனர். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டில்லி எல்லையில் விவசாயிகள் போராடிவரும் 87 ஆவது நாளில், "இந்தியக் கூட்டாட்சி முறையைத் தகர்த்திடும் மூன்று வேளாண் சட்டங்கள் 2020" தமிழ், ஆங்கில பதிப்பு நூல்கள் வெளியிடப்படுவது சிறப்புக்குரியது என திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

நூலாசிரியர் உரை

"வேளாண் சட்டங்கள் 2020" நூல்களின் ஆசிரியர் டாக்டர் ஜஸ்டீஸ் .கே. ராஜன் தாம் உரையாற்றுகையில், விவசாயமும் அதன் தொடர்பான கால்டை பராமரிப்பு,  கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகிய தொழில்கள் குறித்து சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உண்டு. அந்த அதிகாரத்தை மத்திய அரசு அபகரித்து இந்த மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பானது. அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளமைக்கு மாறான அதிகார மீறலாகும். அத்தியாவசியப் பொருள்கள் சட்டமும் திருத்தப்பட்டு விவசாய விளை பொருள்களை சட்டத்திலிருந்து நீக்கிவிட்டு பெரு வியாபாரிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் கொள் முதல் செய்தும், சேமித்து வைத்தும், நுகர்வோருக்கு ஏற்ற விலை கிடைக்காமல் செய்யக் கூடிய  வழிமுறைகளும் ஏற்பட்டுள்ளன. இந்த அதிகார மீறல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உரிய நிவாரணம் பெற வேண்டும் என்று கூறினார்.

தமிழர் தலைவர் உரை

நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

மத்திய பா... அரசு இயற்றி உள்ள வேளாண் சட்டங்கள் "விவசாயம் தொடர்பானவை என்ற பொருளில் மட்டும் கருதப்படக் கூடாது. அரசமைப்புச் சட்டம் கூறும் மாநிலங்களின் ஒன்றியம் (Union of States) தான் இந்தியா எனும் கூட்டாட்சி முறைக்கு எதிராக - மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகார வரம்பை மத்திய அரசு கபளீகரம் செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டமியற்றிய பொழுது அந்த மசோதா குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியினருக்கு உரியவாய்ப்பு அளிக்கப்படவில்லை. மாநிலங்களவையில் கருத்து வேறுபாடுகள் எழுந்த நிலையில் வாக்கு அளித்திட வாய்ப்பு தரப்படாமல் குரல் வாக்கெடுப்பு என சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதிகார வரம்பும் மத்திய அரசுக்குக் கிடையாது. சட்டமியற்றிய வழிமுறையும் உரிய வகையில் இல்லை. இது விவசாயிகள் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. மாநிலங்களின் உரிமை தொடர்பான இந்த சட்டங்கள் குறித்து மாநிலங்கள் குரல்  எழுப்ப வேண்டும். சட்டம் இயற்றிய அடிப்படையே தவறு.போராடும் விவசாயிகளின் கோரிக்கையான இயற்றப்பட்ட சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதுதன் சரியானது!

இவ்வாறு  தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

அறிமுக உரை

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அறிமுக உரையில், "இந்தியக் கூட்டாட்சி முறையைத் தகர்த் திடும் மூன்று வேளாண் சட்டங்கள் 2020"  நூலிலிருந்து பல் வேறு தகவல்களை எடுத்துக்காட்டினார்.

அவர் தமது அறிமுக உரையில்... "விவசாயம் மாநிலப் பட்டியலுக்குரியது. ஆனால், மத்திய அரசு கைப்பற்ற முயற் சிக்கிறது. நாட்டின் வளர்ச்சி விகிதம் பெரிதும் குறைந்த காலத்தில், கரோனா ஊரடங்கு காலத்திலும் விவசாயம் வளர்ச்சியில் இருந்தது. ஒற்றை முறை (Uniformity) என்பதற்கும், ஒற்றுமை  (Unity) என்பதற்கும் உள்ள வேறு பாடுகள்குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டத்தை இயற்றியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்நூலில் நீதியரசர் .கே.ராஜன் குறிப்பிட்டுள்ளார்.  உணவுப் பயிர் அத்தியாவசியப்பொருள்கள் மற்றும் உணவுப்பொருள்களில் அத்தியாவசியப்பட்டியலில் இல்லாதவை என்பது குறித்து சட்டத்தில் கூறப்பட்டுள்ளது குறித்து நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. தனி நபர் ஒத்தி அல்லது குத்தகை என்பது 5 ஏக்கர் வரை என்கிற உச்ச வரம்பு  ஒப்பந்தம் போடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பொருந்தாது.  யாருக்காக இந்த சட்டம்? விவசாயிகளுக்கா? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கா? எனும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேல்முறையீடுகளுக்காக நீதிமன்றத்துக்கு செல்லக்கூடாது என்றும் ஆர்ப்பிட்ரேசன் முறைதான் தீர்வு என்றும் கூறப்பட்டுள்ளது.

கோல்ஃப் விளையாட்டு பணக்காரர் விளையாட்டு. சாமானியர் ஆட முடியாது. அதைப்போன்று புதிய சட்டத் தால் கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலைக்காரர்களாக விவசாயிகள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நூல் எல்லோரிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும்

வேளாண் சட்டம் 2020 குறித்த இந்த நூல், ஆய்வாளர்கள், தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள், பொதுமக்கள் என  எல்லோரிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும். தமிழிலும், ஆங்கிலத்திலும் உள்ள இந்த நூல் மேலும் இந்தி, பஞ்சாபி, வங்க மொழிகளிலும் கொண்டு செல்லப்பட வேண்டும். அனைவரும் வாசித்து பயன்பெற வேண்டும்.

சமூகநீதிக்காக பல்வேறு காலக்கட்டங்களில் தொண்டாற்றி வந்துள்ள நீதியரசர் விவசாயிகள், சாமானியர்கள் ஒடுக்கப்படக் கூடாது என்பதை இந்த நூலின்மூலம் எடுத்துக்காட்டியுள்ளார்" என்று குறிப்பிட்டார்.

தொடக்க உரை

திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தொடக்க உரையாற்றுகையில், "விவசாயம் பாவகரமான தொழில் என்று மனுதர்மம் கூறுகிறது. மத்திய ஆட்சியும் மனுதர்ம ஆட்சியாக உள்ளது. குஜராத் பனியாக்கள் விவசா யத்தைப் புறக்கணித்து வணிகம் செய்கின்றனர். அவர்களின் பழமொழியே வியாபாரி ஆட்சி நடத்தினால் மக்கள் பிக்காரி (பிச்சைக்கார்)கள், ஆகிவிடுவர் என்று கூறுகிறது. வியாபாரி என்னும் குஜராத்தி சொல் தமிழ்போல் வழக்கத்தில் வந்துவிட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 246ஆவது கூற்றின் படி, மாநில அரசு சட்டம் இயற்றும் அதிகாரத்தை மத்திய அரசு அபகரித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தை Corrupt செய்திருக்கிறார்கள் என்று நீதிபதி இந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய அரசுக்கு அதிகாரமில்லை

இப்படிப்பட்ட சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. தந்தை பெரியார் சொன்னதைப் போல்made over  ஆட்சி மாற்றம் ஆகியுள்ளது என்பது மத்திய அரசு செயல்மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசாக உள்ளது. நூலை வாங்கிப்படிப்பதுடன் விவசாயி களுக்கும் பரப்ப வேண்டும். இந்த நூல் வடக்கே போய்ச் சேரவேண்டும்"  விவசாயிகளின் போராட்டக் களமான டில்லியில் எல்லைப் பகுதியிலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர் முனைவர் விஜு கிருஷ்ணன் காணொலி மூலம் உரையாற்றினார்.

நூல் வெளியீடு

நீதியரசர் .கே.ராஜன் எழுதிய "இந்தியக் கூட்டாட்சி முறையைத் தகர்த்திடும் மூன்று வேளாண் சட்டங்கள் 2020" (ரூ.40), "Agriculture Acts 2020 Demolition of Federal Structure of India" (ரூ.30) நூல்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய "புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?" (ரூ.10), "திராவிடம் வெல்லும் ஏன்? எப்படி?" (ரூ.20), அறிஞர் அண்ணா எழுதிய "தீ பரவும் முன்" (ரூ.35) ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. நன்கொடை ரூ.135 மதிப்புள்ள நூல்கள் ரூ. 100க்கு வழங்கப்பட்டன.

பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நூல்களை வெளியிட ஆடிட்டர் இராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.

பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் இரா.தமிழ் செல்வன் 5 தொகுப்புகளையும், பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் .தா.சண்முகசுந்தரம் 30 தொகுப்புகளையும், பகுத்தறிவாளர் கழகம் மாணிக்கம் 10 தொகுப்புகளையும் மற்றும் சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்,  பகுத்தறிவாளர் கழகம் .வெங்கடேசன், அமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் .இர.சிவசாமி, தாம்பரம் மாவட்டத் தலைவர் .முத்தையன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, திராவிட மாணவர் கழகம் தொண்டறம், பொறியாளர் .குமார், தென்சென்னை  இளைஞரணி மகேந்திரன், ஈக்காடுதாங்கல் சேகர், தாம்பரம் மா.குணசேகரன், பழ.சேரலாதன் உள்பட ஏராளமானவர்கள் நூல்களை உரிய தொகை கொடுத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெருமகிழ்வுடன் பெற்றுக்கொண்டனர்.

திராவிடப் பொழில் சந்தாக்கள் வழங்கல்

வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் 'திராவிடப் பொழில்' வளர்ச்சி நிதியாக ரூ.25ஆயிரம், தாம்பரம் மாவட்டத் தலைவர் .முத்தையன் 'திராவிடப் பொழில்' 2 ஆண்டு சந்தாக்களை  தமிழர் தலைவரிடம் வழங்கினார்கள்.

நூலாசிரியர் நீதியரசர் .கே.ராஜன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். நூலாசிரியர் நீதியரசர் .கே.ராஜன் உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நூல் வெளியீட்டு விழாத் தலைமையேற்று நிறைவுரை ஆற்றினார். முடிவில் பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் இரா.தமிழ்செல்வன் நன்றி கூறினார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டன.

Comments