எதிரிகள் என்பவர்கள் நமக்குப் பாடம் எடுப்பவர்கள்

தன்னை வென்றால் தரணியை - இந்த உலகத்தையே நாம் வென்று விட்டோம் என்று மனநிறைவை அடைய முடியும்.

அது எளிதானதா என்று மலைக்காதீர்கள்! ஒவ்வொரு தடையையும் நாம் வாழ்வின் துன்பங்களாகப் பார்ப்பதற்குப் பதிலாக, வாழ்வில் இயற்கை நமக்கு எடுக்கும் பாடங்கள் என்று கருதி அவற்றை அணுக வேண்டும். பாடங்க ளைப் படித்துத்தானே, தேர்வெழுதி வெற்றி பெற முயலுகின்றோம். அதுபோல எளிதானது என்றே எதையும் பற்றி முயன்றால் முடியாததல்ல என்ற முனைப்போடும், தன்னம்பிக்கையோடும் அணுகுங்கள். வெற்றி வாய்ப்பு நிச்சயம்தான்!

தீதும் நன்றும் பிறர் தர வாராஎன்று தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றன் எத்தனை நூற் றாண்டுகளுக்கு முன் எளிய வரிகளில் விளக் கினார்; படித்தோமே தவிர கற்கவில்லையே! அதன்படி நிற்க முயற்சிக்கவில்லையே!

மிகப்பெரிய துன்ப நிகழ்ச்சியை முன்பு சொன்னது போல், ஒரு வாய்ப்பாகக் கொண்டு நம்பிக்கையுடன் எதிர்கொண்டு நமது உள்ளத் தின் நெஞ்சுரத்தைப் பெருக்கிக் கொண்டால் மகிழ்ச்சி நம்மை விட்டு ஒருபோதும் விலகாது!

அந்த மகிழ்ச்சி பிறருக்கு உதவுவதில்தான் முதலிடம் பெறவேண்டும், முன்னுரிமைக்கு உரியதாக அமைய வேண்டும்.

விபத்தில் அடிபட்டு சிக்குண்டவரை விரைவாக மீட்பதும், உடனடியாக தேவையான சிகிச்சையைத் தந்து காப்பாற்றுவதும்தானே முக்கியம்? அதை விட்டு, விபத்து எப்படி ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது? யாரால், ஏன் ஏற்பட்டது என்று ஆராய்ந்து அதன் பின்னரே சிகிச்சை என்றால் அது பயனும் தராது; அறி வார்ந்த அணுகு முறை - செயல்முறையுமாகாது.

பிரச்சினைக்குத் தீர்வு காணுவது முதலாவ தாகும். பிரச்சினை ஏன் ஏற்பட்டது என்று ஆராய்வது அப்புறம் இருக்கட்டும் என்பதே சரியான நடைமுறையாக நம் வாழ்வில் அமைய வேண்டும்!

கருணைக்கே முதலிடம்; கேள்விக்கல்ல; மறவாதீர்! உடனடியாக மூச்சுக் காற்றுப்போல் முன்னோட்ட செயல்களைச் செய்துவிட்டு பிறகு நிதானமாக யோசிக்க வேண்டியவற்றிற்கு இடம் தாருங்கள்.

நம்முடைய எதிரிகளை நல்ல ஆசான்களைப் போல் கருத வேண்டும் என்கிறார் தலாய்லாமா! வியப்பாக இருக்கிறதல்லவா?

பாடங்களை யார் கற்றுக் கொடுப்பார்கள், ஆசிரியர்கள் தானே! அதுபோல நமக்கு நம் எதிரிகள் கொடுக்கும் தொல்லைகளும், துன்பங் களும்பாடங்களாகி' விட்டால் அவர்களுக்கு நாம் நன்றி சொல்வோமே தவிர, ஆத்திரப்பட மாட்டோம்.

எடுத்துக்காட்டாகமிசாஎன்ற சிறைவாசம் - சிறையில் கொடூரமாக மிகவும் கேவலமான வார்த்தைகளால் நாங்கள் "அர்ச்சிக்கப்பட்டு", பலமான தாக்குதல்களுக்கு ஆளாகிய அனுபவ பாடம் - எவ்வளவு செலவழித்தாலும் எளிதில் கிடைக்க முடியாத வாழ்க்கைப் பாடங்கள் - எங்களைப் பொறுத்தவரை - எப்படி என்கிறீர்களா?

அந்தத் துன்பத்தினை அனுபவித்து மீண்டு வந்ததால் இனி அவற்றைவிட பெரிய துன்ப இயல் நடப்புகள் எவை வந்தாலும் எதிர்கொள் வது எளிதாகப்பட்டு விட்டதல்லவா?

நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் இழக்க வில்லை. கொடுமை குணாளன் ஆகிய அச்சிறை யின் தலைமை அதிகாரி "நீங்கள் இனி எளிதில் வெளியே செல்ல முடியாது, எத்தனை ஆண்டு களோ எங்களுக்கே தெரியாது?" என்று அச்சுறுத் திய வார்த்தைகளை, அனாயாசமாக எங்களிடம் கூறியதைக் கேட்டு அதிர்ந்த சக சிறைவாசிகளான நம் தோழர்களிடம் "நாளை என்ன நடக்கும்?‘ என்று கணிக்கப்பட முடியாததுதான் அரசியல்; கவலையை விட்டு, கிடைத்த சிறை வாழ்க் கையை சிறப்பாக கழிப்பது எப்படி என்பதை யோசியுங்கள்" என்று ஆறுதல் மொழியை நம்பிக்கையுடன் கூறியபோது, மிரண்டவர்கள், சுருண்டவர்கள் எல்லாம் எழுந்தவர்கள் ஆனதை இப்போது நான் நினைத்துப் பார்த்து மகிழவே செய்கிறேன்.

தலாய்லாமா கூறுவது உண்மைதானே?

(அடுத்தும் ஆய்வு செய்வோம்)

Comments