திட்டம் யாருக்கு?
சென்னை அருகே தையூரில் உலகத்தரத்திலான ஆராய்ச்சி வசதிகளுடன் அய்.அய்.டி.யின் கண்டுபிடிப்பு வளாகம்: - பிரதமர் மோடி திறப்பு (14.2.2021).
அதெல்லாம் சரிதான் - அய்.அய்.டி.யில் பிஎச்.டி. வாய்ப்பு தாழ்த்தப்பட்டோருக்கு 2 புள்ளி 11, பிற்படுத்தப்பட்டோருக்கு 2 புள்ளி 7. இந்த நிலைதானே உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சித் திட்டத்திலும்?
தந்தை பெரியார் சொன்ன ‘பிராமினோகரசி' என்பது இதுதான்!
எல்.முருகனுக்கு
எந்த இடம்?
நடக்கவிருப்பது தேச பக்தர்களுக்கும் - அதற்கு எதிரானவர்களுக்கும் இடையிலான போராட்டம் : எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர்.
தேசம் என்றால் இவர்கள் பார்வையில் இந்து ராஜ்ஜியம்தானே! இந்து ராஜ்ஜியம் என்றால், வருணாசிரம ராஜ்ஜியம்தானே. ஆமாம் - அந்தத் தேசத்தில் எல்.முருகன் எங்கே நிறுத்தப்படுவார்?
யாருக்கு
ஆசீர்வாதம்
பிரதமர் மோடி இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் : - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
ஆசீர்வாதம் என்பது ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பது. பிரதமரே ஆசீர்வாதம் என்றால், அதை எடுத்து யாருக்குக் கொடுப்பது?
‘‘வாழ்க
அண்ணா நாமம்!''
சென்னை வந்த பிரதமருக்கு தமிழக முதல்வரும், துணை முதல்வரும் போட்டிப் போட்டுக் கொண்டு கிருஷ்ணன், தெட்சிணாமூர்த்தி சிலைகளை அளித்தனர்.
சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி, வாலிப வயதில் பெண்ணைத் திருடிய கடவுள் கிருஷ்ணன் என்றார் அறிஞர் அண்ணா.
யார் எந்தப் பதவியை அபகரிக்க நினைக்கிறார்களோ - யாம் அறியோம்!
வாழ்க ‘அண்ணா நாமம்!'
எந்த நாக்கு?
அந்தணர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க அந்தணர்கள் கோரிக்கை.
யார் அந்த அந்தணர்? வள்ளுவர் சொல்லும் அந்தணரா? ‘துக்ளக்' குருமூர்த்திகள் சொல்லும் அந்தணரா? முதலில் அதை முடிவு கட்டுங்கள்! ஆமாம், இட ஒதுக்கீட்டினால் தகுதி- திறமை நாசமாகும் என்று சொன்ன நாக்கு எந்த நாக்கு?
எ(அ)ந்த காந்தி?
அறப்போரில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் டில்லி விவசாயிகளுடன் காந்தியார் பேத்தி தாராகாந்தி பட்டாச்சார்ஜி சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அந்த காந்தியையே என்ன செய்தார்கள்? இந்தக் காந்தி ஆதரவு தெரிவித்து என்ன பயன்? ஒரு நாள் செய்தி அவ்வளவுதான்.
விபத்தா- தலையெழுத்தா?
உலக சாலை விபத்துகளில் இந்தியாவின் பங்கு 10 விழுக்காடு : - உலக வங்கி தகவல்.
விபத்தா? அது விதிப் பலன் - அதுதான் ‘எங்கள் ஹிந்துத்துவா' - புரிகிறதா?
சிரிப்பது
ஒரு செய்தியா?
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சிரித்துப் பேசிய பிரதமர் மோடி!
ஒரு பிரதமர் சிரிப்பதுகூட ஒரு செய்தியா? சிரிப்புத்தான் வருகிறது!