வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம்

புதுடில்லி,பிப்.4- வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால், 2ஆவது நாளாக மக்களவை  முடங்கியது.

மாநிலங்களவையில் வேளாண் சட்டத்தை எதிர்த்து முழக்கமிட்ட ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் மூவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்கள் மற்றும் அதற்கு எதிரான விவ சாயிகள் போராட்டம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் நேற்று முன்தினம்  இரு அவை களிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாள் முழுவதும் இரு அவைகளும் முடங்கின. இதைத் தொடர்ந்து நேற்று காலை 9.30 மணிக்கு மாநிலங்களவை கூடியது.  அப்போது, ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்களான சஞ்சய் சிங், சுஷில் குப்தா மற்றும் என்.டி குப்தா ஆகியோர் அவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பல முறை கேட்டுக்  கொண்டும் அவர்கள் இருக்கைக்கு திரும்பவில்லை. இதனால், 9.40 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடிய பின்னரும் இந்த 3 ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்களையும், அவையின் மய்யப்பகுதிக்கு வந்து தொடர்ந்து முழக்கமிட்டதால் வெங்கையா நாயுடு அவர்களை ஒருநாள் அவை யிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அவைக்  காவலர்களால் அந்த 3 உறுப்பினர்களும் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் கோரிக்கை ஏற்று, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கூடுதலாக 5 மணி நேரம் வேளாண் சட்டங்கள் பற்றி விவாதிக்க ஒதுக்க அவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஒப்புக் கொண்டார். இதனால் நேற்றும், இன்றும் கேள்வி நேரம், சுழியம் நேரம் ரத்து செய்யப்பட்டு,  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 15 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சம்மதிக்க, வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் தொடங்கியது.

மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்: சர்ச்சைக்குரிய 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கவுரவ பிரச்சினையாக கருதாமல் திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் டிராக்டர் பேரணி போராட்டத்தின்போது காணாமல்  போனவர்களை கண் டறிய குழு அமைக்கப்பட வேண்டும். 26 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தின்போது நடந்த வன்முறை சம்பவத்துக்கு அனைத்து எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கிறோம். தேசிய கொடி அவமதிக்கப்படுவதை ஒருபோதும்  பொறுத்துக் கொள்ள முடியாது. விவசாயி களுக்கு எதிராக இருப்பதற்கு மாறாக பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

திருச்சி சிவா (திமுக): வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என மத்திய அரசும், பிரதமர் மோடியும் உறுதி அளிக்க வேண்டும்.

ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாடி): டில்லி எல்லையில் விவசாயிகளை தடுக்க பயங்கரமான தடுப்புகள் அமைக் கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் கூட, ஏன் பாகிஸ்தான் எல்லையில் கூட இப்படிப்பட்ட கெடுபிடி இல்லை. விவசாயிகள் என்ன  டில்லியை தாக்கவா வந்துள்ளனர்? அவர்கள் என்ன எதிரியா? விவசாயிகளை அரசு எதிரிகள் போல் நடத்தக் கூடாது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று, புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றார்.

மக்களவை மாலை 4 மணிக்கு தொடங்கியது. அவை தொடங்கியதும், மற்ற அலுவல்களை நிறுத்தி வைத்து வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 20  எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும், இப்பிரச்சினை பற்றி தனியாக விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர். இதனால் அமளி ஏற்பட்டதால் மாலை 4.30 வரை அவையை மக்களவைத் தலைவர் சபாநாயகர் ஓம் பிர்லா  ஒத்திவைத்தார். பின்னர், அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளி செய்தனர். இதனால், இரவு 7 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட அவை, பின்னர் இரவு 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Comments