பா.வே. மாணிக்க நாயக்கர்

தோற்றம்: 25.02.1871            • மறைவு : 25.12.1931

செம்மொழித் தமிழின் சிறப்புகள் குறித்துக் கிட்டத்தட்ட 48 கட்டுரைகள் எழுதித் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். மெத்தப் படித்த அறிஞர், தொழிலால் பொறிஞர். மேட்டூர் அணைக்கு வரைபடம்  வரைந்து தந்தவர். தந்தை பெரியாருக்குத் திருக்குறளைப் பயிற்றுவித்தவர். தமிழுக்கு எண் ணற்ற கலைச் சொற்களை உருவாக்கிக் கொடுத்தவர் பாகல்பட்டி வேங்கிடசாமி மாணிக்க நாயக்கர்.

சேலத்திலிருந்து எட்டுக் கிலோமீட்டர் தொலை வில் இருக்கும் பாகல்பட்டி எனும் சிறு கிராமத்தில் பிறந்தவர். தந்தை ஜமீன் வேங்கடசாமி நாயக்கர். தாயார் முத்தம்மையார். சோதிடர் ஒருவர் பன்னி ரண்டு வயதுக்குள் இவருக்கு இறப்பு ஏற்படலாம் எனக் கூறியதை நம்பி இவரது தந்தையார் பன் னிரண்டு வயது வரை வீட்டை விட்டு வெளியே விடாமல் வீட்டினுள்ளேயே பூட்டி வளர்த்தார். அதன்பிறகு வயது பன்னிரண்டுக்கு மேல்தான் மாணிக்கனாரால் முதன் முதலாகப் பள்ளிக்கூடத்தையே எட்டிப் பார்க்க முடிந்தது. பின் மெல்ல அனைத்துக் கல்வியையும் துரிதமாக உள்வாங்கி விரைவில் சேலம் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.  படிக்கும்போதே மருத்துவத் துறையில் ஆர்வம் மிகுந்து உடற் கூறுவியலைத் துரிதமாகப் படித்தார். பின் சென்னை மாகாணப் பொறியியல் கல்லூரியில் படித்தார். படிக்கும்போதே பலபோட்டிகளில் கலந்துகொண்டு பதின் மூன்று பரிசுகளும் ஒரு தங்கப்பதக்கமும் பெற்றார்

இன்னமும் அவரது குடும்பத்தினர் இப்பரிசுகளைப் பத்திரமாக வைத்திருக் கின்றனர். பின். பொறியியல் மேற்படிப்பு நிமித்தம் இங்கிலாந்து சென்று படித்ததுமே அரசுப் பொறியாளராகவும் பிற்பாடு சென்னைப் பொறியியல் கல்லூரியின் பேராசிரியராகவும், பின் அரசுக் கண்காணிப்புப் பொறியாளராகவும் பணிசெய்தார். என்னதான் பொறிஞராக இருந்தபோதும் இவரது மனம் தமிழுக்கு ஆற்றும் தொண்டைக் குறித்துத்தான் எப்பொழுதும் வரைபடம் தீட்டிக் கொண்டிருந்தது. தான் பணிசெய்து வந்த பொறியியல் துறைக்கும் இன்னபிற அறிவியல் துறைக்குமாக எண்ணற்ற கலைச்சொற்களை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டார்.

உதாரணத்திற்கு RADIUM என்பதற்கு கதிர்POINT என்பதற்குப் புள்ளிFOCUS என்பதற்கு குவியம்ALTERNATE என்பதற்கு இடைவிட்டSUMMARY என்பதற்குத் தொகுப்பு போன்றவை இவர் உருவாக்கிய எண்ணிலடங்கா கலைச்சொற்களில் சில வார்த்தைகள். இது போன்று கலைச்சொற்களுக்காக மட்டுமே நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். தட்டச்சு செய்ய தமிழ் சுலபமான மொழி எனக்கூறிய மாணிக்கனார் தமிழ்மொழியின் சிறப்புகளைப் போற்றும் விதத்தில் செந்தமிழ்ச் செல்வி எனும் இதழில் எழுதிய 48 கட்டுரைகள் தமிழுக்கு எக்காலத்திலும் வளம் சேர்க்கக் கூடியன.

தமிழுக்காக அவர் எழுதிய ஒலியிலக்கணம், தமிழ் மொழியின் நுண்மை விளக்கம், கம்பன் புளுகும், வால்மீகி வாய்மையும் போன்ற நூல்கள் தமிழ் மீது அவர் மேற்கொண்டிருந்த மாறாக் காதலை நமக்குப் பறைசாற்றுகின்றன. வெறுமனே பொறிஞர், தமிழ் அறிஞர் எனும் சிறப்பினைக் கடந்து அவர் சிறந்த ஒளிப்படக் கலைஞராகவும் இருந்தார். இந்திய அரசு சார்பில் அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டு விழாவுக்கு டில்லி சென்று ஒளிப்படம் எடுத்தார். அப்படிச் செல்லும்போது நங்கவரம் இராசம் 'அய்யர்' வாங்கித் தந்த 'கோடக்' கேமராவுடன் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களைப் பின்னிருக்கையில் ஏற்றிக்கொண்டு மோட்டார் வாகனத்திலேயே டில்லி சென்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Comments