ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி:   கலப்புத் திருமணங்கள் வாயிலாக, ஜாதி மதங்களுக்கு இடையிலான பதற்றங்கள் பெருமளவு குறையும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதைப் பார்க்கையில், காலம் தாழ்ந்தாலும் தாழ்த்தப்பட்டாலும் பெரியார் கொள்கை வெற்றி முனையை அடைந்தே தீரும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அல்லவா?

- இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்.

பதில்: உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் பல தந்தை பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கூறிவந்த கொள்கை, லட்சியங்கள் - தத்துவங்களை - ஏற்றுள்ள தீர்ப்புகளாக வெளிவந்து கொண்டிருப்பது, காலத்தை வென்றவர் அறிவு ஆசான் பெரியார் என்பதை நிரூபித்துக் கொண்டு உள்ளது. இது பற்றி உங்கள் கருத்தைப் பிரதிபலித்து நமதுவிடுதலை (13.2.2021) ஏட்டில் வந்துள்ள அறிக்கையைப் படியுங்கள்.

கேள்வி: மாநிலம் மதுவில் மூழ்கி உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வேதனையுடன் சுட்டிக்காட்டி உள்ளதை தமிழக அரசு பரிசீலிக்க முன்வருமா?

- சீதாலட்சுமி, திண்டிவனம்.

பதில்: தமிழக அரசு அதனை ரசித்து சுவைத்து பயன டைகிறதே - கரோனா காலத்தில் டாஸ்மாக் கொள்ளையும், மக்களிடம் உதவித்தொகையை ஒரு கையில் கொடுப்பது - மறு கையில் டாஸ்மாக் மூலம் வசூலித்துக் கொள்வோம் என்று அமைச்சர்களே பேசும் அளவில் இருக்கும்போது அவர்களாவது, மது விலக்காவது!

வரும் புதிய ஆட்சி - திமுக ஆட்சி, இது பற்றி ஆழமாக பரிசீலித்து, ரூ.30,000 கோடி ஆண்டு வருமானத்தை வேறு வழியில் - கார்ப்பரேட் வரிகள் மூலம் வசூலித்து சமூகத்தைக் காப்பாற்றினால் பொது ஒழுக்கம் சீரடையும். மகளிர் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்!

கேள்வி: கடும் கரோனாவால் சிக்கித் தவித்த மக்களுக்கு மத்திய அரசு தரும் பரிசு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வா?

- கலைவாணி, மேடவாக்கம்.

பதில்: ஏழை, எளிய மக்கள், குறிப்பாக காய்கறிகளின் விலையேற்றம், சமையல் எரிவாயு உருளை விலை யேற்றம் போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நம் இல்லத்தரசியர்களுக்கு மோடி அரசு தரும் அருமையான பரிசு இந்த  வானத்தைத் தாக்கும் விலையேற்றம். சமையல் எரிவாயு உருளை விலை - ரூ. 760; கருவேப்பிலை கிலோ ரூ. 150.

கேள்வி: மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் கடவுள், மத நம்பிக்கை இல்லாதவர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுவது உண் மையா? ஆம் எனில் நடைமுறையில் அவ்வாறு நடந்து கொண்டாரா?

- வேலாயுதம், வில்லிவாக்கம்.

பதில்: வாழ்வின் பெரும்பகுதியில் அவர் அவ்வாறே நடந்து கொண்டார். அவர் தந்தை இறந்த பிறகு ஒரு நேரத்தில் அலகாபாத் பிரயாக் நதியில் மூழ்கி எழுந்த படம் அப்போதைய பச்சை அட்டைகுடி அரசில்வந்தது. அவை போன்றவைதான் விலக்குகள்! மற்றபடி அவர் ஒரு நாத்திகர். கடவுள் - மதநம்பிக்கை அற்றவர் தான்.

கேள்வி: மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறையை மாநிலங்களின் மீது திணிக்க முயற்சி நடக்கிறதா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதே?

- எஸ். பத்ரா, வந்தவாசி.

பதில்: எத்தனைசொடுக்குகள்உயர்நீதிமன்றம் போட்டாலும் மத்திய அரசு - ஆர்.எஸ்.எஸ். அரசு அசைவதாகத் தெரியவில்லையே!

கேள்வி: கட் செவி (whats App) , முகநூல் (Face book) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்  அரசுத்துறைகளை (காவல்துறை உள்பட) சேர்ந்தவர்கள் தங்களின் பதவிக்கு ஏற்ப ஜாதி ரீதியான குழுக்கள் அமைத்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனரே?

- மன்னை சித்து , மன்னார்குடி. 1

பதில்: மகா வெட்கக்கேடு - மக்களிடம் அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து, முகமூடியைக் கிழியுங்கள்.

கேள்விEWS பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கு அரசமைப்புச் சட்டம், நீதிமன்றம் விதித்த 50% என்னும் உச்சவரம்பு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு என்று தடைகள் வந்தாலும், எல்லாவற்றையும் தாண்டி உடனுக்குடன் இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதே சமயம், ஓபிசி வகுப்பினருக்கு கல்வி நிலையங்களில் 27% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசாணை இருந்தபோதும் அந்தப் பிரிவினருக்கு அகில இந்தியக் கோட்டாவில் இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுபற்றி...

- .பழநிசாமி, தெ.புதுப்பட்டி

பதில்: மனுதர்ம ஆட்சி மத்திய ஆட்சி என்பதற்கு இந்தக் கேள்வியின் கருத்தே சரியான - போதுமான - ஆதாரம் ஆகும்!

பார்ப்பன பாரதியாரே பாடினார்:

சூத்திரனுக்கொரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதிஎன்ற நிலைதான் இதன் மூலம். மக்களிடம் விளக்க வேண்டுவது அவசியம்!

கேள்வி: மனு ()நீதி பற்றி விமர்சித்தபோது பொங்கிய பார்ப்பனக் கூட்டம், கோயிலுக்குள் கூட்டுப் பாலியல் கொடுமை செய்ததைப் பற்றி ஏதும் பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது ஏன்?

- சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில்: காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் சங்கரராமன் கொலை வழக்கின் 1ஆம் எதிரியும் (Accused).  2ஆம் எதிரியும் - பிறழ்சாட்சியங்களால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்யாத நிலையில் தப்பித்தவர்கள் பற்றியோ, காஞ்சி தேவநாதன் (அர்ச்சகர்) போன்ற குற்றவாளிகளது லீலைகளைப் பற்றியோ, அனுராதா ரமணன் (அவாள்) எழுதியது பற்றியோ யாராவது பேசுகிறார்களா?

இது தான் அவர்கள் வாழ்வின் இரகசியம்! புரிந்து கொள்வீர்.

கேள்வி: தேவேந்திர குல வேளாளர் என்னும் பெயர் மூலம் 7 ஜாதிகள் ஒருங்கிணைக்கப்படுவதால், அவர்களின் மேம்பாட்டுக்கோ, ஜாதி ஒழிப்புக்கோ ஏதாவது பலன் உண்டா?

- ..தென்றல், ஆவடி

பதில்: பொறுத்திருந்து பார்ப்போம். பிறகு புரியும்!

கேள்வி: ஊடகங்களின் மூலம் வெறுப்பை விதைக்கும் கபில் மிஸ்ரா என்ற ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரைக் கைது செய்ய வேண்டும் என்று டில்லி காவல்துறைக்கு பிருந்தா காரத் கடிதம் எழுதியுள்ளாரே!

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: ஆர்.எஸ்.எஸ்.சைச் சேர்ந்த சண்முகநாதன் ஆளுநராக இருந்து பதவியை ராஜினாமா செய்து திரும்ப அழைக்கப்பட்டவர். பாலியல் குற்றங்கள் சாட்டப்பெற்றவர். அவரது புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை வைத்து வெளியிட்டு அவரை சிலாக்கியப் படுத்தியுள்ளனரே!

ஆர்.எஸ்.எஸ். கோட்சேவிற்குக் கோவில்கட்டி கும்பிடத் தயாராகி விட்டுப் "பெருமை"யை எம்.பி.யை விட்டு ஆர்.எஸ்.எஸ். பேச வைக்கிறதே!

இதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். பற்றி புரிந்து கொள்வீர். நடவடிக்கையாவது - புடலங்காயாவது!.

Comments