கரோனா தடுப்பூசி அனுபவம்

காத்துக் கிடந்தோம் 12 மாதங்கள் சிறையிலிருந்து வெளிவர. பேரக்குழந்தைகளைப் பார்க்காமல் இருந்ததால் கனவில் வர ஆரம்பித்துவிட்டார்கள். என்னதான் சூமில் பார்த்தாலும் அன்பின் ஏக்கம்தான். குழந்தைகளைத் தொட்டு அணைத்துக்கொள்ள முடியவில்லை. எங்கள் பக்கத்து வீட்டுக் காரர்களில் சிலர் சிபாரிசின் பெயரால் சீக்கிரம் கரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டார்கள். நாங்கள் பதிவு செய்து தினமும் காத்துக் கொண்டு இருந்தோம்.

 எங்கள் மகள் கனிமொழி ஒரு வாரக் கடும் முயற்சியால் எங்களுக்கு ஊசி கிடைக்க ஒரு Rite Aid என்ற மருந்து கடையை கண்டுபிடித்தார். அதில் ஒரே ஒரு தொல்லை. அது என்னவென்றால், அந்த ஊர் மிகச்சிறிய ஊர். மலைகளின் நடுவில் அமைந்த ஊர். எங்கள் வீட்டிலிருந்து 3 மணி நேரம் கார் பய ணம் செய்ய வேண்டும். பனி பெய்ய ஆரம்பித்தால் மலைகளுக்குள் கார் ஓட்டுவது மிகக் கடினம். எங்களுக்கும் எங்கள் மகளுக்கும் மிகக் கவலையாக இருந்தது. பனி பெய்தால் முன் பதிவு செய்த நேரத்தை மாற்றிவிடலாம் என்று முடிவு செய்திருந்தோம்.

நல்ல வேளை ஊசி போடும் நாள் அன்று பனி பெய்யவில்லை. இருந்தாலும் முந்தைய வாரம் அடித்த பனிப்புயல் விளைவினால் சாலைகள் எப்படி இருக்கும் என்ற கவலை வேறு. எப்படி இருந்தாலும் பதிவு செய்த நாள் பிப்ரவரி 17 ஆம் நாள் காலை 7 மணி மன திடத்துடன் கிளம்பிவிட்டோம். பாதி தொலைவு சாலைகள் நேராக கார் பயணத்திற்கு எளிதாக இருந்தது. அடுத்த பாதி மலைகளில் செங்குத் தாக ஏறி இறங்கி கொண்டை ஊசி வளைவுகளில் நெளிந்து மிக்க கவனத்துடன் செல்ல வேண்டியதாக இருந்தது. அந்த சிறிய ஊர்களிலும் மக்கள் மலை சரிவுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வீடு கட்டி இருந் தார்கள்.

அவர்கள் நிலக்கரி சுரங்கங்களில் வேலை செய்பவர்கள். இவ்வளவு கடினமான சூழ்நிலைகளில் பொதுமக்களது எரிசக்தி தேவைக்காக இங்குள்ள மக்கள் உழைப்பதை நன்றியுடன் நினைத்து கொண் டோம்.

ஒருவழியாக அரைமணிநேரம் முன்பே மருந்து கடைக்கு வந்து சேர்ந்தோம். கடையில் இருந்த மருந் தியல் வல்லுநர் எங்களிடம் மிக கனிவாக எங்கள் பதிவு விவரங்கள் - விண்ணப்பம் எல்லாவற்றையும் சரி பார்த்தார். எங்களை அரைமணிநேரம் காத்திருக்க சொன்னார். பதிவு நேரத்தை மிக கவனத்துடன் கடைப்பிடித்ததால் வீண் போட்டிக்கு இடமில்லாமல் அமைதியாக ஊசி போடும் வேலை நடந்தது. காத்திருந்த வேளையில் கடையில் சில சாமான்களும் வாங்கி கொண்டேன். எனக்கு ஊசி போட்ட மருந்து வல்லுநரிடம் நீங்கள் எவ்வளவு வருடங்களாக இந்த மலை ஊரில் Shomakinஇல் இருக்கிறீர்கள் என்று கேட்டேன். நான் பிறந்ததிலிருந்து 62 வருடங்களாக இந்த ஊரில் தான் வசிக்கிறேன் என்றார். இந்த ஊர் மலைக்கிடையே மிக அழகாக உள்ளதே என்று சொன்னேன். அவர் கோடையில் இங்கு நிலக்கரி புகை மண்டலம் மண்டியிருக்கும் என்று வருத்தத் துடன் சொன்னார். எனக்கும் வருத்தம் தான். ஒரு மனித சமுதாயம் இன்னொரு சமுதாயத்தின் சுகவாழ் வுக்கு விலை கொடுத்து இருக்கிறது என்பது உண்மை என விளங்குகிறது. வீட்டுக்கு திரும்பும் போது மலை பள்ளத்தாக்குகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களைப் பார்த்தோம். பனி பெய்திருந்ததால் வேலை நடக் காமல் மூடிக் கிடந்தன. கார் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியதாக இருந்தது,

வீட்டிற்கு பத்திரமாக வந்து சேர்ந்தோம். எங்கள் மகள் கனிமொழி நாங்கள் வீட்டுக்கு திரும்பியது அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஊசி போட்ட தன் பின் விளைவுகள் பற்றி எச்சரிக்கை அட்டவணை கொடுத்திருந்தார். ஆகவே, முன் எச்சரிக்கையாக நான் வலி மாத்திரை எடுத்து கொண்டேன். அடுத்த நாள் கொஞ்சம் உடல் வலி இருந்தது. பிறகு சரியாகி விட்டது. எங்கள் குடும்பத்தில் மருத்துவ துறையில் வேலை செய்யும் அனைவருக் கும் தடுப்பு ஊசி கிடைத்துவிட்டது. வாழ்க்கையில் சுதந்திரம் பரிசாக கிடைத்தது போன்ற ஓர் உணர்வு.

இன்னும் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பு ஊசிக் காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக் கிறார்கள்.

மாறுதலான தொற்று London variant and SouthAfrican variant இப்பொழுது பரவி வருவதால், மழை விட்டாலும் தூவானம் விடாத நிலை போல நாங்கள் இன்னும் முக கவசம் அணிந்து கொண்டு வெளியே செல்லுகிறோம். இன்னும் ஒரு மாதம் கழித்து இரண்டாவது ஊசி அதே ஊருக்குச் சென்று போட்டுக் கொள்ளவேண்டும். நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து கரோனா தடுப்பு ஊசி கிடைத்தால் போட்டுக் கொள்ளவும். நமது குடும்பங்களின் தலைவர் மானமிகு வீரமணி அய்யா போல மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒருவருக்கு வந்தால் அந்தக் குடும்பமே படும் துன் பம் மனதை வாட்டுகின்றது. எத்தனை ஆண்டுகள் கரோனாவுடன் போராட வேண்டுமோ தெரியாது. நம்மை காத்துக் கொள்ள நாமே பொறுப்பு எடுத்து கொள்ள வேண்டும்.

- சரோ. இளங்கோவன்,

சிகாகோ, அமெரிக்கா.

Comments