புதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 22, 2021

புதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்


புதுச்சேரியின் பச்சோந்தி அரசியலை முடிவுக்குக் கொண்டு வர திரு.நாராயணசாமி அவர்களின் தலைமையில் உள்ள புதுவை அரசு பதவி விலகி, மக்களிடம் நீதி கேட்டு செல்வதுதான் ஒரே வழி என்று திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநில அரசின் நிர்வாகம் மத்திய அரசின் பிடியில் உள்ளது.  மக்கள் தேர்தலில் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சட்டமன்றத்தையும், அமைச்சரவை யையும் உருவாக்கினாலும்கூட, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேச ஆட்சி- உள்துறை அமைச்சகத்தின் மற்றும் மத்தியில் உள்ள ஆட்சியின்கீழ் இயங்கவேண்டிய நிலையே நீடிப்பது ஒரு அரசியல் முரண்நகை.

பல கட்சிகள், பலமுறை போராடியும் புதுச்சேரி மாநிலத்திற்குத் தனி மாநிலத் தகுதி இல்லாதது முதலாவதான அரசியல் குறைபாடு ஆகும்!

மத்திய பா.ஜ.க. அரசின் தொடர் தொல்லைகள்!

இதன் விளைவை புதுச்சேரி மாநில மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த ஓர் அரசு சுதந்திரமாக இயங்க முடியாத தொடர் முட்டுக்கட்டை இந்த நாலரை ஆண்டுகளிலும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி என்பவர்மூலம் மத்திய பா.ஜ.க. அரசு நாளொரு வண் ணமும் நடத்திக் காட்டி, எல்லையற்ற தொல்லைகளைக் கொடுத்தது!

மக்கள் நலத் திட்டங்களை மாநில அமைச்சரவை நினைத்தாலும், திட்டமிட்டபடி செயல்பட முடியாத தடைகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டு, அவற்றை அகற்றுவதிலும், எதிர்கொள்வதற்குமே திரு.நாராயண சாமி அவர்கள் தலைமையில் இருந்த அமைச்சரவைக்கு நேரம் சரியாக இருந்த ஒரு கெட்ட வாய்ப்பான அரசியல் நடைபெற்றது அங்கு.

வெளிச்சத்திற்கு வந்த வித்தைகளும், வியூகங்களும்!

பொதுத் தேர்தலுக்குமுன் புதுவையில் இந்த ஆட்சி கவிழ்க்கப்படவேண்டுமென்று மத்திய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சி திட்டமிட்டு செயலாற்றிய வித்தை களும், வியூகங்களும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டன!

1. மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களை ஆளும் அமைச் சரவை பரிந்துரைப்பதற்கு மாறாக, மத்தியில் உள்ள ஆட்சிமூலமே அவர்களை பா.ஜ.க. ஆதரவாளர்களாக நியமனம் செய்தது முதல் காட்சியாகும்!

2. மத்திய பிரதேசம், மணிப்பூர், கோவா, கருநாடகா, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி - குதிரை பேரம் நடத்தி - ஆட்சியைப் பிடித்த அதே முறையை புதுச்சேரியில் நடத்திக் காட்டிட - சாம, பேத, தான, தண்டம் முறைகளை அரசியல் அச்சுறுத்தல்களாகவும், நாக்கில் தேன் தடவியும், கையில் பசை தடவியும் இதுவரை ஆளுங்கூட்டணியிலிருந்து 5 பேரை பதவி விலகச் சொல்லி, நாராயணசாமி அமைச்சரவையை ஆட்டங்காணச் செய்து - நம்பிக்கை வக்கெடுப்பு என்ற அரசியல் அஸ்திரத்தை வீசியுள்ளனர்!

புதுச்சேரியில் காவி ஆட்சியை எப்படியும் நிறுவிடவோ அல்லது அதன் கொத்தடிமைகளைக் கொண்டு அரசியல் கச்சேரி நடத்திடவோ திட்டமிட்டு, இன்று பலத்தை நிரூபிக்க கெடு கொடுத்தார், புதிய பொறுப்பு துணைநிலை ஆளுநர் திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள்!

இதில் மிகவும் வெட்கமும், வேதனையும்பட வேண்டியது தி.மு.க.விற்கும் ஒரு களங்கம் ஏற்படும் வண்ணம் - கட்டுப்பாடு காக்காமல் பதவி விலகியுள்ளார் ஒரு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்!

இதுதான் ஜனநாயகப் படுகொலை!


முந்தைய பிரெஞ்சு இந்தியாவின் பகுதியிலிருந்த புதுச்சேரி மாநிலத்தில் இப்படி திடீர் திடீர் ராஜி னாமாக்களின் அரங்கேற்றம் எப்படிப்பட்ட திட்டமிட்ட நாடகம் என்பதற்கு மூலகாரணம்பற்றி புதுச்சேரி பொல்திக் பற்றிய ஒரு வார ஏடு வெளியிட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருப்பின், அதைவிட ஜன நாயகப் படுகொலை வேறு இருக்கவே முடியாது! மேலும் 3 மாதங்களில் எதுவும் செய்யாத அரசாக இருப்பதைவிட, எதிர்க்கட்சியாகவே இருப்பது மேலானது!

வீதிக்கு வந்து நீதிகேட்பதுதான் ஒரே வழி!

எப்படியாயினும் திரு.நாராயணசாமி அவர்கள் தலைமையில் உள்ள அமைச்சரவை பதவி விலகி மக்களிடம் நீதிகேட்டு, மக்களைச் சந்திப்பதும், ஒருங் கிணைந்த மதச்சார்பற்ற, ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சிகளோடு புதுச்சேரியில் மக்கள் பிரச்சி னைகளில், இந்த 2, 3 மாதங்களில் தொடர் பிரச்சாரம் செய்வதும், இந்தப் பதவிவெறி பச்சோந்திகளின் முகமூடிகளைக் கிழித்து புதுச்சேரி, காரைக்கால் பகுதி மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, கட்சி மாறிகளைத் தோற்கடிப்பதன்மூலம் நல்ல பாடம் கற்பித்து, புதிய வலுவுள்ள ஜனநாயகத்தை அனைத்து முற்போக்குச் சக்திகளின் துணையோடு, தன்முனைப் புக்கு சிறிதும் இடம்தராது - தொடர்ந்து அரசியலைத் தூய்மைப்படுத்தி, ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மை யையும், சமூகநீதியையும் சமதர்மத்தையும் காப்பாற்ற தன் சகாக்களுடன் கடுமையாகப் போராடி வீதிக்கு வந்து நீதிகேட்பதுதான் ஒரே வழி!

மக்களை நம்புங்கள் - பச்சோந்தி அரசியலை புதுச் சேரியில் குழிதோண்டிப் புதைக்க பொதுவானவர்கள் துணை நிற்கட்டும்! 

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை-22.2.2021

No comments:

Post a Comment