ஒரு உயிரின் விலை என்ன?
இந்தியாவில் கடந்த அய்ந்தாண்டுகளில் மட்டும் கழிவு நீர்த் தொட்டிகள் பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்த 340 தொழிலாளர்கள் மரணம்.
அதனால் என்ன? இறந்தவர்கள் குடும்பங்களுக்குப் பண பட்டுவாடா நடந்திடுமே! மனித உயிர்களை ரூபாய் தட்டில் வைத்து எடை போடும் ‘கர்ம பலன்' நம்பிக்கையாளர்கள்தானே பொதுவாக நாட்டை ஆண்டு வருகிறார்கள்.
டாக்டர்களின் அவலம்!
இந்தியாவில் கரோனா ஒழிப்பில் ஈடுபட்ட 734 டாக்டர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.
என்றாலும், இந்த டாக்டர்கள் இந்த நாட்டில் சம்பள உயர்வு கேட்டுப் போராடும் அவல நிலையே!
சாவூருக்குத்தான் ‘விசா!'
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் விவரம்:
2016 இல் இருவர்; 2017 இல் நால்வர்; 2018 இல் அறுவர்; 2019 இல் சுழியம்; 2020 இல் நால்வர்.
நாட்டின் நான்காவது தூண் என்று போற்றப்படுவது பத்திரிகைகள்; அரசுக்குப் பாதந்தாங்கவில்லை என்றால், சாவூருக்குத்தான் ‘விசா!'
எரிவாயு தயார்!
12 நாள்களில் இரண்டாவது முறையாக சமையல் எரிவாயுவின் விலை ரூ.50 உயர்வு.
குருமூர்த்தி அய்யர்வா(ல்)ள்களைக் கேட்டால் மோடி அரசின் வளர்ச்சி என்று வளைந்து வளைந்து வக்காலத்து வாங்கி வரைபடம் தீட்டுவர்.
குடும்பத் தலைவர், தலைவிகள் கைகளில் கரண்டிகளுடன் சிலிண்டர் வாயுவைத் திறந்து வைத்துக்கொண்டு காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தாமரையையும், இரட்டை இலைகளையும் வேரோடு சுட்டெரிக்க!
மக்கள் முட்டாள்கள் அல்லர்!
தமிழ்நாட்டில் புதிய தொழிற்கொள்கைகள் - வெளியீடு - ரூ.28 ஆயிரம் கோடி முதலீட்டில் 28 புதிய தொழில் திட்டங்கள்.
தேர்தல் நெருங்குகிறது அல்லவா! அறிவிப்பு அல்வாக்கள் வெளிவந்து கொண்டுதானிருக்கும். ஆமாம், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் என்னாச்சு?
நெருப்புதான் - ஆனாலும், சுடாது!
சிறுபான்மையினர் அச்சப்படத் தேவையில்லை - கொள்கை வேறு - கூட்டணி வேறு! : - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார் முதலமைச்சர்? பா.ஜ.க. சிறுபான்மையினருக்கு எதிரிதான் - ஆனாலும், அதோடு கூட்டணி வைத்திருப்பதால் அ.தி.மு.க.வின் கொள்கை மாறாது என்கிறாரா? நெருப்புதான் - ஆனாலும் சுடாது, அப்படித்தானே!
வைகோ புயலின் சீற்றம்!
ஹிந்துத்துவ சக்திகளின் படையெடுப்பைத் தடுக்கவே தி.மு.க.வுடன் கூட்டு : - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.
சபாஷ், சரியான அணுகுமுறை.
சங் பரிவார் கூறும் ஹிந்துத்துவா என்ற வருணாசிரமம் என்பது பிறப்பின் பெயரால் பேதம் விளைவிப்பது ஆயிற்றே! (நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே - என்று சங்கராச்சாரியார் கூறும் அளவுக்கு மனிதாபிமானம் அற்றது).
கோவில்கள், கடவுள்கள் தோன்றியது எப்படி?
நடிகை நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் கோவில் கட்டி கும்பாபிஷேகமும் செய்தனர்.
கோவில்களும், கடவுள்களும்
எ(இ)ப்படித்தான் தோன்றின - சிந்திக்கவும்!
அலட்சியம் வேண்டாம்!
நாள்தோறும் 6 விழுக்காடு தடுப்பூசிகள் வீணாகின்றன.
அலட்சியமா? தொழில் நுணுக்கப் பிரச்சினையா? அலட்சியப்படுத்தாமல் கவனம் செலுத்துக!