வேலியே பயிரை மேய்வதா?

 பாலின சீண்டல் குற்றச்சாட்டுக்கு ஆளான காவல்துறை தலைவரை பதவி நீக்கம் செய்க!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

 பாலின சீண்டல் குற்றச்சாட்டுக்கு ஆளான சட்டம் - ஒழுங்கு சிறப்பு காவல்துறை தலைவரை  (டி.ஜி.பி.) பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

முதலமைச்சர் சுற்றுப்பயணத்துக்குச் சென்றபோது, பாதுகாப்புக்குச் சென்ற பெண் அய்.பி.எஸ். அதிகாரியான  ஒரு மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு (டி.எஸ்.பி.), சிறப்பு டி.ஜி.பி. என்ற பதவியில் இடையில் சொருகப்பட்ட ராஜேஷ் தாசின் பாலின சீண்டல் குற்றச்சாட்டு மிகவும் அருவருக்கத்தக்க செய்தியாக வெளிவந்து, தமிழக அரசுக்கும், தமிழ்நாட்டிற்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது!

தமிழ்நாட்டின் காவல்துறை பணியில் பெரிய பெண் அதிகாரிகளுக்குக்கூட போதிய பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்பது மிகப்பெரிய தேசிய அவமானம் அல்லவா?

வேலியே பயிரை மேய்வதா?

பாலியல் சீண்டல்களாலும், வன்கொடுமைகளாலும் பாதிக்கப்பட்டோர் யாரிடம் புகார் அளிக்கச் செல்ல வேண்டுமோ - யார் அந்தக் குற்றங்களை விசாரித்து, தக்க தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கவேண் டுமோ - அந்தக் காவல்துறையில் இப்படி நடப்பதா?

பாலியல் சீண்டல் குற்றத்திற்காளான டி.ஜி.பி. ராஜேஸ் தாசை காத்திருப்போர் பட்டியலில் வைத்தால் மட்டும் போதாது, தற்காலிக பதவி நீக்கம் செய்வது முக்கியம்; இன்றேல், விசாரணை பாரபட்சமற்ற முறையில் நடைபெறுவது சந்தேகமே!

காவல்துறை பெண் அதிகாரிகளுக்குத் தக்க பாதுகாப்பான ஏற்பாடுகளைச் செய்து கடமையாற்ற வழிசெய்யும் நிரந்தர ஏற்பாட்டினை செய்வது அவசரம், அவசியம்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

25.2.2021

Comments