‘‘ஊசி மிளகாய்'' - லோககுருவுக்கு கிடைத்த கோவில் மரியாதை!

காஞ்சி சங்கரமடத்தின் தற்போதைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் (இவர் சங்கரராமன் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக இருந்து, முதல் குற்றவாளி ஜெயேந்திரருடன் சிறையில் இருந்து, பிறகு ஜாமீனில் வெளி வந்து, வழக்கு நடத்தி, சுமார்

 80-க்கும் மேற்பட்டோர் பிறழ் சாட்சியங்களாக - அதற்குமேல், செஷன்ஸ் கோர்ட் தீர்ப்புக்கு மேல் அப்பீல் போகாததினாலும், கொலை வழக்கிலிருந்து விடுதலையானவர்;  ஜெயேந்திரர் மறைவிற்குப் பின்னர் காஞ்சி மடத்தின் அதிபர் ஆனார்).

இவரது இந்த ஆட்சிக்காலத்தில் எப்படி அவருக்கு வரவேற்பு என்பது கடந்த இரண்டு நாட்களாகவரும்செய்திக் கசிவுகள்'மூலம்தான் ஓரளவு எவரும் புரிந்துகொள்ள முடியும்!

செய்திக் கசிவு' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம் என்றால், அவாள் ஏடுகள் அது பிரபலமாகும் சிற்சில நேரங்களில், முற்போக்கு முத்திரை குத்திக்கொள்ளும் ஆங்கில, தமி ழ்நாளேடுகள், வார ஏடுகளிலும், ஜெயிலுக்குப் போனாலும் அவாளின்  மகாத்மியங்களை,  மஹா மஹாப் பெருமைகளை வானளாவிய உயரத்திற்கு உயர்த்தித்தான் எழுதுவார்கள்!

ஆன்மிகம்' என்பதற்கு என்ன பொருள் என்பதற்குஇவாளை'ப் பார்த்தாலே, எவாளும் தெரிந்துகொள்ள முடியும்.

எந்த நிலையிலும், பெரியவாளை குறைத்துப் பேசுவதோ, உண்மை பேசுவதோ கூட தப்பித் தவறி கூட; அவாளைப்பற்றி ஒரு வார்த்தை வராது. இதற்குப் பெயர்தான் அந்த பார்ப்பன இனப்பற்று - ஏத்தி ஏத்தித் தொழுது சிலாகித்து சிறப்புடன்பயபக்தியை' உருவாக்கி, மண்ணை மலையாக்கிக் காட்டுவதில் அவாளுக்கு ஈடேது? இணையேது?

நம்மவர்கள் இதில் ஒரு பத்து பர்சென்ட் கற்றாலாவது இந்த தாழ்ந்த, வீழ்ந்த சமூகங்கள் சொரணையோடும், சுயமரியாதையோடும் முன்னேறக் கூடும்! காண முடிவதில்லையே!

விஷயத்துக்கு வருவோம்!

விஜயேந்திரர் மும்பையில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றபோது, அங்கே உள்ள அவாள், பிராமணாள்தான் - அர்ச்சகாள் - இவாளை உள்ளே வரக்கூடாது எனத் தடுத்து, வாக்குவாதம் நடந்து, பிறகு எப்படியோ சுவாமி தரிசனம் செய்து விட்டுத் திரும்பினாராம்!

இன்று காலை ஒரு செய்தி: அதேபோல, ராமேசுவரம் ராமனாத சுவாமி கோவிலுக்குச் சென்றபோது, அவரை கர்ப்பக் கிரகத்துக்குள் சென்று வழிபட அனுமதிக்க அர்ச்சகர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஒருபெரும் ரகளையே நடந்தது.

கூடவே, அரசியல் புரோக்கர் அவதாரம் எடுத்த  குருமூர்த்தி அய்யர்வாள் சென்றிருந்தாராம்!

பிறகு அங்கே சென்ற அமைச்சர் .எஸ்.மணியனின் தலையீட்டால் விஜயேந்திரர் பூஜை செய்துவிட்டு வந்தாராம்!

இதுதான்அர்த்தமுள்ள ஹிந்துமதம்!' என்னதான் பூணூல் பாசம் இருந்தாலும்கூட வடகலைக்கும் - தென்கலைக்கும் அடிதடி சண்டை இதே காஞ்சிபுரத்தில் சாமி ஊர்வலத்திலும். இப்போது இப்படி சங்கரமடத்தின் அதிபர் சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு இப்படித் தடை!

இந்த லட்சணத்தில் ஹிந்துக்களை ‘‘யாரோ பிரித்து விடுகிறார்களாம்!'' அதற்காக வேலையில்லாமல்வேலை'த் தூக்கி ஒற்றுமைப்படுத்துகிறதாம் ஆர்.எஸ்.எஸ்.!

‘‘மருத்துவரே, முதலில் உங்களைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்'' (‘Physician heal thyself') என்ற பழமொழிப்படி இவற்றை ஒன்றாக்கி விட்டு மற்றவர்மீது பாயட்டும் காவிகளும், ஆன்மிக அவதாரங்களும்!

என்ன விநோதம் பாரு!

எவ்வளவு ஜோக்கு பாரு!

சங்கராச்சாரியார்பற்றி ஆசிரியர் வீரமணி எழுதிய ஒரு ஆங்கில நூலுக்குத் தலைப்பு  Saint or Sectarian'  என்று தலைப்பிட்டது எவ்வளவு சரியானது என்பதற்கு மும்பை கோவில், இராமேசுவரம் கோவிலில் காஞ்சி விஜயேந்திரரை  பூஜை புனஸ்காரத்திற்கு விடாமல் மற்ற ‘‘பிராமணாளே'' - அவாள் ‘‘அப்பிராமணாள்''கூட அல்ல - தடுத்தது அசல் பிராமணாளே!

அவர் ஒரு  Sectarian என்பதால்தானே? - ஒப்புக்கொள்ள மறுக்கலாமோ?

Comments