அவதூறு வழக்கில் அமித்ஷாவிற்கு தாக்கீது நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா, பிப்.20 மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் உறவினர் அபிஷேக் தொடர்ந்த அவதூறு வழக்கில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் நடந்த பேரணியில், மம்தாவின் ஆட்சியில் மோசடி நடக்கிறது என்றும், பிரதமர் மோடி, மேற்கு வங்க மக்களுக்கு அனுப்பிய நிதி முதலமைச்சர் உறவினர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் சென்றுவிட்ட தாகவும் அமித் ஷா பேசி இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தாவின் உறவினர் அபிஷேக், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், அமித்ஷாவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், வழக்குத் தொடர்பாக அமித்ஷாவுக்கு தாக்கீது அனுப்பவும், அவர் வரும் 22 ஆம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில்

பறிபோனது 69 விழுக்காடு இட ஒதுக்கீடு

சென்னை, பிப்.20 இந்தாண்டு மத்திய அரசின் 49.9 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

2 எம்.டெக் படிப்புகளுக்கு மத்திய அரசு இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்பு களுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின்அறிவிப்பை எதிர்த்து, நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-2021 ஆம் ஆண்டில் இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாகவும், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்ட இந்த விவகா ரத்தில் எவ்வாறு தீர்வு காணப்போகிறீர்கள் என்றும், இந்த படிப்பை பல்கலைக் கழகம் தொடர்ந்து நடத்த என்ன செய்வது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று (19.2.2021  மீண்டும் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் தரப்பில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக, அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரி விக்கப்பட்டது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தாண்டு மத்திய அரசின் 49.9 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நீதிபதி உத்தர விட்டார். மாணவர் சேர்க்கையை ரத்து செய்ததை எதிர்த்து நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments