அதிகார முறைகேடுகளும் ஊழல்களே!

பாஜக பிரமுகர்கள் மீதான குற்றவியல் வழக்கு உட்பட அனைத்தையும் திரும்பப் பெறுவது தொடர் பான கர்நாடக மாநில அரசின் உத்தரவைத் தொடர்ந்து, 21 முக்கிய வகுப்புவாத வன்முறை தொடர்பான வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன.

 கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி கருநாடகாவில் ஆளும் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 321ஆவது பிரிவின் கீழ் சில வழக்குகளை திரும்பப் பெற அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து கருநாடகாவின் மக்கள் சுதந்திரம் சங்கம் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த கருநாடக உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் 21 அன்று அளித்த தீர்ப்பில், 'கருநாடக அரசின் ஆகஸ்ட் 31ஆம் தேதியிட்ட உத்தரவின் அடிப்படையில் மேற் கொண்டு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படக் கூடாது' என்று உத்தரவிட்டது.

இது மாநில அரசுக்கு 'வழக்கு தொடரப்படுவதைத் திரும்பப் பெறுவதற்கான ' அதிகாரத்தை அளிப்பதாக விமர்சிக்கப்பட்டது.  இந்நிலையில், பாஜக அரசின் 2020 ஆகஸ்ட் 31 உத்தரவின் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் கருநாடக நீதிமன்றங்களில் வகுப்புவாத வன்முறை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் சம்பந்தப்பட்ட 21 வழக்குகள் கைவிடப்பட்டன. இதன் மூலம் பாஜக எம்.பி., மைசூரு பிரதாப் சிம்ஹா, இந்துக் குழுக்களின் 206 உறுப்பினர்கள் குற்றவழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

 குறிப்பாக, 2014 மற்றும் 2019 க்கு இடையில் நிகழ்ந்த மதவாத வன்முறைகள் தொடர்பான 21 வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து, ஆகஸ்ட் 31 உத்தரவுக்குப் பின்னர் கருநாடக அரசு விசாரணை நீதிமன்றங்களை அணுகியது. அதன்பிறகு, அக்டோபர் 10 முதல் 2020 டிசம்பர் 10 வரை அந்த குறிப்பிட்ட 21 வழக்குகள் நீதிமன்றங்களால் கைவிடப்பட்டன

 முன்னாள் சட்ட அமைச்சர் ஜே சி மதுசாமி (தற்போதைய சொட்டு நீர்ப்பாசன அமைச்சர்), பாஜக எம்.எல். சுனில் நாயக் மற்றும் கால்நடைப் பராமரிப்பு அமைச்சர் பிரபு சவான் ஆகியோரின் கோரிக்கைகளின் பேரில் இந்த வழக்குகள் கைவிடப்பட்டன. ஒவ்வொரு வழக்கிலும் மாநில காவல்துறை மற்றும் சட்டத் துறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்த போதிலும் வழக்குகள் கைவிடப்பட்டன.  2015 முதல் 2018 வரை மைசூர் மாவட்டத்தின் ஹுன்சூர் பகுதியில் நிகழ்ந்த மதவாத மோதல்கள் தொடர்புடைய 13 வழக்குகளை கைவிடுமாறு சட்ட அமைச்சர் மதுசாமி கோரியுள்ளார்.

 இந்த 13 வழக்குகளில் முக்கியமாக, மைசூரு எம்.பி சிம்ஹா, ஹனுமன் ஜெயந்தி நிகழ்வின் போது, காவல்துறையின் தடுப்புகளை உடைத்து தனது ஜீப்பை ஓட்டி வந்தது தொடர்பான வழக்கும் உள்ளது. இதில், சிம்ஹா மீது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், அரசு ஊழியரை தனது கடமையைச் செய்ய விடாமல் தடுப்பது, அரசு ஊழியரை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டது என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால், ஆளும் பாஜக அரசின் ஆகஸ்ட் 31 உத்தரவின் அடிப்படையில் ஹன்சூர் நீதிமன்றம் இந்த வழக்கைக் கைவிட்டது.  ஹுன்சூரில் நடந்த மதவாத வன்முறைகள் தொடர்பான  வழக்கு களில் அனைத்தும் கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று திரும்பப் பெறப்பட்டன. அந்த வழக்குகள் சம்பந்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஹிந்து - முஸ்லிம் குழுக்களுக்கு இடையிலான மோதல்களுடன் தொடர்புடையவர்கள். குறிப்பாக, அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கலவரங்கள் தொடர்பானவையாகும். இதில், 142 இந்து அமைப்பினர் மீதான வழக்குகள் கைவிடப்பட்டன.

பா... ஆளும் உத்தரப்பிரதேசத்தில் இது சர்வ சாதாரணம். முதல் அமைச்சர் தன் மீதிருந்த வழக்குகளிலிருந்து தன்னைத்தானே  விடுவிடுத்துக் கொண்டார்.

குஜராத் கலவரத்தின்போதுகூட ஆயிரக் கணக்கான வழக்குகள் பின் வாங்கப்பட்டன.

ஊழல் என்பது வெறும் பணப் பரிமாற்றம் மட்டு மல்ல; குற்றவாளிகளைத் தண்டனையிலிருந்து தப்பிக்க வைக்க அதிகாரத்தைப் பயன்படுத்துவது மிகப் பெரிய ஊழலே!


Comments