இயற்கையோடு விளையாடும் விபரீதம்!

2017-ஆம் ஆண்டு மோடி அரசு இந்த நீர்மின் திட்டங்களுக்கு முக்கியமாக அனுமதி வழங்க ஆரம்பித்து தொடர்ச்சியாக இப்பகுதியில் இயற்கைச்சூழல் பாதிக்கப்படும், மேலும் பெருவெள்ளம் வரும் குறுகிய பகுதிகளில் நீர்மின் திட்டங்கள் கொண்டுவந்தால் நீரோட்டம் காரணமாக பெரும் சேதம் ஏற்படும். அப்படி ஏற்படும் போது நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகும், அதுமட்டுமல்லாமல் ஆற்றின் போக்கு மாறிவிடும். அப்படி மாறினால் இயற்கைச்சூழல் பேரழிவு ஏற்படும் என்று பல சூழலியல் ஆர்வலர்கள், புவியியல் ஆய்வாளர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக டில்லி, அரித்துவார், தெஹராடூன், மற்றும் சண்டிகர் போன்ற பகுதிகளில் தொடர்ப்போராட்டம் நடைபெற்றது. ஆனால் இது குறித்து மத்திய பி.ஜே.பி. அரசு கவலைப்படவில்லை. இந்த நீர்மின் திட்டத்தின் கீழ்ப்பகுதியில் ராம்தேவ் உள்ளிட்ட பல முக்கிய நபர்களின் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவர்களுக்குத் தேவையான மின்சாரம் வழங்கவே இந்தத்திட்டத்திற்கு முனைப்பாக இருந்து விரைந்து செய்துமுடிக்க உத்தரவிடப்பட்டது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். இவர்கள் கூறியது போலவே வேலைகள் இரவு பகலாக நடந்து, அடுத்த ஆண்டு உத்தரகாண்ட் தேர்தலுக்கு சிறிது முன்பாக நீர்மின் திட்ட விரிவாக்கப் பணிகளை முடித்து மின்சாரம் தயாரிக்க அழுத்தம் கொடுத்தது மத்திய மாநில அரசுகள்.

 ஆனால் எச்சரித்தது போன்றே நந்தாதேவி பனிக்குன்றின் கீழ்ப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால், உள்ளே உள்ள பல லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் திடீரென்று வெளியேறி வழியில் உள்ள அனைத்துமே அழியும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த பகுதியில் மரங்கள் வெட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், சில நூறு மரங்கள் மட்டுமே தளவாடம் கொண்டு செல்வதற்கு வசதியாக இருக்க வெட்டப்பட்டது என்று அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்தாலும், 2010 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தோடு தற்போது எடுக்கப்பட்ட படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகங்கா அணை குறித்து அப்பகுதிக்கு அருகிலுள்ள கிராம மக்கள் எச்சரித்தது இன்று மெய்யாகியுள்ளது. ஏனெனில், பனிப்பாறை வெடிப்பால் அந்த அணை மற்றும் நீர்மின்சார திட்ட கட்டமைப்பு அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

அதுவொரு சிறியளவிலான மின்சார உற்பத்தி செய்யும் நீர்மின்சக்தி திட்டமாகும். அந்த அணைக்கு அருகிலிருந்த ஒரு கிராமம் அப்படியே அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அக்கிராமத்தின் பெயர் ரெய்னி. இன்று அழிவிற்கு இலக்காகியுள்ள அக்கிராம மக்கள்தான் அன்றே இந்த திட்டம் தொடர்பான பின்விளைவுகள் குறித்து எச்சரித்தனர் - போராடினர்.

மிக கொடூரமான இந்த நிகழ்வில், ஏராளமானோர் மடிந்துள்ளனர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 170 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும், பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த அணை கட்டுப்படுகையில், பெருமளவிலான சேறு சரியாக அப்புறப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இப்போது பனிச்சரிவு ஏற்பட்டவுடன், அந்த சேற்று மணலோடு சேர்ந்து வந்த வெள்ளத்தால், மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

தற்போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு, கடந்த 2013ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவை நினைவூட்டுவதாகத் தெரிவிக்கின்றனர்.

கார்ப்பரேட்டுகள், சாமியார்களுக்காக மத்திய பா... அரசு இன்னும் என்னென்ன அனுமதிகளை எல்லாம் வழங்கிடுமோ என்று அஞ்சும் நிலையே!

யமுனை நதியில் உலக ஆன்மிகக் கண்காட்சி என்று கூறி சிறீசிறீரவிசங்கர் என்பவருக்கு அத்துமீறி உரிமைகளைத் தாரை வார்க்க வில்லையா? இராணுவமே பாலம் அமைத்துக் கொடுக்கவில்லையா?

பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதித்தும், அந்த தொகையை சாமியார் கட்டினாரா?

மக்கள் ஒரு பொருட்டல்ல - மதமும் மவுடிகமும் தான் இந்த ஆட்சியின் இரு கண்கள். அந்தோ இந்திய துணைக் கண்டமே! உன் மீது அழிவுப் பெருந்தாக்குதல்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு தொடரப்போகிறதோ?

Comments