மா(ற்)றுமா?
ஆட்சி மாற்றத்திற்குத் தயாராகி விட்டது மேற்கு வங்கம் : - பிரதமர் நரேந்திர மோடி.
ஆட்சி மாறவில்லை என்றால், மத்தியில் உள்ள ஆட்சியும் மாறிவிடும் என்று எடுத்துக்கொள்ளலாமா?
‘வியாபாரக் கடை ஓப்பன்!'
உளுந்தூர்பேட்டையில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ஏழுமலையான் கடவுள் ‘பிராஞ்சா?' பக்தி பிசினஸ் என்றாகிவிட்டது என்ற சங்கராச்சாரியாரின் வாய்க்கு சர்க்கரையை அள்ளித்தான் கொட்டவேண்டும்.
இன்னொன்று மாண்புமிகு முதலமைச்சர் அடிக்கல்தான் நாட்ட முடியும் - கும்பத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர்க் கூட ஊற்ற முடியாதே!
அழிவும் - ஆக்கமும்...
எட்டு வழிச்சாலையால் 9000 மரங்கள், 23 நீர் நிலைகள் பாதிப்பு : - சுற்றுச்சூழல் துறை அறிக்கை
எதை அழித்தும் ஆக்கம் (இலாபம்) பெறவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், யார்தான் தடுக்க முடியும், வாக்காளர்களைத் தவிர?
உயர்வும் - தாழ்வும்!
தமிழகத்தில் சரக்கு லாரிகளில் வாடகைக் கட்டணம் 20 விழுக்காடு உயர்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே போனால் எல்லாமே உயர்ந்து கொண்டே போகும் - மக்களின் வாழ்வோ தாழ்ந்து கொண்டே போகும்.
‘விலை'யில் இரண்டு இரகம்!
காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும்போது பா.ஜ.க. ஆட்சியில் பெட்ரோல் விலை குறைவுதான் : - எல்.முருகன், பா.ஜ.க. தமிழகத் தலைவர்.
பா.ஜ.க.வினர் இப்படியே பேசிக்கொண்டு இருக்கட்டும். பெட்ரோல் விலையைப் போலவே பெரிய விலையை இவர்கள் கொடுக்கவேண்டும் அல்லவா!
வண்ண வண்ணக் கயிறுகள்
நான் மந்திரவாதியல்ல - செயல்வாதி! : - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
அமைச்சர்களின் கைகளில் கத்தைக் கத்தையாக வண்ண வண்ணங்களில் கயிறுகளைக் கட்டிக் கொள்வது - மந்திரவாத நம்பிக்கையால் அல்ல என்றும் சொல்லியிருக்க வேண்டும்.
எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் 100 இல் ஒருவருக்குக் கரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன் தகவல்.
கரோனா ஒழிந்துவிட்டது என்ற தப்புக் கணக்குப் போட வேண்டாம். முகக்கவசம் அணியாதோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அலட்சியம் ஆபத்தில் கொண்டு போய்விடும்.
அண்ணா பெயரை அவமதிக்காதீர்!
ஜெயலலிதா பிறந்த நாளில் வீடுகளில் தீபம் ஏற்றுங்கள் : - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
பேசாமல் அக்கிரகார தி.மு.க. அல்லது ஆன்மிகத் தி.மு.க. என்று பெயர் மாற்றிக் கொள்ளலாம்.
அண்ணா பெயரை அவமதிக்காதீர்!