சிந்தனையாளர்களைச் சிறைப்படுத்தலாமா?

கி.வீரமணி

புதிய மாற்றம் என்ற ஏட்டிலிருந்து தோழர் யுவன் அவர்கள் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் குறித்த ஒரு தொகுப்புக்காக நம்மைத் தொடர்பு கொண்டார்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களைப் பற்றிஜாதிமுறை எதிர்ப்புக் கொள்கைகளில் பொதிந்துள்ள நியாயத்தையும் சமூகநீதியையும் நெஞ்சாரப் புரிந்து கொண்டு அவற்றைப் பரப்புகின்ற பணியில் பாடுபட்ட பெருமை சிங்கார வேலருக்கு உண்டுஎன்று நாம் முன்பு குறிப்பிட்டிருந்ததையும்,

தீண்டாமைக் கொடுமையைப் பொறுக்க முடியாமல் தான் தமிழ்நாட்டில் கி.பி.19ஆம் நூற்றாண்டில் புத்தரின் பகுத்தறிவு நெறிக்குப் புத்துயிர் தரும் முயற்சியில் ஒடுக் கப்பட்ட மக்களின் உரிமைக்குரலான பண்டிதமணி அயோத்திதாசர் இறங்கினார். அவருடைய வழிகாட்டலில் அவர் சென்னை ராயப்பேட்டையில் முதன்முதலில் துவங் கிய மகாபோதி சங்கத்தின் கிளையைத் தம் இல்லத்திலும் சிங்காரவேலர் நிறுவினார்என்று குறிப்பிட்டிருந்ததையும் எடுத்துக்காட்டி,

சிங்காரவேலர் அவர்களுடைய செயல்பாடுகளாகத் தாங்கள் குறிப்பிட்டதிலிருந்து, இன்றைய தலைமுறை புரிந்துகொள்வது என்னவென்றால், அவர்களைப் பொது வான தலைவளாகப் பார்க்க வேண்டும் என்பதே! ஆனால், சிலர் அவர்களை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தலை வர்கள் என்பதைப் போல அடையாளப்படுத்துகிறார்களே?” என்று கேட்டார்.

நாம் சொல்லவந்ததை, இதுவரை சொல்லிவந்ததை, மிகச் சரியாக அவர் புரிந்துகொண்டார் என்பதை அது காட்டிற்று. ஜாதி அமைப்பு நாட்டில் இருக்கின்ற காரணத் தால்,  இங்கே இருக்கக் கூடிய சீர்கேடுகளில் மற்றொன்று, மனித குலத்தின் உரிமைகளுக்காக, நன்மைக்காக உழைத்த தலைவர்களை ஜாதிச் சிமிழுக்குள் அடைப்பதாகும்.

அண்ணல்  அம்பேத்கரையே, அவர் ஏதோ தாழ்த்தப் பட்ட மக்களுக்கு மட்டுமான தலைவர் என்பதாகச் சுருக்குவது எவ்வளவு கொடுமை. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர், டாக்டர் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கரைப் போன்ற தலைவர்களையெல்லாம்,  அவர்கள் இந்நாட்டில் பிறந்து விட்டார்கள் என்பதற்காக, இந்த இனத்தில் பிறந்து விட்டார்கள் என்பதற்காக இன வரையறைக்குள், ஏன், நாட்டு எல்லைக்குள் கூட அடைக்க முடியாது. அவர்கள் உலகச் சிந்தனையாளர்கள், உலக மக்கள் அனைவருக்கு மாகச் சிந்தித்தவர்கள். சிங்கார வேலரையே முன்பு சிங்காரவேல் செட்டியார் என்றே பழக்கத்தின் காரணமாக முற்போக்காளர்கள் கூட அழைத்துவந்தார்கள். நாம் தான் அவற்றை மாற்றினோம்.

பவுத்தம் பாலி மொழியில் சொல்லப்பட்ட காரணத்தால் அது பாலி மொழிக்காரர்களுக்கு மட்டும் உரியதா? திருக்குறள் தமிழில் எழுதப்பட்டது என்பதற்காக அது தமிழர்களுக்கு மட்டுமே உரியது என்று சொல்லிவிட முடியுமா? ஜெர்மனியில் பிறந்த யூதரான மார்க்ஸின் தத்துவம் உலக மக்களுக்குப் பொருந்தாமல் போகுமா?

புத்தர் சாக்கிய முனி என்பதால், அது சாக்கியமக்களுக்கு மட்டுமானது என்றா சொல்ல முடியும்? அவர் குறிப்பிட்ட பகுதியில் பிறந்திருக்கலாம். அங்கு வழங்கிய மொழியில் தம் கருத்தைச் சொல்லியிருக்கலாம். அதுதான் சாத்திய மானது. ஆனால், அவர்களுடைய கருத்துகள் அனைத்துல குக்குமானவை. எப்படி, ஓரிடத்தில் தோன்றுகின்ற ஆறு, தான் சென்று சேரும் இடத்தினருக்கெல்லாம் பயன்தரு கிறதோ,  நிறைவாகக் கடலில் கலந்து உலகத்தோடு இணை கிறதோ, அப்படி இவர்களெல்லாம் அறிவுக்கடல்கள். அவர்களுடைய சிந்தனை, செயல், பயன்கள் உலக மக்களால் நுகரப்படவேண்டும்,

எனவே, சிந்தனையாளர்களை, தலைவர்களை, போராளிகளை, ஜாதிச் சிமிழுக்குள் அடைத்துச் சிறைப் படுத்துவது கூடவே கூடாது. அவர்களுடைய சிறப்புகளை எடுத்துச் சொல்லுவதற்காக, அவர்களை நினைவுகூர் வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைக் கூட ஜாதிச் சங்கங்கள் தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முனைந்ததெல்லாம் தமிழ்நாட்டின் கெடு வாய்ப்பாகும்.

தந்தை பெரியார் அவர்களுடைய நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கின்ற வகையில் அவர் பிறந்த ஈரோடு மாவட்டத்திற்கு பெரியார் மாவட்டம் என்று பெயரிடப் பட்டது. அடுத்தடுத்து பல்வேறு தலைவர்களின் பெயர் களும் மாவட்டங்களுக்குச் சூட்டப்பட்டன. போக்கு வரத்துக் கழகங்களுக்கும் பெயர்கள் சூட்டப்பட்டு பெரு மைப்படுத்தப் பட்டன. ஆனால், நன்றியுணர்வோடு மேற் கொள்ளப்பட்ட அந்த முயற்சியை ஜாதி உணர்வாளர்கள் தவறாகத் திரிக்கத் தொடங்கினர். ஜாதியைத் துறந்து, மதத்தை மறந்து மக்களுக்காக உழைத்த தலைவர்களைக் கூட தேடித் தேடி தத்தம் ஜாதியின் அடையாளங்களாக மாற்ற முயன்றனர். இன்றும் அந்த அவலம் நடந்து கொண்டிருக்கிறது.

தலைவர்கள் கிடைக்கவில்லையென்றால், ராஜாக்கள், ஜமீன்கள், தளபதிகள், அதுவுமில்லையென்றால், பல் துறைக் கலைஞர்கள் என்று எவரையாவது பிடித்துத் தங்கள் ஜாதிக்குள் அடைத்து, அவர்கள் படத்தை, பெயரைப் பயன்படுத்தி, தங்கள் ஜாதிப் பெருமையாகக் காட்ட முனைகிறார்கள். இன்னும் ஒரு சில அரசர்களைத் தங்கள் ஜாதிக்காரர் என்று பல்வேறு ஜாதிச் சங்கத்தினர் உரிமை கொண்டாடும் கேலிக் கூத்துகளுக்கும் இங்கே பஞ்சமில்லை.

இந்தப் பெயர் சூட்டும் பழக்கமே பிரச்சினையாகி, தமிழ்நாட்டில் ஜாதிச் சச்சரவுகளுக்கு அடிக்கோலிட்ட போது, அனைவரின் பெயர்களையும் நீக்கிவிடுங்கள் என்று துணிச்சலாக அன்றைய தமிழக முதல்வர் முத் தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு அறிக்கை வாயிலாக நாம் வலியுறுத்தினோம்.

நம் அறிவாசான் தந்தை பெரியாரின் பெயரும், அறிஞர் அண்ணாவின் பெயரும் எடுக்கப்பட்டாலும் கூட பரவாயில்லை; ஜாதிப் பிரச்சினை ஒழிய வேண்டும். நம்மை இழந்து போரில் வெல்வதைப் போல, நம் தலைவர் களின் பெயர்கள் எடுக்கப்பட்டால் கூட பரவாயில்லை என்று சொல்லி, துருப்புச் சீட்டுகளைக் காட்டி எதிரியை வீழ்த்துவதைப் போல அன்றைக்கு நாம் எடுத்துச் சொன் னோம். அறிஞர் பெருமக்களின் பெயர்களைச் சூட்டு வதனை அவர்களுக்குப் பெருமை ஏற்படுத்துவதாக நாம் நினைக்கலாம். ஆனால், அவர்கள் தம் சிந்தனையால், தொண்டால், காலங்கடந்தும் வாழ்வார்கள். பெயர் சூட்டித் தான் அவர்களை நினைவுகூர வேண்டுமென்றில்லை என்பதே நம் கருத்து.

தலைவர்களின் பெயர்களை அகற்றக் கூடிய நிலை வருமானால், அதற்கு திராவிடர் கழகத்திடமிருந்து எதிர்ப்பு எழுமோ என்ற அய்யம், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இருந்தது என்பதையும், ஆனால் நம் அறிக்கை அந்தக் கருத்துக்கு வலிமை கூட்டியதையும் அறிந்து அவர் பெரிதும் மனநிறைவு கொண்டதையும், அந்நாளைய மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் அப்போதே நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

பெயர் நீக்கம் மட்டுமல்லாமல், ஜாதியை ஒழிப்பதற்கான முன்னெடுப்பாக பல திட்டங்களையும் அன்றைக்கு நாம் எழுதியிருந்தோம். அதில் ஒன்று தான், அனைத்து ஜாதி யினரும் கலந்து வாழுமாறு தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டுமென்பது, பிறகு கலைஞர் அவர்களாலேயே 1998இல் சமத்துவபுரமாகத் தொடங்கப்பட்ட பிறகு பெரியார் நினைவு சமத்துவபுரமாகப் பெயரிடப்பட்டு தமிழகமெங்கும் மலர்ந்தது.

(அடுத்து அவரது ஆட்சிக் காலமான 2006-2011இன் போது, தந்தை பெரியாருக்கு ஒரு அடியில் சிலை அமைக்க வேண்டும் என்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த எமது 75ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பிறகு ஓரிடத்தில் 95 அடி சிலை நிறுவுவதற்கும்ப பதிலாக பெரியார் நினைவு சமத்து வபுரங்கள் தோறும் பெரியார் சிலை நிறுவுவது என்று அறிவித்து நடைமுறைப்படுத்தினார் கலைஞர் என்பது தனி வரலாறு).

இன்னும் செய்து முடிக்கப்படவேண்டிய திட்டங்கள் அவ்வகையில் உள்ளன என்பதால், 30.5.1997 அன்று விடுதலையில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையை எடுத்துக்காட்டுவது முக்கியமானது. அதை அப்படியே வெளியிடுகிறோம்.

புற்று நோயைக் குணப்படுத்த உறுப்புகளை

வெட்டுவதைப் போல மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களும் தலைவர்கள்

பெயர்களை நீக்கலாம்!

எந்த விலை கொடுத்தும் ஜாதியை ஒழிப்போம்!

"ஜாதி வேறுபாட்டால் எழுந்த சூழ்நிலையில் எல்லா ஊர்களிலும் அல்ல; சில ஊர்களில் - ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்டு 14 பேர் (பதினான்கு பேர்) இறந்துள்ளனர். துப்பாக்கிப் பிரயோகம் இங்கும், துறையூரிலும் நடைபெற்று மொத்தம் 6 பேர் இறந்துள்ளனர்."

"உங்களுடைய பகுதியிலே சில பேருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் ஆறிவிடலாம். ஆனால், மனதில் ஏற்பட்ட காயம் அவ்வளவு சுலபத்தில் ஆறாது."

"அமைதியாக இருந்த தமிழ்நாட்டிலே சிறு சச்சரவுகள் ஏற்பட்டு ஓர் உயிர் போனாலும் அது சாதாரணமல்ல."

எது முக்கியம்?

"பெயர்கள் முக்கியமா? சிலைகள் முக்கியமா? என்றால், மறைந்த பெரியவர்களுக்கு நாம் காட்ட வேண்டிய மரியாதைக்காக சிலை எடுப்பதும், பெயர் வைப்பதும் - அது தேவையற்றது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், அதன் காரணமாக இப்படிப்பட்ட கலவரங்கள் ஏற்படும்போதுதான் மிகுந்த வேதனையாக இருக்கிறது."

"ஓர் அரசு அல்லது அரசுக்காக சமுதாயத்தின் தலைவர்கள் வைக்கிற கோரிக்கைகள் எல்லாம் அந்த சமுதாய மக்களுக்குத் தேவையான கோரிக்கைகளாக இருக்க வேண்டும். வீடு கட்டித்தர வேண்டும்; வேலை வாய்ப்புத் தரவேண்டும்; தங்கள் பகுதியில் மருத்துவமனை வேண்டும் என்கின்ற இதுபோன்ற விஷயங்களுக்குப் போராடினால் அதை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்பேன். என்னால் இயன்றதை எல்லாம் செய்யத் தயாராய் இருக்கிறேன்."

இவ்வாறு தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்த்து, அந்த மக்களிடையே ஆறுதல் கூறும் போது பேசியுள்ளார் - தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள். பொறுப்பு வாய்ந்த அனைத்து அரசியல், சமுதாய அமைப்புகளின், தலைவர்களின் சிந்தனைப் போக்கும், கவலையும் கூட இதுதான்!

ஜாதி உணர்வுக்குத் தீனி போடுவதா?

ஜாதியால் படிப்பு, உத்தியோகம் இழந்த ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு மருந்தில் விஷம் சேர்த்து, நோய்க் கிருமிகளைக் கொல்வது போன்ற அளவில் மட்டுமே சமூகநீதிக்கு  - இடஒதுக்கீட்டுக்கு மட்டும் ஜாதி பயன்பட வேண்டும் (அது எல்லா காலத்திற்கும் அல்ல; குறிப்பிட்ட அளவு எழுச்சி வளர்ச்சி அடையும் வரைதான்) என்று தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கரும், அண்ணா, காமராசர் போன்ற தலைவர்களும் அரும்பாடு பட்ட நிலையில் இன்று ஜாதியத்தை மூலதனமாகக் கொண்டு குறுக்கு வழியில் உயர நினைக்கும்  பல. தலைவர்களால், காற்றில் பறக்கவிடப்படும் கொடுமை கண்டு நம் நெஞ்சம் பதைபதைக்கிறது!

நல்ல நோக்கத்தோடு மக்களுக்கு அருந்தொண்டாற்றிய தலைவர்களைப் பெருமைப்படுத்தி, அவர்கள் வழி நடக்கச் செய்யும் நல் துவக்கம் - நாளடைவில் ஜாதி உணர்வுக்குத் தீனி போடும் வகையில் கீழிறக்கத்திற்குச் சென்றுவிட்டது தமிழ்நாட்டில் என்பதை நாம் வெட்கத் தோடும், வேதனையோடும் ஒப்புக் கொள்ளவே செய் கிறோம்.

அறுவைச் சிகிச்சை தேவை!

இதற்கு ஓர் உடனடி அறுவைச் சிகிச்சை போல் நடவடிக்கை மேற்கொள்ள அரசு தயங்காது முன்வர வேண்டும். அதன் பரிசீலனைக்கும், செயல் ஆக்கத்திற்கும் என திராவிடர் கழகம் கீழ்க்காணும் திட்டங்களை முன்வைக்கிறது. புற்றுநோயைத் தடுக்க, சில உறுப்புகளை வெட்டியாவது ஆளைப் பிழைக்க வைப்பது போல் செய்தாக வேண்டும் என்பதால் இதனைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

தலைவர்கள் பெயரில் மாவட்டங்கள் வேண்டாம்!

1. ஜாதிப் பெயரிலோ, தலைவர்கள் பெயரிலோ மாவட் டங்களோ, போக்குவரத்துக் கழகங்களோ ஏற்கெனவே வைக்கப்பட்டவைகளைக் கூட துணிந்து அகற்றிட தமிழக அரசு முன்வருமானால் திராவிடர் கழகம் அதனை வரவேற்கும்; ஆதரவளிக்கும். பெரியார், அண்ணா, அம்பேத்கர் போன்ற நமது வழிகாட்டித் தலைவர்கள் ஜாதியற்ற சமூகம் அமைவதைத்தான் விரும்புவார்களே தவிர, வெறும் வெற்று ஆரவார ஆடம்பரப் பெயர் சூட்டி, தத்துவத்தில் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் நிலை உருவாவதை ஒருக்காலும் விரும்பமாட்டார்கள்.

ஏற்கெனவே கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தோழர் நல்லகண்ணு அவர்களும், .தி.மு.. முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களும் இக்கருத்தைக் கூறியிருப்பதும்  சுட்டிக்காட்டத் தகுந்தது. திராவிடர் கழகம் அதனை வரவேற்கிறது.

மாவட்டத் தலைநகரின் பெயர்களில் மாவட்டங்களும், தமிழ்நாடு முழுவதும் ஒரே போக்குவரத்துக் கழகம் "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்" என்றும் இயங்கினால் போதுமானது!

தனித்தனியாக ஜாதியைக் குறிப்பிட வேண்டாம்!

2. இட ஒதுக்கீட்டுக் கொள்கை  Socially and Educationally -  கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் - என்பதை ஜாதிதான் பிரதிபலிப்பது என்பதால் அதற்கு மட்டும் அது பயன்படலாம் - நீடிக்கலாம்! 

அதில் கூட, தனித்தனி ஜாதிப் பெயர்களை சான்றிதழ்களில் குறிப்பிடாமல் F.C.  என்பது போல் O.B.C, M.B.C, SC, ST என்று மட்டுமே தற்போதுள்ள ஜாதித் தொகுப்புகளில் உள்ள ஜாதிகளையே அதற்கு ஆதார அளவுகோலாகக் கொண்டு குறிப்பிட - அரசு ஆணை வழங்கலாம்.

காலவரையறை தேவை!

இதை ஒரு காலவரையறைக்கு உட்படுத்தலாம். அது தவறு அல்ல. பிறகு மறு ஆய்வு செய்து கைவிட முன்வரலாம்.

“There can be no equality among unequals” -  சமமாக இல்லாதோரிடையே சமபோட்டி நிலவ முடியாது என்பதால்தான் இப்போது இந்த ஏற்பாடு; எப்போதும் தேவை இல்லை.

3. ஜாதி மறுப்புத் திருமண தம்பதிகளுக்கும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளித்து, ஜாதி ஒழிப்பினை வெற்றியாக்கலாம்.

4. இந்திய அரசியல் சட்டத்தில் 17ஆவது விதியில் உள்ள தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற வாசகத்திற்கு பதில் Caste and Untouchability  ஒழிக்கப்பட்டு விட்டது என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றலாம். தந்தை பெரியார் அவர்கள் இறுதியாகக் கூறிய கருத்து இது!

5. ஜாதி அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் இல்லாது அனைத்து ஜாதியினரும் - ஆதிதிராவிடர் உள்பட - அர்ச்சகர் (பயிற்சி பெற்று) ஆகும் வண்ணம் தந்தை பெரியார் வலியுறுத்தி, தி.மு.. ஆட்சி ஆணை பிறப்பித்து, .தி.மு.. ஆட்சியில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி முதற்கொண்டு உருவாக்கப்பட்ட திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்.

தந்தை பெரியார் கருத்து மட்டுமல்ல; மத்திய அரசு பல ஆண்டுகளுக்குமுன் நியமித்த தீண்டாமை ஒழிப்பு கமிட்டி (திரு. இளையபெருமாள் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி)யின் பரிந்துரைகளில் இதுவும் ஒன்றாகும்.

6. சுதந்திர பொன் விழாவைக் கொண்டாடும் நாட்டில், இன்னமும் கிராமங்களில் இரண்டு தேநீர் கோப்பைகளில் (இரட்டைக் குவளை முறையில்) தேநீர் தருவது, தனித்தனிச் சுடுகாடுகள் இருக்கும் நிலையை மாற்றி ஒரே சுடுகாடு எல்லோருக்கும் என்ற நிலையை உண்டாக்க வேண்டும்.

7. ஆட்சியாளர்கள், அதிகாரிகள் எந்த ஜாதிச் சங்கத்துடனும் தொடர்பு கொள்வது, பங்கேற்பது கூடாது  என்ற நிலையை உருவாக்க வேண்டும் - ஆணைகள் நடைமுறைகள் பிறப்பிக்கப்பட வேண்டும்.

தண்ட வரி போடுக!

8. அரசு வீடு அமைப்புகள் ஆதிதிராவிடர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுப்பதை தனியாகச் செய்யாமல் எல்லா ஜாதியினரும் கலந்து வாழுமாறு அதன் மூலம் ஜாதி நல்லிணக்கம் ஏற்படுமாறு செய்வதை அரசு துணிந்து செயல்படுத்த  வேண்டும். (பல மாடி குடியிருப்பு களில் இப்போது ஜாதி இல்லையே)

9. எங்கே ஜாதி, மதக்கலவரம் வெடித்தாலும், அந்தப் பகுதியில் தண்ட வரி (Punitive Tax) போடப்படும் என்பதை, கண்டிப்பாக அமலாக்க வேண்டும்.

10. ஜாதிக்கான வேர்களைக் கண்டறிந்து, வெட்டி எறிதலும் நீண்ட கண்ணோட்டத்தில் அவசியம்.

ஜாதி ஒழிப்பினை உடனடியாகச் செயல்படுத்தி, மனித நேயத்தை காப்பாற்றி, தமிழ்நாட்டின் மதிப்பை உயர்த்த வேண்டும். எந்த விலை கொடுத்தேனும் ஜாதி ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்!

அரசும், அனைத்துக் கட்சியினரும் சமுதாய அமைப்பு களும் விருப்பு, வெறுப்பு இன்றி இதற்கு ஒத்துழைக்க வேண்டும்

என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

ஜாதி ஒழிப்புப் பணியில் எத்தனையெத்தனைத் தடைகளைக் கடந்து, எத்தகைய சாதனைகளை இந்த இயக்கம் சாதித் திருக்கிறது என்பதைக் கண்டு மகிழ்வதோடு, இன்னும் அந்தப் பணியில் வெற்றிபெற நமக்கான ஊக்க நினைவு களாகவும் இவற்றைக் கொள்ளுகிறோம்.

அதே வேளையில் இன்னும் கூட தலைவர்களை ஜாதிச் சிமிழுக்குள் அடைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அவற்றைத் தடுக்க வேண்டும். ஜாதியை ஒழிக்கும் வரை பிரச்சாரம், போராட்டம், அரசு மூலம் செய்யப்பட வேண் டியவை என பல களங்கள் நமக்கும் காத்திருக்கின்றன.

Comments