பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: பாஜக படுதோல்வி ஆளும் காங்கிரஸ் அமோக வெற்றி பஞ்சாப் மாநில மக்கள் புகட்டிய பாடம்!

ஜலந்தர், பிப். 18- மத்தியில் ஆளும் பா.. அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் நிலையில் பஞ்சாப் தேர்தலில் பா... படுதோல்வி அடைந்து இருப்பது மக்களின் மனநிலையைக் காட்டுவதாக காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மத்தியில் ஆளும் பா.. அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து 80 நாட்களுக்கு மேலாக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடந்து தலைநகர் டில்லியில் போராடி வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடத்தப்படவிருந்த உள்ளாட்சி தேர்தல் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஒரு வருட காலத்திற்கு பிறகு பிப்ரவரி 14 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 8 மாநகராட்சிகள்,109 நகராட்சிகள், பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேலும் 4 வார்டுகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மொத்தமாக 71.39 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக மன்ஸா மாவட்டத்தில் 82.99சதவீதமும், குறைந்த பட்சமாக எஸ்ஏஎஸ் நகரில் 60.08 வாக்குகள் பதிவாகியிருந்தது. 2,302 வார்டுகளில் 9,222 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.

காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டன. மாநில கட்சியான சிரோமணி மற்றும் பா...வின் 20 ஆண்டுகள் கூட்டணிக் கட்சியான அகாலிதளம், பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தின் காரணமாக அண்மையில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் இந்த தேர்தலில் அந்த இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன.

17.2.2021 அன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 8 மாநகராட்சியில் பதிண்டா, ஹோஷியார்பூர், கற்பூரத்தாலா , அபோஹார் , பாட்டாலா , பதன்கோட் ஆகிய 6 மாநகராட்சிகளை ஆளும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

பதிண்டா மாநகராட்சியில் 53 ஆண்டுகளுக்கு பிறகு மேயர் பதவியை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. பதிண்டா நாடாளுமன்ற தொகுதி சிரோ மணி அகாலிதளம் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 50 இடங்களை கொண்ட அபோஹார் மாநகராட்சியில் 50 இடங்களையும், பதிண்டா 43, ஹோஷியார்பூர் 43 ,கற்பூரத்தாலா 43 , பாட்டாலா 35 , பதன்கோட் 37 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது.

மத்தியில் ஆளும் பா.. அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் நிலையில் பஞ்சாப் தேர்தலில் பா.. படுதோல்வி அடைந்து இருப்பதை மக்களின் மனநிலையைக் காட்டுவதாக காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தலின் வெற்றியானது அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Comments