ம.பி.யில் எதிர்க்கட்சிகளை வசப்படுத்தி ஆட்சியைப் பிடித்ததுபோல புதுச்சேரி மாநிலத்திலும் பா.ஜ.க.வின் அரசியல் பேரம்

கட்சி மாறிகளுக்கு  - வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்பவர்களுக்கு புதுச்சேரி மக்கள் பாடம் கற்பிப்பார்கள் - மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்!

மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பேர அரசியல் நடத்தி, ஆட்சியைப் பிடித்ததுபோல, புதுச்சேரி மாநிலத்திலும் பா... தன் கைவரிசையைக் காட்டுகிறது. வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்தவர்களுக்குப் புதுச்சேரி மக்கள் தேர்தலில் தக்கப் பாடம் கற்பிப்பார்கள் - அனுபவம் மிகுந்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் மீண்டும் புதுவை மாநிலத்தில் ஆட்சி அமையும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

புதுச்சேரி மக்களுக்கு காலந்தாழ்ந்தாவது ஜனநாயக ரீதியில் - என்ன காரணத்தை மனதிற்கொண்டோ - ஒரு மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது. அம்மாநில முதல மைச்சர் திரு.நாராயணசாமி அவர்கள் குறிப்பிட்டது போல், ‘‘இது புதுவை மக்களுக்கும், மக்களாட்சிக்கும் கிடைத்த வெற்றி!'' (இந்த முடிவுக்குப் பின்னால் வேறொரு திட்டமும் பா... - மத்திய ஆட்சியில் இருக்கக் கூடும் என்று பத்திரிகையாளர் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுவதையும் புறந்தள்ளிவிட முடியாது).

‘‘முள் படுக்கையிலே படுத்திருக்கும்

பரிதாப ஆட்சியாளர்களாக...''

கடந்த நான்கரை ஆண்டுகளாக புதுவை மக்களால் தேர்வு செய்யப்பட்ட புதுச்சேரி காங்கிரஸ் - தி.மு.. கூட்டணி அரசின் மக்கள் நலத் திட்டங்களை, புயலால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நிதி உதவி செய்யும் திட்டம்வரை எதையும் செய்ய விடாதநந்தி'யாகவே தடுத்துக் கொண்டு கிரண்பேடி என்ற ஒரு துணை நிலை ஆளுநர், தனக்குள்ள அதிகாரத்தை ஒரு தனி மனித எதேச்சதிகாரமாகவே கருதி நடந்து கொண்டார்! புதுச்சேரி மாநிலத்தில் ஜனநாயகம் மூச்சுத் திணறலிலேயே நடைபெற்று வந்தது!

புதுச்சேரி முதலமைச்சரும், அமைச்சர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டே ‘‘முள் படுக்கையிலே படுத்திருக்கும் பரிதாப ஆட்சியாளர்களாக'' ஆக்கப்பட்டார்கள்!

என்றாலும், தாக்குப் பிடிக்கத் தவறவில்லை முதல மைச்சர் தனக்குள்ள தெளிவான அரசியல் அனுபவத் தாலும், பக்குவத்தாலும். பாராட்டப்பட வேண்டியவர்கள் முதல்வரும், அமைச்சர்களும்!

வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்வது எவ்வகையில் நாணயம்?

இப்போது பா... கடைசியாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைத் தம் பக்கம் இழுத்து புதுவை ஆட்சியைக் கவிழ்த்து, சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் ‘‘பொல்திக்'' -  (பழைய பிரெஞ்ச் முறை அரசியல் சொல் இது) புதுச் சேரிக்கே உரிய கட்சி மாறுவது என்ற ‘‘வித்தைகள்''மூலம் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்வது எவ்வகையில் நாணயம்? மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.

பதவி சுகத்தை இன்றுவரை அனுபவித்தவர்களை சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் போது பா... தம் வயப்படுத்திட ‘‘வசிய மந்திரங்களை''யெல்லாம் செய் வதும், முதல்வரை உடனே ராஜினாமா செய்யுங்கள் என்று கூக்குரலிடுவதும் நியாயம்தானா?

பல மாநிலங்களில் இன்று பா... ஆட்சி அமைத் ததே இந்த ‘‘ஆயாராம் காயாராம்'' கட்சி மாறிடும் அரசியல் பச்சோந்தி படேநாயகர்களின் பவுசின் மூலம்தான் என்பது இந்திய  பா... மாநில அரசியல் தேசப் படத்தைப் பார்த்தாலே தெரியும்.

அசிங்கத்திற்குப்

பொட்டு வைத்துக் கொண்டாடும் இழிநிலை!

தங்கள் வசமிருந்த மகாராட்டிரத்தை என்.டி.. (NDA) என்ற பா... தேசிய முன்னணி இழந்தது - இந்த ‘‘வித்தை''யில் முழுக்க ஏமாந்ததின் விளைவு தானே! ‘‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு'' என்று சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் நிரூபித்தார்கள்; பா...வின் முறைகேடான செயல்பாடுகளுக்குப் பல ஆளுநர்கள் துணை போவது ‘‘அசிங்கத்திற்குப் பொட்டு வைத்துக் கொண்டாடும்'' இழிநிலையாகும்!

அதிகாலை 4 மணிக்குக் கூட அந்த  ஆளுநர் தயாராகி உத்தரவு கொடுத்த அரசியல் கூத்துகள் எல்லாம் அரங்கேறின!! ஆனால், ‘‘எண்ணெய் செலவே தவிர பிள்ளை பிழைக்காத நிலை'' ஏற்பட்டு, ‘‘மூக் கறுபட்ட முத்தண்ணன்களாக'' மராட்டியத்தில் ஆட் சியை இழந்து, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ்  ஆட்சி ஏற்பட்டு நடைபெற்றுவரும் நிலை.

ராஜஸ்தானிலும் முயன்று தோற்று - ‘‘கருவாட்டுக்கு மோப்பம் பிடிக்கும் பூனையாகவே'' பா... அங்கு உள்ளது!

மக்கள் வாக்களித்து ஆட்சி அமைத்தால்தான் அது வெற்றி - உண்மையான வெற்றி ஜனநாயகத்தில்!

கட்சி மாறும் - விலை போகும் இந்தஅரசியல் சரக்கு'களை வைத்து வியாபாரம் நடத்தினால், நிச்சயம் மக்களிடம்போணி'யாகாது ஒருபோதும்.

புதுச்சேரி மக்கள் தக்க பாடத்தைக் கற்பிக்கத் தவறமாட்டார்கள்!

புதுவையில் ஆட்சியைக் கவிழ்த்தாலும், இன்னும் மூன்று மாதங்களில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர் தலில் புதுச்சேரி மக்கள் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தக்க பாடத்தைக் கற்பிக்கத் தவறமாட்டார்கள்!

புதுவையில் தற்போது கூறப்படும் இரு அணிகளுக் குள்ள சமபலம் என்பதுகூட எப்படி வந்தது? மூன்று நியமன எம்.எல்..,க்கள் சேர்த்ததின் விளைவுதானே!

(நியமன எம்.எல்..,க்களுக்கு வாக்களிக்கும் உரிமையை இல்லாமல் செய்வதே சரியான ஜனநாயக முறையாக இனி எதிர்காலத்திலாவது ஆகவேண்டும்; அது எந்த ஆளும் அணியாக இருந்தாலும்கூட!)

புதுச்சேரியைக்காவி மயமாக்கவோ' அல்லது ஜாதி, அரசியல் மயமாக்கவோ இடந்தராது, உண்மையான மக்களாட்சியை நிறுவிட அம்மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள் - வரும் தேர்தலில்!


 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

17.2.2021

Comments