எல்லாவற்றிற்கும் மார்தட்டி, தோள்தட்டி, தொடை தட்டிப் புறப்படக்கூடியவர்கள் தஞ்சை மாவட்டத் தோழர்கள்!

வழக்குரைஞர் அமர்சிங் பவளவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் பெருமிதம்

தஞ்சை, பிப். 11  போராட்ட வீரர்கள் என்றாலும், நிதியளிப்பு என்று சொன்னாலும், ‘விடுதலை' ஏட்டைப் பரப்பவேண்டும்; இயக்க இதழ்களைத் தாங்கியிருக்கவேண்டும் என்று சொன்னாலும், பாசறைக்குத் தோழர்கள் வரவேண்டும் என்று சொன்னாலும், எல்லாவற்றிற்கும் மார்தட்டி முன்னால் நிற்கக்கூடியவர்கள்; தோள் தட்டி, தொடை தட்டிப் புறப்படக் கூடியவர்கள் யார் என்று சொன்னால், அவர்கள் எல்லாம் தஞ்சை மாவட்டத் தோழர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 7.2.2021 அன்று காலை 10 மணியளவில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்  அவர்களின்பவளவிழா தஞ்சை இராமசாமி திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இவ்விழாவில் காணொலிமூலம் பாராட் டுரை - சிறப்புரை ஆற்றினார்  திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது சிறப்புரை வருமாறு:

தஞ்சை மாவட்டத் தலைவர்

அமர்சிங் அவர்களின் பவளவிழா

இவ்விழாவிற்குத் தலையேற்று இருக்கக்கூடிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் துணைத் தலைவரும், திராவிடர்  கழகக் காப்பா ளர்களில் ஒருவரும், முதுபெரும் பெரியார் பெருந் தொண்டருமான அன்பிற்குரிய அய்யா மானமிகு இராசகிரி தங்கராசு அவர்களே,

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய  அறிஞர் பெருமக்களே,  ஏற்புரை வழங்கவிருக்கக் கூடிய விழா நாயகர் அமர்சிங் அவர்களே, அமர்சிங் குடும்பத்தவர்களே, மற்றும் ஏராளமாக இங்கே வருகை புரிந்துள்ள அருமை நண்பர்களே,

அமர்சிங் அவர்களுடைய குருதிக் குடும்பத் தைச் சார்ந்த அருமை நண்பர் கலைச்செல்வி, பெரியார் செல்வன், சாக்ரட்டீஸ், இந்துமதி, கலைமகள், மற்றும் இளந்தளிர்கள்  இந்திரஜித், அன்புச்செழியன் ஆகிய அனைவருக்கும் என் னுடைய அன்பார்ந்த வணக்கமும், பாராட்டு களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதற்கண் இந்த விழாவில் நேரில் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கும் என்று நான் நினைத்தேன். காரணம், அதற்குள் சூழ்நிலைகள் மாறலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், மருத்து வர்கள், ‘‘கண்டிப்பாக நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு இன்னும் சிலவாரங்கள் இருக் கின்றன. அதுவரையில்   , கொஞ்சம் பாதுகாப்பாக நீங்கள் இருப்பதைவிட உங்கள்மூலம் மற்றவர் களுக்கோ கூட இந்தத் தொற்றுகள் பரவக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம் என்கிற அச்சம் ஏற் பட்டுவிடக் கூடாது யாருக்கும்; ஆகவேதான், நீங்கள் காணொலிமூலமாக இந்நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள்; மற்ற தோழர்கள் செல்லட்டும்'' என்று கூறினார்கள்.

மருத்துவர்களுடைய அறிவுரையை தட்டிக் கழிக்க முடியாத சூழலில்தான், இங்கே காணொலி வாயிலாக நிகழ்ச்சியைக் கண்டு உங்களைப் போலவே, நானும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறேன்.

இயக்கத்திற்குக் கிடைக்க முடியாத பெருஞ்செல்வம், கொள்கைச் செல்வம்

அருமை நண்பர் அமர்சிங் அவர்களுக்கு 75 வயது என்பதே நம்ப முடியாத ஒன்று. காரணம், அவர் என்றைக்கும் இளைஞரைப் போல, துடிப்பு மிகுந்த இளைஞரைப் போல செயல்படுபவர்.

நாங்கள் சொல்லுவதற்கு முன்பாக, தலைமை எதை நினைக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, குறிப்பறிந்து செய்யக்கூடிய மாவட்டத் தலை வர்களில் நெம்பர் 1  என்று சொல்லக்கூடிய அள விற்கு, எங்களுக்கெல்லாம், இயக்கத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பேறு ஆகும்; பெருஞ்செல்வம், கொள்கைச் செல்வம் அவர்.

நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்; இருந் தாலும், இந்த நேரத்தில் சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதற்காகத்தான் மீண்டும் மீண்டும் சில செய்திகளை, ஒரு ஆசிரியர் என்ற முறையில், ஆசிரியர்களுக்குத் திரும்பத் திரும்பப் பாடங்களைச் சொல்லித்தான் பழக்கம். அந்த வகையிலும் நிச்சயமாக இங்கே  அதனைச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

பெரியார் அவர்கள், ஏராளமான சொத்துக்களை அல்லவா விட்டுச் சென்றிருக்கிறார் என்று பல பேர் வியப்போடு கேட்பதும், ஆச்சரியத்தோடு கேட் பதும், சிலர் அவாவுடன் கேட்பதும் உண்டு.

எவரிடமும் இல்லாத சொத்துகள்

எங்கள் இயக்கத்தில் இருக்கின்றன!

அப்படிப்பட்டவர்களுக்குப் பல நேரங்களில் நான் சொன்ன பதில் இதுதான். ஏராளமான சொத் துகள், எவரிடமும் இல்லாத சொத்துகள் - பெரியார் சேர்த்து வைத்த சொத்துகளும் - பெரியாரிடம் கொடுக்கப்பட்ட சொத்துகள் எல்லாம் நிறைய இருக்கின்றன. உண்மைதான், அதனை நாங்கள் மறுக்க விரும்பவில்லை.

அசையும் சொத்துகளும் ஏராளமாக இருக்கின் றன - அசையா சொத்துகளும் அதைவிட அதிக மாக இருக்கின்றன என்று நாம் சொல்லும்பொழுது,

அவர்கள் மூக்கின்மேல் விரல் வைத்து, ‘‘அப்படியா, எத்தனை கோடி ரூபாய் இருக்கும்?'' என்று கேட்பார்கள்.

அப்போது சொல்வோம், அசையும்  சொத்துகள் என்பது இந்த இயக்கத்தைப் பொறுத்தவரையில், இராணுவக் கட்டுப்பாடு மிகுந்த, ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, புகழுரைகளைப்பற்றி கவலைப் படாத, நன்றியை எதிர்பார்க்காத, செயல்வீரர்களாக இருக்கக் கூடிய நம்முடைய தோழர்கள், தொண் டர்கள் இருக்கிறார்களே, இயக்க செயல்வீரர்கள், வீராங்கனைகள் இவர்கள்தான் எங்களின் எப்பொழுதும் நிரந்தமான அசைக்க முடியாத அசையும் சொத்துகள்.

அசைக்க முடியாத அசையா சொத்துகள் என்று சொல்லவேண்டுமானால், அது எங்களுடைய  லட்சியங்கள் - அடிப்படை லட்சியங்கள் - திராவி டம் வெல்லும் என்று இன்றைக்கும் நாம் பெருமையோடு தலைநிமிர்த்தி சொல்கிறோம்.

ஆயிரம் பேர் கூடி நின்றாலும், எத்தனை பேர் இதற்குத் திட்டம் வகுத்தாலும், எத்தனை அடிமை களை அவர்கள் கொத்தடிமைகளாக குத்தகைக்கு எடுத்தாலும்கூட, நிச்சயமாக திராவிடம் வெல்லும் என்று தலைநிமிர்ந்து சொல்லக்கூடிய ஒரு துணிவிற்கு அடிப்படை காரணமே இவைதான்.

எண்ணிக்கையைவிட, எண்ண பலத்தாலும்,  லட்சிய பலத்தாலும் இருக்கக்கூடிய போர் வீரர் களைப்போலத்தான் எங்களுடைய தோழர்கள் அசையும் சொத்துக்களாக இருக்கிறார்கள்.

என்னுடைய தொண்டர்கள், தோழர்கள் துறவிகளைவிட மேலானவர்கள்

இந்தியாவினுடைய மக்கள் தொகை 130 கோடி. ஆனால், அவர்களைப் பாதுகாக்கின்ற ராணுவத் தினரின் எண்ணிக்கை 130 கோடியா? அதே அளவிற்கா இருக்கிறார்கள்? என்றால், நிச்சயமாக இல்லை. அது ஒன்று அல்லது ஒன்றரை கோடிதான். அதிலும், தரைப்படை, விமானப்படை, கப்பற்படை என்று முப்படைகள் உண்டு. அந்த முப்படைகளும் தங்களை ஒப்படைத்துக்கொண்டிருக்கக் கூடிய அளவிற்கு, எப்படி அவர்கள் மிக முக்கியமான பணியைச் செய்கிறார்களோ, அதுபோலத்தான் எங்களுடைய இயக்கம் - திராவிடர் கழகத்தில், இந்தக் கருஞ்சட்டைப் பாசறையில், தன்னலத்தை மறந்து பணியாற்றும் என்னுடைய தொண்டர்கள், தோழர்கள் துறவிகளைவிட மேலானவர்கள்.

துறவிகளிடம், ‘‘நீங்கள் ஏன் துறவி ஆனீர்கள்?'' என்று நீங்கள் கேட்டால்,

‘‘நாங்கள் மோட்சத்திற்குப் போகவேண்டும்; வீடு பேறு அடையவேண்டும்'' என்று அவர்கள் கையை மேலே காட்டுவார்கள்.

எங்களுடைய தோழர்களுக்கு மோட்சத்திலும் நம்பிக்கையில்லை; நரகத்திலும் நம்பிக்கையில்லை.

எங்களுக்கு மேலுலகம், கீழுலகம் என்பதில் எல்லாம் நம்பிக்கையில்லை.

இந்த உலகம் உண்மையானது - மனிதர்களை நினைத்து வா ழவேண்டியவர்கள் நாம்;

கடவுளை நினைத்து, ஜாதியைப் புதுப்பித்துக் கொண்டிருக்கக் கூடாதவர்கள் நாம்.

கடவுளை காட்டி, தீண்டாமையை நியாயப் படுத்தக் கூடியவர்கள் அல்ல நாம்.

மதங்களைக் காட்டி, பெண்ணடிமையை இந்த நாட்டில் நீடித்து வைத்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல நாம்

என்று வேகமாகத் தந்தை பெரியார் தன்னுடைய லட்சியப் பயணத்தைத் தொடங்கிய நேரத்தில், எண்ணற்றவர்கள் வந்திருக்கிறார்கள்.

அய்யா அவர்கள் சொல்வார்கள்; இந்த மாவட் டத்திற்கு ஒரு பெரிய பெருமை உண்டு. இன்றைக்கு இந்த மாவட்டம் பல சிறிய மாவட்டங்களாக பெருகி யிருக்கின்ற சூழலிலும், அதே நிலையில்தான் இருக்கிறது.

பழைய தஞ்சை மாவட்டத்தைப்பற்றி அய்யா அவர்கள் குறிப்பிட்டார்; இப்பொழுதும் அது பொருந்தக் கூடிய அளவில்தான் இருக்கிறது.

‘‘ஒரு தராசு தட்டில் இந்த மாவட்டமும், இன்னொரு தட்டில் கழக மாவட்டங்களையெல்லாம் வைத்தால்கூட, இந்தத் தட்டு அடியில்தான் இருக்கும்; கனமாகத்தான் இருக்கும். மேலே அவ்வளவு சீக்கிரத்தில் வராது. காரணம், எனக்கு கொள்கைப் பண்ணையம் இந்த மாவட்டம்தான்'' என்று குறிப்பிட்டார்.

எல்லாவற்றிற்கும் மார்தட்டி முன்னால் நிற்கக்கூடியவர்கள் தஞ்சை மாவட்டத் தோழர்கள்

போராட்ட வீரர்கள் என்றாலும், நிதியளிப்பு என்று சொன்னாலும், விடுதலை ஏட்டைப் பரப்ப வேண்டும்; இயக்க இதழ்களைத் தாங்கியிருக்க வேண்டும் என்று சொன்னாலும், பாசறைக்குத் தோழர்கள் வரவேண்டும் என்று சொன்னாலும், எல்லாவற்றிற்கும் மார்தட்டி முன்னால் நிற்கக் கூடியவர்கள்; தோள் தட்டி, தொடை தட்டிப் புறப்படக் கூடியவர்கள் யார் என்று சொன்னால், அவர்கள் எல்லாம் தஞ்சை மாவட்டத் தோழர்கள்.

அதுபோல, தியாக மறவர்களாக, தன்னலம் மறுத்தவர்களாக, உயிர்த் தியாகத்தைக்கூட பொருட்படுத்தாதவர்களாக எத்தனையோ தஞ்சை மையூத்துகள் இருக்கிறார்கள்; எத்தனையோ ராஜகோபால்கள் இருக்கிறார்கள்; எத்தனையோ குப்புசாமிகள் இருக்கிறார்கள்; எத்தனையோ சாமி.நாகராஜன்கள் இருக்கிறார்கள்; எத்தனையோ வரகூர் நடராஜன்கள் இருக்கிறார்கள்; இன்னும் எத்தனையோ பேரை சொல்லிக் கொண்ட போக லாம். இன்றைக்கும் இருக்கிறார்கள்; நம்முடைய ஒரு சில தோழர்களுக்கு, இவர் பெயரைச் சொல்ல வில்லை, அவர் பெயரைச் சொல்லவில்லையே என்று உங்களுக்குத் தோன்றும். ஏராளமான தோழர்கள் கட்டுப்பாடு மிகுந்தவர்கள். வயது இடைவெளி இல்லாமல் இளைஞர்களாக இருந் தாலும்; அப்படிப்பட்ட அற்புதமான ஓர் இயக்கக் குடும்பத்தில்தான், ஒரு சாதாரண எளிய குடும் பத்தில், திருவையாறுக்குப் பக்கத்தில் இருக்கக் கூடிய பொன்னாவரம் என்ற ஒரு கிராமத்தில் - விவசாயக் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்து, மிகப்பெரிய அளவில், அவர் ஒரு விவசாயியாகவே ஆன சூழ்நிலையில்தான், பிள்ளை பிடிப்பவர்களைப்போல, பெரியாருடைய இயக்கம் அவரைப் பிடித்துக் கொண்டது; அவரை இயக்கம் பிடித்துக் கொண்டது - இயக்கத்தை அவர் பிடித்துக் கொண்டார்.

எனவேதான், இருசாராரும் வளரக்கூடிய வாய்ப்புகள் நிரம்ப ஏற்பட்டது. அதைத்தான் நீங்கள் சற்றுநேரத்திற்கு முன்பு அவருடைய ஆற்றலைப் பார்த்தீர்கள்.

முதலமைச்சராகப் பதவியேற்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் திறந்த முதல் சிலை!

இந்த இயக்கத்தில் சேர்ந்தவர்கள் எப்படி? ஒருமுறை தருமபுரியில் தந்தை பெரியாருடைய சிலையை திறந்த நேரத்தில், கலைஞர் அவர்கள் அப்பொழுதுதான் முதலமைச்சராகி இருக்கிறார். அண்ணா திறந்து வைப்பார் என்று தயாரான சிலை அது. அண்ணா அவர்கள் மறைந்து, நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச் சராகப் பொறுப்பேற்ற நிலையில், முதல் சிலையை தருமபுரியில்தான் அய்யா அவர்களின் சிலையைத் திறந்து வைத்தார்கள்.

அண்ணா அவர்கள், திருச்சியில் தந்தை பெரியாரின் சிலையைத் திறந்து வைத்து, ஒரு வரலாற்றுக் காவியம் போன்ற ஓர் உரையை ஆற்றினார். பெரியார் ஒரு சகாப்தம்; பெரியார் ஒரு காலகட்டம்; பெரியார் ஒரு திருப்பம் என்ற பொன் மொழிகள் எல்லாம் அந்த உரையில் இடம்பெற்றன.

அப்போதுகூட அண்ணா சொன்னார், ‘‘காஞ்சிபுரத்தில் என்னுடைய தொத்தாவிடம், ‘‘உங்கள் பிள்ளை படித்துவிட்டு, வேலைக்குப் போயிருக் கிறாரா?'' என்று கேட்கப்பட்டபோது,

‘‘இல்லை, இல்லை; யாரோ ஒருவர் ஈரோட் டிலிருந்து வந்து பிள்ளையைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்'' என்று கூறியதை குறிப்பிட்டு அவருடைய உரையை ஆரம்பித்தார்.

நாங்கள் உருப்பட்டு இருக்கிறோமா இல்லையா?

தருமபுரியில் தந்தை பெரியார் சிலையை முத லமைச்சர் ஆன நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்து உரையாற்றும் பொழுது, ‘‘இந்த ஊருக்கு எத்தனையோ முறை நாங்கள் எல்லாம் மாணவப் பருவத்தில் வந்திருக் கின்றோம்; அது வேறு செய்தி; ஆனால், இப் பொழுது நான் முதலமைச்சராக இருந்து அய்யா வின் சிலையைத் திறந்து வைக்கிறேன் என்று சொன்னால்,

ஒன்று, நாங்கள் ஆரம்பத்தில் திருவாரூரில் திராவிடர் கழகத்தில் மாணவப் பருவத்தில் சேர்ந்தபொழுதுகூட,  ‘‘இவன் இந்த இயக்கத்திற்குப் போயிருக்கிறானே, சாமி இல்லை என்ற கட்சிக்குப் போயிருக்கிறானே, கருப்புச் சட்டையைப் போட்டுக் கொண்டிருக்கிறார்களே, இவன் உருப் படுவானா?'' என்று கேட்டார்கள்.

நான் உருப்பட்டு இருக்கிறேனா இல்லையா என்பதை ஊர் அறியும், உலகம் அறியும்'' என்று அவருடைய உரையை ஆரம்பித்தார்.

அதுபோலத்தான் நண்பர்களே, முழுக்கமுழுக்க உருப்பட்டு இருக்கிறோமா இல்லையா என்பதற்கு நாங்களே எடுத்துக்காட்டு - இந்த மேடையே எடுத்துக்காட்டு. இந்த மேடையில் அமர்ந்திருக் கின்றவர்கள் அய்யா உபயதுல்லா அவர்களா னாலும் சரி, அதேபோல, மேனாள் மத்திய இணை நிதியமைச்சராக இருந்து ஆற்றல்மிக்கவராக இன்றைக்கும் கொள்கை வீரராகத் திகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய அருமைச் சகோதரர் பழனிமாணிக்கம் அவர்களானாலும் சரி,

கலை உலகத்தில் மிகப்பெரிய மன்னன் என்று சொல்லக்கூடிய, நடிப்புத் துறையில் ஒரு தமிழன் உயர்ந்து, இந்த அளவிற்கு உலக அளவிற்கு யாரும் உயரவில்லை என்ற பெருமையைப் படைத்தசிவாஜி' என்ற பட்டத்தை தந்தை பெரியாரிடம் பெற்றவரே  - தேர்தலில் நின்ற நேரத்தில், ஒரு சாதாரண இளைஞனால்கூட அவரை வென்று காட்ட முடியும்; காரணம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அந்தப் பலம் உண்டு; அந்த சக்தி உண்டு என்று காட்டுவதற்கு சான்றாக இதோ மேடையில் அமர்ந்திருக்கின்ற நம்முடைய துரை.சந்திரசேகரன் அவர்களே சாட்சி.

(தொடரும்)

Comments