ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

சீனாவோடு வர்த்தக ஒப்பந்தத்தை மோடி அரசு புதுப்பித்து வருகிறது. இதன் காரணமாகவே, இந்திய எல்லைப் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு பற்றி கருத்து தெரிவிக்காமல் அரசு உள்ளது என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிகல், சென்னை:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.800 கோடியில் அமைக்கப் பட்ட உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு வல்லபாய் படேல் பெயரை நீக்கி விட்டு நரேந்திர மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதிமுக-பாஜக கூட்டணிக்கு இடங்கள் முடிவு செய்யும் முன்னரே, நெல்லையில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ஓபிசி பிரிவினரில் தொகுப்பு ஒதுக்கீட்டை ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் பிரிப்பது அறிவியல்பூர்வமாக இருக்காது என தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவர் நீதிபதி ஈஸ்வரைய்யா கருத்திட்டுள்ளார்.

இந்திய ஜனநாயகத்தைக் காக்கும் பணியில் காங்கிரசில் உள்கட்சி ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் பொறுப்பு ராகுல் காந்திக்கு உள்ளது என எழுத்தாளர் கபில் கோமிரெட்டி எழுதியுள்ளார்.

அரசு வங்கிகளைப் போல அரசின் திட்டங்களுக்கான நிதி மற்றும் வரி வசூலுக்கு  தனியார் வங்கிகள் மீதான தடையை மோடி அரசு நீக்கியுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

நாட்டில் உழவர்கள் மற்றும் விவசாய சமூகத்தின் அடிப்படை மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க தேசிய மற்றும் மாநில அளவில் சட்டக் கமிஷன்களை அமைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது.

காங்கிரசுடன், மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து வாக்களித்ததால் ருக்மிணி மேட் கவுடா மைசூரு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மைசூரு நகராட்சியில் (எம்.சி.சி) முதல் முறையாக அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பாஜகவின் கனவு ஜே.டி (எஸ்) மற்றும் காங்கிரசால் முடிவுக்கு வந்தது.

பி.பி.சி. நியூஸ் தமிழ்:

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு பல இடங்களில் அப்பட்டமாக மனித உரிமைகள் மீறப்படுவதாக அய்.நா மனித உரிமைகள் ஆணைய தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

.பி. சட்டமன்றம் 2021 சட்டவிரோத மதமாற்ற தடை மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது. இந்த மசோதா ஆளுநரின் முறையான ஒப்புதலுக்குப் பிறகு ஒரு சட்டமாக மாறுவதற்கு முன்னர் அதன் ஒப்புதலுக்காக .பி. சட்டமன்ற மேலவைக்கு  அனுப்பப்படும். ஆளும் பாஜகவுக்கு மேலவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், மசோதாவை நிறைவேற்றுவது பாஜகவிற்கு சவாலாக இருக்கும்.

- குடந்தை கருணா

25.2.2021

Comments