செய்தியும் ...சிந்தனையும்...!

 தேர்தல் ஞானோதயம்!' காவிரி - வைகை - குண்டாறு இடையே கால்வாய் ரூ.14,400 கோடியில் நதிகள் இணைப்புத் திட்டம் : - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.


கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் உதிக்காத யோசனையும், திட்டமும், அதுவென்ன தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும் இத்தகைய அறிவிப்புகள்.


இத்திட்டம் ஏற்கெனவே தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒன்று. அ.தி.மு.க. எதையும் சொந்தப் புத்தியோடு திட்டம் தீட்டுவது கிடையாது.

இதைக் கூற ஒரு நிதியமைச்சரா? வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு : - பிரதமருக்கு சோனியா கடிதம்.

அதுதான் எனக்கும் தர்மசங்கடம்'' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரே வார்த்தையில் சமாதானம் சொல்லிவிட்டாரே! இப்படி சொல்லுவதற்கு ஒரு நிதி அமைச்சர் தேவையா?

ஏன் சொல்லவில்லை?  மு.க.ஸ்டாலினால் அ.தி.மு.க.விடமிருந்து ஆட்சியைத் தட்டிப் பறிக்க முடியாது : - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

தட்டிப் பறிக்கும் பிரச்சினையே கிடையாது. வெகுமக்களே ஒப்படைக்கத் தயராகி விட்டார்களே! ஆமாம், எடப்பாடியிடமிருந்து - என்று ஏன் சொல்லவில்லையாம் ஓ.பி.எஸ்.?

நினைப்புப் பிழைப்பைக் கெடுக்கும்!  தேர்தலில் தி.மு.க. திட்டமிட்டு வேலை செய்ய சதி: - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ஆக, இவர்கள் கையில் இந்தத் திட்டமிருப்பது தெரிகிறது. தான் முந்திக் கொண்டால், தங்கள்மீது சந்தேகம் வராது என்ற நினைப்பு - இத்தகைய நினைப்புகள் பிழைப்பைக் கெடுக்கும். குறுக்குப் புத்தி வேண்டாம்! அரசு பொதுத் தேர்வில் மாணவ, மாணவிகள் வெற்றி பெற உத்தமர் கோவிலில் சிறப்பு ஹோமம்!.

பிள்ளைகளைப் படிக்க விடுங்கள் - பிள்ளையார்களைக் காட்டி, சோம்பேறியாக்காதீர்கள் இருபால் மாணவச் செல்வங்களை!

கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள்தான்!  புதிய கல்விக் கொள்கை வழி எந்த மொழியும் திணிக்கப்படாது : - மத்திய கல்வி அமைச்சகம்.

ஓ, ஏற்கெனவே அறிவித்த புதிய கல்விக் கொள்கையைத் தூக்கி எறிந்துவிட்டு, மற்றொரு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துவிட்டார்களோ! கெட்டிக்காரன்' புளுகு எட்டே நாள் - நினைவில் இருக்கட்டும்!

அ.தி.மு.க.வின் தற்கொலை!  அ.தி.மு.க.வுக்கு இது வாழ்வா - சாவா? தேர்தல் : - வைத்திலிங்கம் எம்.பி. கருத்து

ஆக, அ.தி.மு.க. ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. பா.ஜ.க.வில் அய்க்கியமாகிவிட - தற்கொலைக்கு அழைப்பு விடுக்காமல் இருந்தால் சரி!

சுலபத்தில் அனுமதிப்பார்களா?'  விராலிமலைக் கோவிலில் தமிழில் குடமுழுக்கு : - தெய்வீகத் தமிழ் பேரவை வலியுறுத்தல்.

சங்கராச்சாரியாரும், பார்ப்பன சனாதனிகளும், துக்ளக்', தினமணி' கும்பலும் போர்க்கொடி தூக்கி விடுவார்களே!

மதமென்னும் பேய்' இராமநாதபுரம் அருகில் கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தாரணியை (வயது 19) பேய்' விரட்டுவதாகக் கூறி அடித்ததால், மாணவி மரணம்.

மதம் என்னும் பேய் பீடியாதிருக்க வேண்டும் என்றார் வடலூர் வள்ளலார்.

Comments