சுட்டது உடலையல்ல - சனாதனத்தின் வேரை!

கலி.பூங்குன்றன்

‘‘தனமே நீ'' - சுட்டது  ஓர் உடலை அல்ல - சனாதனத்தின்மீது - நீ வைத்த தீ ஓர் உடலின் மீதல்ல - வருணதருமத்தின் வாயிலும், வயிற்றிலும்!

பெண்ணே நீ பேதமையின் சின்னம் - அடிமையின் அடையாளம் - ‘பிள்ளைப்' பூச்சியே நீ!' என்று பேசும் பிற்போக்கு மதவாதத்தின்மீது நீ வைத்தது ஊழித் தீ!

சுடுகாட்டுக்கு வரலாமா பெண்கள்?' என்றனர்; சுடுகாட்டுக்கு மட்டுமல்ல; இறந்தவரின் உடலைப் பாடையில் ஏற்றி பெண்களே சுடுகாட்டுக்கு - இடுகாட்டுக்குச் சுமந்து வந்த புரட்சியை நடத்திக் காட்டியது திராவிடர் கழகம்.

தலைமகன் தான் கொள்ளி வைக்கவேண்டும் - பெண்ணுக்கு அந்த உரிமை கிடையாது என்று உறுமிய ஓநாய்களின் வாலை ஒட்ட நறுக்கிய இயக்கத்தின் கனலாய் எழுந்து நின்று - அன்று உன் தந்தை உடலுக்குத் தீ மூட்டினாய்! (14.2.2021).

பெண்களின் கையில் சனாதனம் கொடுத்த கரண்டியைப் பறிமுதல் செய்து கல்வியைக் கொடுத்தவர் தந்தை பெரியார்.

அது எத்தகைய எழுச்சித் தீயை மூட்டியது என்பதை நீ மூட்டிய தீயின்போது கண்டோம்! கண்டோம்!!

அருள்ஜோதி மறைந்தாலும் அவரின் மகள் நீ வைத்த தீ - ஜோதியாய் என்றென்றும் பிரகாசிக்கும்!

அய்யா மறையவில்லை - அன்னையார் மறையவில்லை; ஆசிரியர்  மானமிகு வீரமணி அவர்களின் தலைமையில் அவர்கள் அளித்துச் சென்ற இலட்சிய எழுச்சிச் சுடர் - செந்தீயாய் எத்திசையிலும் ஏதோ ஒரு வடிவத்தில் கனன்று கனன்று எழுந்து எழுந்து காரிருளை விரட்டி விரட்டியடித்துக் கொண்டுதான் இருக்கிறது - அதன் சாட்சியமே கடந்த ஞாயிறன்று நாகையிலே நடந்த நிகழ்வு - தீ பரவட்டும்! பரவட்டும்!!

குறிப்பு: மா.அருள்ஜோதி எம்.பி.., பிஎச்.டி., வாழ்விணையர் கலைச்செல்வி பி.., மகள்கள், இலக்கியத் தேனீ எம்.., எம்.பில்.,  தனமே நீ

எம்.எஸ்ஸி., மருமகன்கள் சீனிவாசன், வீரமணி இருவரும் பொறியியல் பட்டதாரிகள்.

மா.அருள்ஜோதி - கலைச்செல்வி வாழ்க்கை இணைநல ஒப்பந்தம் 1980 செப்டம்பர் முதல் தேதியன்று மயிலாடுதுறையிலும், தனமே நீ - வீரமணி வாழ்க்கை இணைநல ஒப்பந்தம் 2010 நவம்பர் 21 அன்று ஈரோட்டிலும் கழகத் தலைவர் சுயமரியாதைக் குடும்பங்களின் ஒரே தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையிலும் வாழ்க்கை இணைநல ஒப்பந்தங்கள் நடைபெற்றன. வளமான, சீரான வாழ்க்கையே!

20 பேருக்குமேல் உள்ள ஒரு பெரிய குடும்பத்தின் தாயாக - எவ்வளவோ இடர்ப்பாடுகள் சு(சூ)ழல்களுக்கிடையே அணையா தீபமாகக் குடும்பத்தைக் காத்திட்ட எங்கள் அன்னையார் தனம் அவர்களின் நினைவாகவேதனமே நீ' என்று பெயர் சூட்டப்பட்டது.

எவ்வித சிறு துரும்பு சடங்குகளுமின்றி செம்மாந்த பகுத்தறிவு நெறியில் இறுதி நிகழ்ச்சிகள் நடந்தேற ஒத்துழைத்த உற்றார் உறவினர்களுக்கு நன்றி! நன்றி!!

(நினைவேந்தல் 21.2.2021, நாகையில்).

Comments