“ஆட்டுக்குத் தாடி எதற்கு நாட்டுக்குக் கவர்னர் எதற்கு?”

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் சிவசேனா கட்சி மற்றும் ஆளுநர் பக்த் சிங் கோஷ்யாரி இடையே கடும் பிரச்சினை நிலவி வருகிறது. பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி உடைந்து காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அரசு அமைத்ததில் இருந்தே இந்தப் பிரச்சினை ஒன்றன்பின் ஒன்றாக அதிகரித்து வருகின்றது.   இதில் பாஜகவினர் ஆளுநருக்கு ஆதரவாகக் கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப் பூர்வ நாளேடான 'சாம்னா' பத்திரிகையின் தலையங்கத்தில்,

சமீபத்தில் மகாராஷ்டிர ஆளுநர்பகத்சிங் கோஷ்யாரி மாநில அரசு விமானத்தில் டேராடூன் செல்ல விரும்பினார். இதற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.  எனவே இதனை பாஜக ஒரு பிரச்சினையாக்க விரும்புகிறது.  இதற்குக் காரணம் தனிப்பட்ட பயணங்களுக்காக மாநில முதல்வரும் அரசு விமானத்தைப் பயன்படுத்த முடியாது என்பதாகும். ஆகவே விதிமுறைப்படியே முதல்வர் அலுவலகம் செயல்பட்டுள்ளது.

இருப்பினும் மாநில அரசு ஆணவப்போக்குடன் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்.  ஆணவத்துடன் யார் செயல்படுகிறார்கள் என்பது நாட்டுக்கு நன்கு தெரியும்.  டில்லி எல்லைகளில் நடந்துவரும் போராட்டத்தில் 200-க்கும்மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த போதும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு தயாராக இல்லை என்பது ஆணவம் இல்லையா?

அது மட்டுமின்றி, மகாராஷ்டிரா சட்டமேல வைக்கு மாநில அமைச்சரவைக்கான ஒதுக்கீட்டின் கீழ் 12 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதுவரை ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை.  மகாராஷ்டிரா ஆளுநர் மத்திய அரசால் ஆட்டுவிக்கப்படுகிறார். மத்திய அரசு அரசமைப்பு  சட்ட நெறிகள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என  விரும்பினால் ஆளுநர் கோஷ்யாரியை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.”  எனக் கூறப்பட்டுள்ளது

 கேரளா, மேற்குவங்கம், பாண்டிச்சேரி, ராஜஸ்தான் உள்ளிட்ட பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மத்திய அரசு தனது முகவர்களாக அமர்த்தியுள்ள ஆளுநர்கள் மூலம் மிரட்டி வருகிறது, இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்பட முடியாமல் இருக்கும் நிலை உருவாகியுள்ளது, இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசும் ஆளுநரை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளது.

ஆளுநர் பதவி என்பது பிரிட்டீஷ் ஆட்சியின்போது அதன் நிருவாகத்துக்காக, மாநில அரசின் லகானாக வைத்திருந்ததைப் புரிந்து கொள்ள முடியும்.

இப்பொழுது நடப்பது ஜனநாயகம் என்று சொல்லப்படுகிறது. மக்கள் நாயகத்தில் மக்களால் தேர்வு செய்யப்படும் ஆட்சியே அதிகபட்ச அதிகாரம் கொண்டது.

இதில் ஆளுநருக்கு இடம் ஏது? “ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு?” என்று அண்ணா அவர்கள் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

அதுவும் எதிர்க்கட்சி ஆட்சிகளுக்கு மட்டும் இடையூறு செய்வதற்கு ஆளுநர் என்றால் ஒரு கணமும் இந்தப் பதவி நீடிக்கக் கூடாது - கூடவே கூடாது.

காலதாமதம் ஆனாலும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் நீக்கப்பட்டது வரவேற்கத்தக்கதே!

Comments