பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

புதுடில்லி, பிப். 22-  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். நாட்டில் சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத வகையில், சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100அய் தாண்டி விற்பனையாகிறது. இந் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எல்லா பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதனால் மத்திய அரசு எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியாக ரூ.21 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது கொடூரமானது என்று கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Comments