இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் எழுச்சி மாநாடு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில அரசியல் எழுச்சி மாநாடு மதுரையில் நேற்று மாலை வெகு எழுச்சியோடு நடத்தப் பட்டது.

செஞ்சட்டைத் தோழர்களின் அணி வகுப்பும் மக்கள் வெள்ளமும் நேற்றைய மதுரை மாநகர வரலாற்றில் ஒரு கல்வெட்டுச் சாசனமாகும்.

மதுரை மாநகரின் திரும்பிய பக்கமெல்லாம் செஞ்சட்டைத் தோழர்களின் நடமாட்டத்தைக் காண முடிந்தது.

வாகனங்களின் மூலம் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தொழிலாளர்த் தோழர்கள் திரண்டிருந்தனர்.

சிந்தனைச் சிற்பி . சிங்காரவேலனாரின் பிறந்த நாளான நேற்று (1860) அவருக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கப்பட்டது பொருத்தமானது.

ஒரு மாநாட்டின் உச்சக்கட்ட சிறப்பு என்பது அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களே!

அந்த வகையில் இரங்கல் தீர்மானம் உட்பட பத்து தீர்மானங்கள் மக்கள் கடலின் பலத்த கரஒலியுடன் ஒரு மனதாக நிறைவேற்றப் பட்டன.

கடந்த 85 நாட்களாக வேளாண் சட்டங்களை எதிர்த்து அறவழியில் போராடி உயிர் நீத்த 250 விவசாயத் தோழர்களுக்கும், சாத்தூர் அரசன்குளத்தில் பட்டாசு  தொழிற்சாலை தீ விபத்தில் பரிதாபமாக பலியான 20 தோழர்களுக்கும், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த நான்கு தமிழக மீனவர்களுக்கும் மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, எழுந்து நின்று அமைதி காத்தது - இந்தப் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்த பிற் போக்கு சக்திகளுக்கான எச்சரிக்கையாகும்.

அமைதியின் ஆழத்தை அலட்சியப்படுத்தினால் அது ஆபத் தில் முடியும் என்ற எச்சரிக்கையாகும் அது!

மீனவர்கள் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இரண்டாவது தீர்மானமாகும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதல்கள் தமிழக மீனவர்களின் உயிருக்கு உலை வைத்துக் கொண்டுள்ளன.

கச்சத் தீவு இந்தியாவுக்குச் சொந்தம். இந்தியாவால் நமக்கு அளிக்கப்பட்டது என்ற தார்மீக உணர்வுகூட இல்லாமல் தானம் கொடுத்த மாட்டின் பல்லினைப் பார்த்தது போல நடந்துகொள்கிறது இலங்கை இனவாத அரசு.

இன்னொரு வகையில் பட்டுப் புடவையை இரவல் கொடுத்த சீமாட்டி, பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டவர் போகும் பக்கமெல்லாம் ஈச்சம் பாயைத் தூக்கிக் கொண்டு அலைந்த கதைதான் இது.

இலங்கை அரசால் நடத்தப்படும் தமிழக மீனவர்களின் படுகொலைக்கு இந்திய அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்டே தீர வேண்டும்.

அதுவும் வெளியுறவு அமைச்சர் இலங்கைக்குச் சென்று வந்த ஒரு சில நாட்களில் இந்தப் படுகொலை என்றால், இந்திய அரசைப்பற்றி சுண்டைக் காய் இலங்கை அரசு எந்த அளவுக்கு இளக்காரமாகப் பார்க்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த லட்சணத்தில் இந்தியா வல்லரசாகத் துடிக்கிறதாம். கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டப் போகிறேன் என்றானாம்! அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

நாட்டின் தொன்மையானதும் நாகரிக வளர்ச்சியின் சிகரமாகவும் விளங்கிவரும் விவசாய நிலங்களை பன்னாட்டு நிதி மூலதனம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பறி கொடுக்கும் நோக்கம் கொண்டது - மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் என்று விமர்சிக்கிறது அது குறித்த தீர்மானம். குறைந்தபட்ச ஆதரவு விலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலும் தீர்மானத்தில் முக்கியமாக இடம் பெற்றுள்ளது.

ஒன்றுபட்ட சக்திகளுடன், மத்திய அரசின் வேளாண் சட்டங் களை எதிர்கொள்வோம் என்ற அறைகூவலையும் விடுக்கிறது இந்த முக்கிய தீர்மானம்.

கோவிட் 19 தொற்று நோயின் அபாயத்தை விளக்கும் ஒரு தீர்மானம், இதனை ஒழிக்கும் களப் போரில் தங்கள் உயிரையும் திரணமாக மதித்துத் தொண்டாற்றும் மருத்துவ முன் களப்பணியா ளர்களுக்கு கம்யூனிஸ்ட் மாநாடு உணர்ச்சி ததும்ப நன்றி பாராட்டி வாழ்த்துகிறது.

அத்தகு முன்களப் பணியாளர்களின் நீண்டகால கோரிக்கை களை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை தீர்மானமாக வடிக்கப்பட்டிருந்தது.

அய்ந்தாவது தீர்மானம் கல்விக் கடனை ரத்து செய்யக் கோருவதாகும். படித்தும் வேலையில்லாமல் பரிதவிப்போர் கல்விக் கடனை எங்கிருந்து செலுத்த முடியும்? கார்ப்பரேட்டுகளுக்கு இலட்சக்கணக்கான கோடிகளைத் தள்ளுபடி செய்யும் அரசுக்கு இந்தக் கல்விக் கடன் என்பது ஒரு தூசு அளவேயாகும். அந்தவகை யில் இது ஒரு முக்கிய தீர்மானமே - ஆரம்பக் கல்வி முதல் ஆய்வு வரை (பி.எச்.டி) முற்றிலும் இலவசமாகப் பயிலும் வாய்ப்பு குறித்த தீர்மானம் தலைமுறை தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் பால் வார்க்கும் சமூகநீதி தீர்மானமாகும்.

சட்டம் வரையறுத்துள்ள தண்டனை முடிந்தும் சிறையில் வதியும் விசாரணைக் கைதிகளை - உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் மனித உரிமையும், மனித நேயமும் பின்னிப் பிணைந்த ஒன்றாகும். பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் தம் விடுதலையைக் கோரும் தீர்மானமும் இந்த வகையைச் சார்ந்ததேயாகும்.

விமர்சனங்களை எதிர் கொள்ள வக்கில்லாமல்இம் என்றால் சிறைவாசம்' என்பது போன்ற பாசிச நடவடிக்கைகளைக் கண்டிக் கிறது எட்டாவது தீர்மானம். விலைவாசி உயர்வுக்குக் கண்டனம், பயிர்க் கடன் ரத்து குறித்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. முத்தாய்ப்பானது அரசியல் தீர்மானமாகும். அது குறித்து நாளை எழுதுவோம்!

Comments