தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அமர்சிங் பன்முகத் திறமையாளர்!

 தான் மட்டுமல்ல, இயக்கத்தையும் வளர்த்தவர் அவர்அமர்சிங்குகளும், கலைச்செல்விகளும் இயக்கத்துக்குத் தேவை!

வழக்குரைஞர் அமர்சிங் பவளவிழாவில் தமிழர் தலைவர் புகழாரம்

தஞ்சை, பிப். 12-  தான் மட்டுமல்ல - மற்றவர்களையும் இயக்கத்தையும் வளர்த்தவர் - தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங். அமர்சிங்குகளும், கலைச் செல்விகளும் இயக்கத்திற்கு அதிகம் தேவை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 7.2.2021 அன்று காலை 10 மணியளவில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்  அவர்களின்பவளவிழா தஞ்சை இராமசாமி திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இவ்விழாவில் காணொலிமூலம் பாராட் டுரை - சிறப்புரை ஆற்றினார்  திராவிடர் கழகத்  தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரது சிறப்பு ரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அதேபோல, மேடையில் அமர்ந்திருக்கின்ற பல் வேறு தோழர்கள்- எல்லா இயக்கத் தோழர்களாக இருந்தாலும் சரி - ஏனென்றால், திராவிடர் கழகம் என்பது கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்களையும் கொண்டது - கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர் களையும் கொண்டது.

ஒருபோதும் வறட்சி ஏற்படாது -

புரட்சிதான் ஏற்படும்!

பச்சைத் துண்டை எப்போதும் எங்களுக்குப் போடக்கூடிய விசிறி சாமியார் அவர்கள், திராவிடர் கழகத்தினுடைய பெயர் சொல்லாத, உறுப்பினர் ஆகாத உறுப்பினர். கண்ணுக்குத் தெரியக்கூடியவர் என்றாலும்கூட, சட்டப்படி திராவிடர் கழகத்தில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், நாங்கள் வரும் பொழுதெல்லாம் அவர் கருப்புச் சட்டை அணியாமல் இருப்பார்; காவியை மேலே போட்டிருப்பார். ஆனால், எங்கேயிருந்துதான் பச்சைத் துணியைப் பிடித்து வருகிறாரோ என்று எங்களுக்கே தெரியாது. வற்றாத அளவிற்கு அவர் பசுமைத் துண்டை எங்களுக்குப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். பசுமை நிறைந்த கொள்கைகள் - இதிலே ஒருபோதும் வறட்சி ஏற்படாது - புரட்சிதான் ஏற்படும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகச் சிறப்பாக இருக்கக் கூடியவர்.

அமர்சிங் அவர்கள் பன்முகத் திறமையாளர்

எனவே, அப்படிப்பட்ட ஓர் அருமையான இயக் கத்தை நம்முடைய அமர்சிங் அவர்கள் தேர்ந்தெடுத் தார்கள். அதனுடைய விளைவுதான் அவர் இன் றைக்கு வளர்ந்திருக்கிறார். எந்த வகையிலும் அவர் வீண்போகவில்லை.  பலரை வளர்த்தும் இருக்கிறார்; தானும் வளர்ந்திருக்கிறார்; இயக்கத்தை வளர்த்திருக் கிறார்; அதேபோல, பலரையும் வளர்த்திருக்கிறார். பல பேருக்கு உதவி செய்கிறார். பன்முகத் திறமை யாளராக இருக்கிறார்.

பொதுக் காரியமா? ரோட்டரி கிளப்பா? அங்கே அமர்சிங் அவர்களுடைய பங்கு இருக்கும்.

பொது  நிகழ்ச்சிகளா அமர்சிங் அவர்களுடைய தொண்டு அங்கே முத்திரை பதித்திருக்கும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்,

இவர்தான் நெம்பர்  1 

மூத்த வழக்குரைஞரா? நிச்சயமாக அங்கே இருப்பார்.

பெரிய விபத்தா? விபத்துகள் நடந்துவிட்டன; பலிகளும் எதிர்பாராமல் நடந்துவிட்டன. என்றாலும், அதோடு எல்லாம் தலையெழுத்து என்று ஒதுங்கிவிட முடியுமா? சட்டம் அளித்திருக்கின்ற சில சலுகைகளும், பாதுகாப்பும், பயன்பெறவேண்டிய நிலைகள்பற்றி தெரியவேண்டுமானால், நாணயம் மிக்க ஒரு வழக் குரைஞராக - மோட்டார் ஆக்சிடென்ட்ஸ் என்று சொல்லக்கூடிய துறையில், ஏன் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இவர்தான் நெம்பர்  1  என்று சொல்லக்கூடிய அளவிற்கு, எங்களிடம் யார் கேட்டாலும், வழக்குரைஞர் அமர்சிங் அவர்களுடைய அறிவுரையைப் பெறுங்கள்; சட்ட ஞானம்  அவருக்கு அனுபவத்தில் இருக்கிறது என்று சொல்வோம். எதையும் நுணுக்கத்தோடு செய்வார்; நீக்குப் போக் கோடு செயல்படுவார்.

வழக்குரைஞர் மோகன் குமாரமங்கலம்

ஒருமுறை பிரபல வழக்குரைஞர் மோகன் குமார மங்கலம் அவர்களோடு நான் பேசிக் கொண்டிருந்த பொழுது, அவரிடம் வேடிக்கையாக ஒன்றை கேட்டேன்.

‘‘நம்முடைய மூத்த வழக்குரைஞர்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள்; நீங்கள் இயக்கத்தில் இவ் வளவு நாள் இருந்துவிட்டு, இப்போது இவ்வளவு பிரபலமாக வந்திருக்கிறீர்களே என்று கேட்டேன்.

அவர் என்னிடம், ‘‘என்னய்யா சண்டே வக்கீல்; (நான் ஞாயிற்றுக்கிழமையன்று கோர்ட்டுக்குப் போவேன் என்பதை கிண்டல் செய்யும் விதமாக இப்படி அழைப்பார்) நீங்கள் இவ்வளவு பெரிய லீடிங் லாயராக எப்படி வந்தீர்கள்? இவ்வளவு நாள் சிறையில் இருந்தீர்கள் அது எப்படி?'' என்று கேட்டபொழுது,

‘‘நான் பெரிய அறிவாளி என்று மற்றவர்கள் எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அப்படி ஒன்றும் பெரிய அறிவாளியோ அல்லது பெரிய சட்ட ஞானம் உடையவனோ கிடையாது என்பேன். நீக்குப் போக்குத் தெரியவேண்டுமய்யா'' என்றார்.

‘‘ஒரு வழக்கை எடுக்கும்பொழுது, நீதிபதி என்ன மனநிலையில் இருக்கிறார்; அவர் வீட்டில் யாரிடமா வது சண்டை போட்டுக்கொண்டு வந்திருந்தால், அந்தக் கோபத்தோடு கோர்ட்டுக்கு வந்திருந்தால் நான் உடனே,

‘‘My Lord! I feel somewhat Headache'' என்பேன்கொஞ்சம் தலைவலி எனக்கு இருக்கிறது; இன் றைக்கு இந்த வழக்கைத் தள்ளி வைத்தால் நன்றாக இருக்கும். அல்லது அப்படி முடியவில்லை என்றால், மாலையிலோ அல்லது நாளைக்கோ வழக்கை ஒத்தி வைத்தால் பரவாயில்லை என்று சொன்னவுடன்,

‘‘ஓகோ, எப்போதுமே கேட்காதவர், இப்படி கேட்கிறாரே'' என்று அவர் சொல்வார்.

எனக்குத் தெரியும், அன்றைக்கு நீதிபதியினுடைய மனநிலை சரியில்லை என்று. நீதிபதியின் முகமே அதனைக் காட்டிவிடும். வீட்டிலிருந்து கோபமாக வந்திருக்கிறார் என்று.

அடுத்த நாள் நீதிபதி அவர்கள் மலர்ச்சியோடு இருக்கும்பொழுது, நான் சொன்னதையும் சேர்த்து, அவர் விட்டுப் போனதையும் சேர்த்து  அவரே எழுதிக் கொடுப்பார். இப்படித்தான் நான் வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கிறேன்.

பிறகு, வேறு வழியில்லாமல், பிரபலமான வக்கீல், பிரபலமான வக்கீல் என்று எல்லோரும் சொன்னார் கள்; பிரபலமாகி தீருவதற்காக நான் படித்திருக்கிறேன். அதற்காக வழக்குகளை நடத்தியிருக்கிறேன்'' என்று மோகன் குமாரமங்கலம் சொன்னார்.

நீக்குப் போக்கோடு செயல்படக்கூடியவர் 

அதுபோன்று, நீக்குப் போக்கோடு செயல்படக் கூடியவர்  - மோட்டார் ஆக்சிடென்ட்ஸ் என்று சொல் லக்கூடிய துறையில் பிரபலமான வழக்குரைஞராக அமர்சிங் இருக்கிறார்.

நான் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்ப வில்லை. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்னவென்றால், அவர் பன்முகத் திறன் கொண்டவர். அதோடு அறிவு என்பது இருக்கிறதே - வெறும் படிப்பறிவு என்பது ஒருவகை; பட்டறிவு என்பது இன்னொரு வகை; உலகத்தைச் சுற்றிப் பார்த்து பெறக்கூடிய அறிவு என்பது இன்னொரு சிறப்பான வகை.

அந்த வகையில், நம்முடைய அமர்சிங் அவர் களும் - அவருடைய வாழ்விணையரும் மேல்நாட்டுத் தம்பதிகள் போன்று ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வார்கள்.

நான் தொலைப்பேசியில் அவரைத் தொடர்பு கொள்ளும்பொழுது, அவர் காஷ்மீர் போயிருக்கிறார் என்பார்கள்; சில நேரங்களில் இருவரும் செல்வார்கள்; சங்கத்தின் சார்பாக சென்றால், அமர்சிங் அவர்கள் மட்டும் செல்வார். அமர்சிங் அவர்கள் பன்முக ஆற் றலாளர்; ஒரு நல்ல செயல் வீரர். எல்லாவற்றையும்விட, நம்முடைய திராவிடர் கழகமானாலும், திராவிட முன் னேற்றக் கழகமானாலும் - சொன்னதைச் செய்வோம் - செய்வதையே சொல்வோம் - அந்தத் தத்துவத்தின் படி எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாக செயல்படுபவர்.

யாருக்கும் உதவி செய்யக்கூடிய மனப்பான்மை யோடு, தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்ற சின்னதோர் கடுகு உள்ளம் இல்லாமல், தொல்லுலக மக்கள் எல்லாம், தம்முடைய மக்கள் என்ற தாயுள்ளம் என்று சொல்வார்களே, அந்தத் தாயுள்ளத்தோடு இருக்கக் கூடிய அளவிற்கு,

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு (குறள் 231)

என்று சொல்வதைப்போல, மிகச் சிறப்பான வகையில் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார். எங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டான ஒரு லட்சிய வீரர்.

எங்களுடைய மாவட்டத் தலைவர் எப்படி இருக்கிறார் என்பதைப் பாருங்கள்; எவ்வளவு பெரிய மனிதாபிமானியாக இருக்கிறார்; அவருக்குப் பல் வகையான ஆற்றல் உண்டு; திறமைகள் உண்டு என்றாலும்,

எல்லாவற்றிற்கும் மேல்,

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்  (குறள் 997)

என்பதுதான் மிகவும் முக்கியம்.

மக்கட்பண்பு என்பது என்ன? மற்றவர்களுக்கு ஏற்படுகின்ற அந்தத் தொல்லை, தனக்கு ஏற்பட்டதாக நினைக்கவேண்டும்.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்  (குறள் 214)

வள்ளுவர் இறப்பதற்குமுன்பே செத்தவர் பட்டிய லில் சேர்த்துவிட்டார்.

தங்களுக்காக வாழ்வதைவிட,

பிறருக்காக வாழ்கிறார்கள்

ஆனால், ஒவ்வொரு திராவிடர் கழகத் தோழர்க ளும், திராவிட இயக்கத் தோழர்களும், பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களும் வாழ்ந்து காட்டுகிறார்கள். தங்களுக்காக வாழ்வதைவிட, பிறருக்காக வாழ்கிறார்கள். அதுதான் தொண்டறம் என்பது.

அந்தத் தொண்டறத்தில் தலைசிறந்து இருக்கக் கூடியவராக நம்முடைய விழா நாயகர் இருக்கிறார்.

இவ்வளவு பெரிய வெற்றி அவருக்கு இருக்கிற தென்றால், இந்த வெற்றிக்கு முழு காரணமாகஇருப்பவர் - முழுக்க முழுக்க அமர்சிங் அவர்களைப் பாராட்டு வதைவிட, ஒன்றரை மடங்கு அதிகமான பாராட்டுக் குரியவர் யார் என்றால், தோழர் கலைச்செல்வி அவர்களாவார்கள். கலைச்செல்வி அவர்களுடைய கட்டுப்பாடு - அவர் போட்ட லகான் - எல்லா வற்றிற்குமே இழுத்துப் பிடிப்பவர்.

ஒரு நல்ல குடும்பம் - ஒரு சிறந்த

கொள்கைப் பல்கலைக் கழகம்!

கலைச்செல்வி அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி இங்கே சொன்னார்கள். நான் அவருடைய அப்பா கோபால்சாமி அவர்களின் முதுகில் ஏறி விளையாடியவன். 1944 இல், மாணவப் பருவத்தில். அப்படிப்பட்ட  குடும்பங்களின் இணைப்பு என்று சொல்லக்கூடிய வகையில், இது ஒரு நல்ல குடும்பம் - ஒரு சிறந்த கொள்கைப் பல்கலைக் கழகம் என்ற அளவில், இன்றைக்கு விழா நாயகராக இருக்கின்ற அவர், பல்லாண்டு காலம் வாழவேண்டும்.

இந்த மேடை ஓர் அற்புதமான மேடை - இதில் நம்முடைய தோழர்கள், எல்லா இயக்கத் தோழர்களும் ஒரே குடும்பமாகத் திகழ்கிறோம்.

இன்றைக்குதிராவிடம் வெல்லும்' என்ற சூளு ரையை நோக்கி நாம் செல்லக்கூடிய காலகட்டத்தில், இந்த மேடை நிச்சயமாக அதற்குப் பயன்படக் கூ டிய மேடை. ஏனென்றால், நம்முடைய அமைப்பு என்பது, இது வெறும் லாபத்திற்காகவோ அல்லது வரவு - செலவு பார்ப்பதற்காக இல்லை.

மானமும் அறிவும் படைத்தவர்கள்தான் நம் முடைய மக்கள். மனிதன் என்பதற்கு அடையாளமே, ‘‘மானமும், அறிவும் மனிதருக்கு அழகு'' என்றார் தந்தை பெரியார் அவர்கள்.

சொந்த சோற்றைத் தின்றுகொண்டு, இயக்கத்திற்காக உழைக்கக் கூடியவர்கள்

அந்த மானமும், அறிவும் வரவேண்டும் என்பதற் காகக் கடுமையாக உழைத்து, அதுவும் பெரியார் வரைவித்த இலக்கணம் இருக்கிறதே, ‘‘என்னுடைய தொண்டர்கள், தோழர்கள் இயக்கத்தவர்கள் என் றால், சொந்த சோற்றைத் தின்றுகொண்டு, இயக்கத் திற்காக உழைக்கக் கூடியவர்கள்'' என்று வகுத்தார்.

நான் இந்த அரங்கத்தைப் பார்க்கிறேன், மாநாடு போல, மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து அத்துணை தோழர்களும், இயக்கக் குடும்பத்தவர் களும் வந்திருக்கிறார்கள். பொதுக்குழுவைக் கூட கூட்டியிருக்கலாமோ என்று நினைக்கக் கூடிய அள விற்கு, இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு ஏராள மான தோழர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந் திருக்கிறார்கள் என்றால்,

ரத்த பாசத்தைவிட, கொள்கைப் பாசம் கெட்டி யானது - உறுதியானது - பலமடங்கு உறுதியானது என் பதற்கு அடையாளமாகும்.

 கருப்புச் சட்டை அணிந்திருக்கக்கூடிய

வெள்ளை மனம் படைத்தவர்கள்

ஆகவே நண்பர்களே, இந்த விழாவைத தொடங்கி வைப்பதில், அவரை வாழ்த்துவதில்  - அவர் பல்லாண்டு காலம் வாழவேண்டும் - அவர்கள் மேலும் பல ஆண்டுகாலம் வாழ முடியும் - வாழ்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால், மனதில் நினைப்பதை நாம் செயலில் காட்டுகிறபொழுது, இரட்டை வேடம் நமக்குக் கிடையாது - இரண்டு மனங்கள் கிடையாது; கருப்புச் சட்டை அணிந்திருக் கக்கூடிய வெள்ளை மனம் படைத்தவர்கள்தான் அவர்கள்.

ஆகவேதான், அப்படிப்பட்டவருடைய விழாவில்  கலந்துகொள்வது என்பது, நேரிடையாகக் கலந்து கொள்ளவில்லையே என்ற ஒரு சிறு குறைபாடு இருந்தாலும், உங்களையெல்லாம் காணொலிமூலம் பார்க்கிறேன்.

பெரியார் ஒரு தொலைநோக்காளர் -

புத்துலக உற்பத்தியாளர்!

அய்யா அவர்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பாகத் தெளிவாகச் சொன்னார்கள். இனிவரும் உலகத்தில் காணொலிமூலமாகப் பேச முடியும் என்று. அதை நம்முடைய இயக்கத் தோழர்கள் - நம்முடைய இயக்க நிகழ்ச்சிகளிலேயே பயன்படக் கூடிய அளவிற்கு இன்றைக்கு அந்தக் கருத்தை நாமே மற்றவர்களுக்கும் செயல்பாட்டில், பெரியார் எப்படி தொலைநோக்காளர் - பெரியார் எப்படி ஒரு புத்துலக உற்பத்தியாளர் என்பதையெல்லாம் எடுத்துக்காட்டக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.

இந்த அரங்கத்தில் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லோ ரையும் வாழ்த்தி, இங்கே வாழ்த்துவதற்காக வந்திருக் கின்ற அத்துணை அறிஞர் பெருமக்களுக்கும், அத் துணை இயக்க நண்பர்களுக்கும், அனைத்து இயக் கங்களைச் சார்ந்த பெருமக்களுக்கும் என்னுடைய அன்பான நன்றியை, வணக்கத்தினைத் தெரிவித்து, அவர்களையும் இயக்கத்தின் சார்பில் வருக, வருக என வரவேற்று,

இந்த விழா நாயகர் பல்லாண்டு காலம் வாழ்க!

விழா நாயகி பல்லாண்டு காலம் வாழ்க!!

நூறாண்டுக்கு மேலும் வாழ்பவர்கள்

கடவுள் மறுப்பாளர்கள்!

நூறாண்டு என்று சொல்வதுகூட கொஞ்சம் குறைவாக இருக்கக்கூடும். எதிர்காலத்தில் நூறு வயது என்பது மிகச் சாதாரணம். நம்முடைய இயக்கத்திலே நூறு வயதைத் தாண்டியவர்கள் இருக்கிறார்கள் - கடவுள் மறுப்பாளர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நூறாண்டு தாண்டியவர்கள் இன்றைக்கும் இருக் கிறார்கள்; பெங்களூருவில் வேலு இருக்கிறார்; நம்முடைய சுய மரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் துணைத் தலைவர் அடுத் தாண்டு நூறாண்டை அவர் தொடப் போகிறார். அதுபோலவே, நம்முடைய கழகத் துணைத் தலைவர் அவர்கள். இப்படி பல பேரைச் சொல்லலாம்.

பல்லாண்டு என்று நான் சொல்வதற்குக் காரணம் இன்றைக்கு அறிவியல் வளர்ந்திருக்கிறது.

இன்றைக்கு உலகத்தையே அச்சுறுத்தக்கூடிய கரோனா வைரஸ் தொற்று வந்திருக்கிறது என்று சொன்னால், அந்தத் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அறிவியல்மூலமாக தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டார்களே!                      அதற்குமுன்பு நாம் பார்த்தோமே, ராமனுக்குக்கூட கம்பளியை வடநாட்டில் போர்த்திக் கொண்டிருக்கிறார்கள்; எங்கே கரோனா தொற்று வந்துவிடுமோ என்று பயந்து.

நம்மிலே பலர் இன்னமும் முகக்கவசம் போடாமல் வந்திருக்கிறீர்கள். ஆனால், கடவுள் எல்லாம் முகக்கவசத்திற்கு மேலே, போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கின்ற படங் களையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இந்தத் தொற்று நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு மனித அறிவும், விஞ்ஞானமும்தான் பயன்படுகிறது என்பதற்கு அடையாளம்தான் இப்பொழுது வந்திருக்கின்ற தடுப்பூசிகள். எனவே, கரோனா தொற்றுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டார்கள்; ஆனால், மூடநம்பிக்கைக்குத் தடுப்பூசி போடுகின்ற விஞ்ஞானிகள்தான் நம்முடைய இயக்கத்தவர்கள்.

படிப்பிற்கும், பகுத்தறிவிற்கும் சம்பந்தமில்லை!

இன்னமும் பார்க்கிறோம்; படித்த குடும்பம் ஆந்திராவில், தங்களுடைய இரண்டு மகள்களையே கொலை செய்து, அவர்கள் உயிரோடு வருவார்கள் என்று சொல்லி, அதனை நம்பிக்கொண்டு, நரபலி கொடுக்கக் கூடிய அளவிற்கு மோசமான அளவிற்கு இருக்கிறார்கள்; படித்தவர்கள், பட்டதாரிகள்.

படிப்பிற்கும், பட்டத்திற்கும், பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம்?

பல அமர்சிங்குகளும்,

பல கலைச்செல்விகளும் தேவை!

எனவேதான், இந்த இயக்கத்தினுடைய பணி மேலும் தேவைப் படுகிறது. மேலும் பல அமர்சிங்குகளும், பல கலைச்செல்விகளும் தங்களுடைய பணியை, தொண்டறத்தை செய்யவேண்டிய அவசியம் நிச்சயமாக இருக்கிறது.

கடைசி மூடநம்பிக்கைக்காரன் இருக்கும்வரை, கருப்புச் சட்டைக்காரர்கள் இருப்பார்கள்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Comments