ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கெதிரான அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கும், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கும், தன்னாட்சி உரிமைக்கும் குரல் கொடுப்போம்!

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கெதி ரான  அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கும், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கும், தன்னாட்சி உரிமைக்கும் குரல் கொடுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையும், அவலங் களும், உரிமைப் பறிப்புகளும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் துயரக் கண்ணீரை நிரந்தரமாக ஆக்கிவிட்டன.

நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு நியாயமான விசாரணைகளோ, மனித உரிமை அடிப்படையிலான சட்ட நிவாரணங்களோ இன்றி 12 ஆண்டுகளை நெருங்கியிருக்கிறோம்.

புண்ணை ஆறவிடாமல்

கீறி ரணமாக்கும் செயல்!

இலங்கையின் அரசியல் சூழலும், சிங்களப் பேரினவாதப் போக்கும் தமிழர்க்கு பாதுகாப்பானதாக அமையும் சூழலே ஏற்படவில்லை. மேலும் அச்சமூட்டும் வகையில், இனப் படுகொலையை நடத்தியவர்களே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதும், அதிலும் நான் சிங்களப் பவுத்தத் தலைவர் தான் என்றும், அதில் ஒருபோதும் மாற்றமில்லை என்றும் இலங்கையின் சுதந்திர நாளில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆற்றியிருக்கும் உரை, புண்ணை ஆறவிடாமல் கீறி ரணமாக்கும் செயலாகும்.

சிங்கள அரசின் போக்கில் எவ்வித மாற்றமும் இருக்கப் போவதில்லை என்பதையும், 2009இல் நடந்தது போராளிகளை ஒடுக்கும் முயற்சியல்ல; அது இன அழிப்பே என்பதையும் இப்போதேனும் உலகம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க் கால் நினைவுத் தூண் அகற்றப்பட்ட நிகழ்வின்மூலம் அங்கிருக்கும் நிலையைப் பளிச்சென உலகிற்கு காட்டிவிட்டதே!

அதனைக் கண்டித்து, அமெரிக்கா, கனடா, இங்கி லாந்துவாழ் தமிழர்கள் காணொலி வாயிலாக ஒருங்கிணைத்து நடத்திய நிகழ்வில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி பங்கேற்று உரையாற்றியபோதும், இலங்கை யில் நடக்கும் இன அழிப்பு, அடையாள அழிப்பு போன்றவற்றை நாம் சுட்டிக்காட்டத் தவறவில்லை. மக்கள் பட்ட வேதனையின் வெளிப்பாடாய் அமைக் கப்பட்ட நினைவுச் சின்னம் கூட அவர்களின் கண்களை இன்றும் உறுத்துகிறதே!

இன அழிப்பு, அடையாள அழிப்பு, வரலாற்றுச் சான்றுகள் அழிப்பு உள்ளிட்டவற்றைக் கண்டித்து ஈழத்தில் மக்களின் எழுச்சியும் இப்போது ஏற்பட்டி ருப்பதை நாம் காணமுடிகிறது.

ஈழத் தமிழர்களும்,

உலகத் தமிழர்களும் முயற்சி!

இந்நிலையில், ஈழத்தில் நடந்த இனப் படுகொலையை அய்.நா. அவையின் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரு கின்றன. கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் நீட்சியாக இவ்வாண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறவிருக்கும் 46 ஆவது மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் முன்னெடுத்துச் செல்ல ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அய்.நா. மன்றத்தின் மேற்பார்வையில்,

பொது வாக்கெடுப்பு நடத்துக!

1. 1948 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்திவரும் திட்டமிட்ட, கட்ட மைக்கப்பட்ட ஈழத்தமிழின இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்திட வேண்டும்.

2. 2015 பிப்ரவரி 10 ஆம் நாள், இலங்கை வடக்கு மாகாண மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்க வேண்டும்.

3. சிங்களப் பேரினவாத அரசானது, தமிழர்களை சக குடிமக்களாக கருதாது, சம உரிமையுடன் ஒருபோதும் நடத்தாது என்பதற்கு அதன் தொடர் அடக்குமுறைகளே சாட்சி.  தனித்த தேசிய இனமான ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை ஏற்க வேண்டும்; அய்.நா. மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.

4. இந்திய அரசு, மனித உரிமைகள் மன்ற உறுப்பு நாடுகளை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சி நிரல் 4 இன்படி, சிறப்பு ஆணையர் (Special Rapporteurஷீ) ஒருவரைத் தெரிவு செய்து, இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை களைக் கண்காணிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

தமிழீழ இனப்படுகொலை தொடர்பான ஆதாரங் களையும் ஆவணங்களையும் திரட்டிட, பன்னாட்டு அளவிலான சுயாதீன விசாரணை பொறிமுறை அமைப்பு ஒன்றை அய்.நா. சபையானது தானாக முன்வந்து  உருவாக்கிட வேண்டும்.

அந்த பொறிமுறை அமைப்பின் ஆணையர்,

) இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்;

) தொடர்பு உடைய உறுப்பினர்களுடன், இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்;

) இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில், மனித உரிமை மீறல்கள் குறித்து, அய்.நா. பொதுப் பேரவைக்கும், மனித உரிமைகள் மன்றத்திற்கும் ஆய்வு அறிக்கை வழங்க வேண்டும்;

) பிரச்சினைகளை உடனுக்குடன் வெளிக்கொணர வேண்டும்; அதிகாரபூர்வ செய்தி அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்து நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

அது அந்த நாட்டின் உள்விவகாரம் (Internal Matter) அதில் வெளிநாட்டவர் தலையிடலாமா என்று சில புரியாதவர்கள் கேட்கிறார்கள்.

இனப் படுகொலை அளவுக்குச் சென்றுவிட்ட பிறகு, அது பன்னாட்டு மனித உரிமைப் பிரச்சினையாகுமே தவிர, ஒருபோதும் உள்நாட்டுப் பிரச்சினை என்று எவரும் ஒதுங்கிவிட முடியாது - மனித உரிமை காப்பு முக்கியமல்லவா?

ஜாதி-மத பேதமின்றி

ஒருமித்த குரலில் நம் ஆதரவு

ஈழத் தமிழர் இன்னல் தீரவும், அவர்களுக்கான நியாயமான அரசியல் தீர்வு அமையவும், அவர்கள்மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு விடிவு காணவும், கைகோத்து உதவவேண்டியது தொப்புள்கொடி உறவுகளாம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உண்டு. இதில் கட்சி மாச்சரியமின்றி, ஜாதி-மத பேதமின்றி ஒருமித்த குரலில் நம் ஆதரவைத் தெரிவிக்க வேண்டியது நம் கடமையாகும் என்பதை திராவிடர் கழகத்தின் சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்!

 


கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை 

8.2.2021

Comments