தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை: கடன் சுமை கழுத்தை முறிக்கும் மாநில உரிமைக்குக் குரல் கொடுக்கத் தவறியதால் மத்திய அரசு அலட்சியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 24, 2021

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை: கடன் சுமை கழுத்தை முறிக்கும் மாநில உரிமைக்குக் குரல் கொடுக்கத் தவறியதால் மத்திய அரசு அலட்சியம்!

 துண்டுவிழும் பட்ஜெட் மட்டுமல்ல - துவண்டுவிழும் ஆட்சியின் பட்ஜெட்!

கானல் நீர் - தாகம் தீர்க்க உதவப் போவதில்லை!

தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் வெறும் கானல் நீரே தவிர, தாகம் தீர்க்க உதவாது என்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் வரும் பொதுத் தேர் தலுக்குமுன், ஆளுங்கட்சியான .. .தி.மு.. நேற்று (23.2.2021) சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் என்ற வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் .பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார்.

வருவாய்ப் பற்றாக்குறை

ரூ.41 ஆயிரத்து 417 கோடியே

30 லட்சம்

இந்த இடைக்கால பட்ஜெட் வரவு - செலவுத் திட்டத்தில்,

மொத்த வரி வருவாய் - ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 991 கோடியே 96 லட்சம்.

வருவாய் செலவினம் - ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்து 409 கோடியே 26 லட்சம்.

வருவாய்ப் பற்றாக்குறை (Deficit) ரூ.41 ஆயிரத்து 417 கோடியே 30 லட்சம்.

எனவே இந்த வரவு - செலவுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை - பற்று நிதி நிர்வாகத்தினை தமிழக அரசு எப்படி நிர்வகித்து சமாளிக்கப் போகிறது என்றால், கடன் வாங்குவதன் மூலமாகவே என்பதுதான் பதில்.

மத்திய அரசின் நிதி பங்களிப்பு தமிழ்நாட்டிற்குக் கைகொடுப்பதாக இல்லை

நிதியமைச்சர் .பி.எஸ். அவர்களின் நிதிநிலை தாக்கல் உரையின்படி, இப்படிப் பட்ட நிலையில், டில்லி (மத்திய) அரசின் நிதி பங்களிப்பு எப்படி தமிழ்நாட்டிற்குக் கைகொடுப்பதாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பது கோடிட்டுப் பார்க்கப்பட வேண்டிய தகவல் ஆகும்!

‘‘மத்திய அரசிடம் மாநிலத்திற்கு வரிப் பகிர்வு 41 சதவிகிதமாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. 14 ஆவது நிதிக்குழுவில் மாநிலங்களுக்கிடையேயான நிதிப் பகிர் வில் தமிழ்நாட்டின் பங்கு 4.023 சதவிகிதத்திலிருந்து 15 ஆவது நிதிக்குழுவின் இடைக் கால அறிக்கையில் 4.189 சதவிகிதமாக ஓரளவுக்கு உயர்ந்து தற்போது இறுதி அறிக் கையில் 4.079 சதவிகிதமாக குறைந்துள்ளது.

2020-2021 ஆம் ஆண்டின் தமிழ் நாட்டிற்கான வருவாய் பற்றாக்குறை மானியமான ரூ.4025 கோடியை வழங்க முதன்முறையாக இடைக்கால அறிக்கை பரிந்துரை செய்திருந்தது. இது நமது மாநிலத்திற்குத் தொடர்ந்து உதவுகின்ற வகையில் அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், இறுதி அறிக் கையில், 2021-2022 ஆம் ஆண்டின் வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தை குறைத்து ரூ.2,204 கோடி மட்டுமே பரிந்துரைத்துள்ளது.

(அதாவது சரி பகுதியாகக் குறைக் கப்பட்டு விட்டது என்பதை தமிழ்நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும் கவனிக்கத் தவறக்கூடாது).

மொத்த மானியத் தொகை

15 ஆவது நிதிக்குழு பரிந்துரைகளில் கணிசமாகக் குறைந்துள்ளது

அது மட்டுமா? மேலும் நிதியமைச்சர் தனது உரையில் தொடர்ந்து கூறியது என்ன?

(1) இத்தொகை, முதலாவது ஆண்டிற்கு மட்டும்தான் வழங்கப்படும்.

(2) தமிழ்நாட்டிற்குப் பரிந்துரைக்கப்பட்ட மொத்த உள்ளாட்சி மானியத் தொகை 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.5,344 கோடியிலிருந்து 2021-2022 ஆம் ஆண்டில் ரூ.3,979 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 14 ஆவது நிதிக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட தொகையைவிட, தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மொத்த மானியத் தொகை 15 ஆவது நிதிக்குழு பரிந் துரைகளில் கணிசமாகக் குறைந்துள்ளது.

அதுமட்டுமா? நிதியமைச்சர் படித்த பட்ஜெட் உரையில் மேலும் கூறியிருப்பது என்ன?

‘‘அதாவது, 2016 முதல் 2020 ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் ரூ.8232 கோடியே 31 லட்சத்தில் இருந்து, 2021 முதல் 2026 ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் ரூ.7,187 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

முந்தைய நிதிக்குழுவால் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒட்டுமொத்த மானியத் தொகையில், நிபந்தனையில்லாத மானியத்தின் பங்கு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 90 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாகவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 80 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயரும் அபாயகரமான நிலை!

இந்த நிலையில், பெரிதும் நிதி ஆதா ரத்திற்குக் கடன் வாங்கித்தான்ராஜதர்பார்' நடத்தவேண்டிய இக்கட்டான நிலை கார ணமாக கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடி யாக உயரும் அபாயகரமான நிலைக்குத் தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது.

இதனை எளிதில் எவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எதிர்க்கட்சித் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள், ‘‘பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன்'' என்று விளக்கியுள்ளது மறுக்க முடியாத உண்மை!

வாங்கும் புதிய கடனில் பெரும் பகுதி, வாங்கிய பழைய கடனுக்கு வட்டி கட்டு வதற்கே செலவழிக்கப்படுகிறது என்பது ஒரு கசப்பான மறுக்க முடியாத உண்மை யாகும்!

‘‘உறவுக்குக் கைகொடுத்து, உரிமைக்கு ஓங்கிக் குரல் கொடுக்க'' தமிழ்நாடு அரசு தவறியதால்தான் இப்படி ‘‘தூங்கியவன் தொடையில் கயிறு திரிப்பது போல்'' முன்பு அறிவித்த நிலையையே மாற்றி மானியத் தொகை உதவிகளை மத்திய அரசு அமைப் புகள் குறைப்பதும், அதை கொத்தடிமை போல் வாய்ப் பொத்தி, கைகட்டி ஏற்பதும், மாநிலத்தின் நிதி நிர்வாக சுயமரியாதைக்கும், சுயச் சார்புக்கும் விரோதமல்லவா?

‘‘கழிவிறக்க நிலை''

தமிழ்நாட்டிற்கு வந்திருக்குமா?

எதிர்க்கட்சியினரை அரவணைத்து அனைவரது குரலும் ஒட்டுமொத்த தமிழ் நாட்டின் உரிமை, நலப் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் ஆளுங்கட்சியான .தி.மு.. அரசின் நிலைப்பாடு இருந் திருந்தால் இந்த ‘‘கழிவிறக்க நிலை'' தமிழ்நாட்டிற்கு வந்திருக்குமா?

கடனில் மூழ்கித் திணறும் நிலையை ஏற்படுத்துவதுகூட, அடுத்து நாம் வரப் போவது சந்தேகமே, எனவே வருகின்ற புதிய ஆட்சியாளருக்கு - தி.மு..வினருக்கு - ‘கஜானா காலி' என்ற நிதி நெருக்கடியை நாம் விட்டுச் செல்லும் சொத்தாக (Legacy) ஆகச் செய்துவிடுவோம் என்ற எண்ணமா? புரியவில்லை!

வெறும் ‘‘கானல் நீர் - தாகம் தீர்க்க உதவாது!''

எனவே, துண்டு விழும் இடைக்கால பட்ஜெட்டாக மட்டும் இது இல்லை. துவண்டு விழும் ஆட்சியின் பட்ஜெட்டாக வும் அமைந்துள்ளது வேதனைக்குரிய ஒன்றாகும்!

விலைவாசி ஏற்றத்தைத் தடுக்கும் வழி முறைகளோ, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களையோ திட்ட வட்டமாகக் கூறும் பட்ஜெட்டாகவும் இது இல்லை. எனவே, வெறும் ‘‘கானல் நீர் - தாகம் தீர்க்க உதவாது!''

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

24.2.2021

No comments:

Post a Comment