ஆசிரியருக்குக் கடிதம் : மூடநம்பிக்கையின் உச்சம்!

ஆன்மிகம் என்ற போர்வையில் மக்களிடையே மண்டிக் கிடக்கின்ற மூடநம்பிக்கையை-அறியாமையை நன்கு பயன்படுத்திக் கொண்டு அவர்களிடம் நயமாகப் பேசி ஜோதிடம், பில்லி, சூனியம், கழுப்பு எடுத்தல், பேய் பிசாசு விரட்டுதல் என்று பலவகையான மூடத்தனத்திற்கு மக்களை ஆட்படுத்தி அவர்களின் மூளையை மழுங்கடித்து அவர்களிடம் உள்ள பொருளாதாரத்தைச் சீரழிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகளை உயிர்ப்பலிக்கு உள்ளாக்குவது நமது நாட்டில் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இத்தகைய போக்கு ஆரோக்கியமான சூழலுக்கு உகந்ததல்ல.

மூடநம்பிக்கையின் மூடத்தனத்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது நடைபெற்று வந்த உயிர்ப் பலிகள் அண்மைக் காலமாக ஆங்காங்கே நடைபெற்று வருவது சமூகநல ஆர்வலர்களை, பகுத்தறிவாளர்களை, முற்போக்குச் சிந்தனையாளர்களை மிகுந்த மன உளைச் சலுக்கு உள்ளாக்கியுள்ளது.

எடுத்துக்காட்டாக ஒருசில;

      1.  ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த தம்பதியினர் புருசோத்தமன் - பத்மஜா ஆகிய இருவரும் முதுகலைப் பட்டம் பெற்ற பட்டதாரிகள் ஆவர். புருசோத்தமன் அவர்கள் பிஎச்.டி பட்டம் பெற்று அரசு கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், பத்மஜா அவர்கள் தனியார் பள்ளியில் முதல்வராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு அலேக்கியா(27), சாய் திவ்யா(22) என்ற இரு மகள்கள் முறையே முதுகலைப் பட்டப் படிப்பும், இசைக் கல்லூரியிலும் பயின்று வரு கின்றனர். இதனிடையே பத்மஜா அம்மையாருக்கு நீண்ட நாட்களாக பீடித்திருக்கும் வலிப்பு நோய் சரியாக வேண்டி, கருநாடகத்தைச் சேர்ந்த சாமியார்களை வீட்டிற்கு வரவழைத்து யாகங்கள் பலவற்றை நடத்தியுள்ளனர்.

மேற்கண்ட தம்பதியினர் கடவுள் - பக்தி, சடங்கு, சம் பிரதாயம், சாஸ்திரம் ஆகியவற்றில் ஏற்கெனவே ஊறித் திளைத்த காரணத்தால் சாமியார்கள் கூறியதை பகுத்தறிந்து பார்க்காமல் அப்படியே அதனை ஏற்றுக் கொண்டதின் விளைவாக, ஜனவரி-24, 2021 அன்று தாங்கள் ஈன்றெடுத்த இரு மகள்களை யாகத்திற்குப் பயன்படுத்திய ஆயுதத் தாலும், இரும்புக் கம்பிகளாலும் கொடூரமான முறையில் தாக்கி நரபலி கொடுத்துள்ளனர் என்ற கொடிய செய்தி உதிரத்தை உறைய வைப்பதாக இருந்தது. நாம் நாகரீக உலகில்தான் வாழ்கின்றோமா? எனும் அய்யப்பாடு அனைவர் மனதிலும் எழுந்தது.

        2.   கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகின்ற  சபீதா ஆறு வயதே நிரம்பிய தனது மூன்றாவது மகனான ஆமிலின் என்ற குழந்தையை நரபலி கொடுப் பதின் மூலம், தனக்கு இருக்கும் தோஷம் நீங்குவதுடன் மகனும் உயி ரோடு வந்து விடுவார் என்று கனவு வந்ததாக ஆசிரியை சபீதா நம்பியதின் காரணமாக, ஆசை ஆசையாய் ஈன் றெடுத்த தனது இளைய மகனை நரபலி கொடுக்க பெற்ற தாயே முற்பட்டது மூடநம்பிக்கையின் முடைநாற்றத்தால் ஏற்பட்ட விபரீத எண்ணமாகும்.

இத்தகைய எண்ணத்தின் வெளிப்பாடாக, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அந்த இளங்குழந்தையை அதிகாலை நான்கு மணிக்கு வீட்டில் உள்ள குளியல் அறைக்குத் தூக்கிச் சென்று கத்தியை எடுத்து கோழியை அறுப்பது போன்று கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற அதிர்ச்சித் தகவலை நாளேட்டின் வாயிலாகக் (08.02.2021) கண்ணுற்ற மனிதநேயப் பற்றாளர்கள் அதிர்ச் சியில் ஆழ்ந்தனர். வேதனையால் விழி பிதுங்கி நின்றனர்.

மேற்கண்ட மனிதநேயமற்ற காட்டுமிராண்டித் தனமான செயலை அறிந்த பொதுமக்கள், நடுநிலையா ளர்கள், கல்வியாளர்கள், சமூகநல ஆர்வலர்கள்  மற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், மனிதநேய மாண்பாளர்கள், மாதர் சங்கங்கள், இளைஞர்கள் - மாணவர்கள் ஆகியோர் வேதனை மிகுதியால் வெட்கித் தலைகுனிந்தனர். செய்வதறியாது வாயடைத்து நின்றனர். அவர்களின் நா பேசமுடியாமல் தழுதழுத்தது. உதிரம் உறைந்து போனது. ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

 'பக்தி வந்தால் புத்தி போகும் - புத்தி வந்தால் பக்தி போகும் ' என்று கூறிய தந்தை பெரியாரின் அறிவார்ந்த கூற்றையும், ' படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை - படித்தவர் பலபேருக்கு பகுத்தறிவு இல்லை ' என்ற வைர வரிகளையும் மெய்ப்பிக்கும் வகையில், படித்து பட்டம் பெற்று வீட்டிற்கும் நாட்டிற்கும் பயன்பட வேண்டிய இளம் மாணவச் செல்வங்களையும், இளம் வயது சிறுவனையும் மெத்தப் படித்த பெற்றோர்களே கடவுள், மதம், சாஸ்திரம், யாகம் போன்ற மூட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு தங்களது குழந்தைகளை சிறிதும் மனித நேய மின்றி, ஈவு - இரக்கமின்றி  நரபலி கொடுத்து குழந்தை களின் இன்னுயிரை மாய்த்தது என்பது மூடநம்பிக்கையின் உச்சமாகும்!

எனவே, ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் போன்று, தற்போதைய கல்வி முறை வயிறு வளர்ப்பதற் காகவும், பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற் காகவும் மட்டுமே பயன்படுகிறது என்பது பெரும்பான்மை மக்களின் கருத்தாகும். ஆகவே, மத்திய - மாநில அரசுகள் இந்திய அரசியல் சட்டம் 51-(எச்) எனும் பிரிவு வலியுறுத்து வதைப் பின்பற்றி மக்களிடையே அறிவியல் மனப் பான்மையை வளர்க்கும் நோக்கில் செயல்பட வேண்டியது அவசியம். அதன் அடிப்படையில் ஆரம்பப் பள்ளியில் இருந்தே மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப் பான்மையை  மனிதநேயப் பண்பை,  சமத்துவ - சகோதரத் துவத்தை, ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்க வேண்டி யது  காலத்தின் கட்டாயமாகும்.

    வளரட்டும் அறிவியல் மனப்பான்மை!

     ஒழியட்டும் மூடநம்பிக்கை!

- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.

Comments