69 விழுக்காடு இட ஒதுக்கீடு மாநில அரசின் உரிமை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடில்லி, பிப். 18- மாநில அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு அளிப்பது என்பது மாநில அரசின் உரிமை என்று  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த பி.எஸ். தினேஷ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை நீதிபதி .எம். கான் வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் உதவி செயலாளர் என்.எஸ். வெங்கடேஷ்வரன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளதாவது.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத் தினரை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்ப்பதற்கு நிரந்தர அமைப்பை உருவாக்க உச்சநீதிமன்றம் இந்திரா சகானி வழக்கில் உத்திரவிட்டபடி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1993ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

மத்திய அரசு பணிகளில் மண் டல் கமிஷன் அறிக்கையின்படி, மாநில அரசு பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான பொருள் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய சட்டத்தில் விளக்கப்பட்டு உள்ளது.

சமூகரீதியாக, கல்வி ரீதியாக பின் தங்கிய சமுதாயத்தினரை இதர பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதும், தவறாக சேர்க்கப்பட்டு விட்டதாக புகார் வந்தால் அந்த ஜாதியினரை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான கோரிக்கைகளையும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிசீலித்து மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் சமூக ரீதியாக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியுள்ள பிரிவினரை அம்மாநில அரசின் ஆலோசனைப்படி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அறிவிக்கை வெளியிட குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.

சமூக ரீதியாக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியுள்ள பிரிவினரை பிற் படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. .

அதே சமயம், மாநில அரசு வேலை வாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் சேர்க் கைக்கு சமூக ரீதியாக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியுள்ள பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநில அரசுகள் கொண்டிருக்க முடியும்.

மாநில அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் - மத்திய அரசின் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இருந்து வேறுபட்டி ருக்கலாம். சமூக ரீதியாக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து மாநில அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு அளிப்பது என்பது மாநில அரசு சார்ந்த உரிமை, இதில் மத்திய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை.

அரசமைப்பு சாசனம் 102ஆவது திருத்தத்துக்கு (மராத்தா இடஒதுக்கீடு) எதிரான மனு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன் நிலுவையில் உள்ளது என்று அப்பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மீண்டும் நடைபெற்றது.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே, 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசார ணையை வருகிற 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Comments