அடிகளார் என்ற தருநிழலின் குளுமை...! (5)

முற்போக்குச் சிந்தனையாளரும், சீலருமான மகாசந்நிதானம் தவத்திரு.குன்றக்குடி அடிகளார் அவர்கள்பற்றி, தோழர் தா.பாண்டியன் அவர்கள் தந்துள்ள பதிவுகளைப் போலவே, நம்மிடத்தில் அவர் காட்டிய ஒரு பெரும்பாசமும், அன்பும், வாஞ்சையும் என்றும் மறக்க முடியாதவையாகும்!

தந்தை பெரியாரைப் பார்க்க ஒருமுறை பெரியார் திடலுக்கு தவத்திரு. அடிகளார் வந்தார். அய்யாவைப் பார்த்து நலம் விசாரிக்கிறார்; அடுத்து அய்யா சிரித்துக் கொண்டே அடிகளாரிடம் ‘‘உங்க வீரமணி இப்பல்லாம் ‘பார்ப்பானாகி விட்டான்''' என்று சொன்னாராம். உடனே அடிகளார், ‘‘என்னய்யா அப்படி ஒரு விஷயம்'' என்றவுடன்,

அய்யா அவர்கள், ‘‘தினம் தினம் எழுந்தவுடன் குளித்துவிட்டுத்தான் வருகிறார்'' என்றவுடன்,

இருவரும் ஒருவருக்கொருவர் சிரித்து மகிழ்ந் தனர். இதை அடிகளார் போகும்போது என்னிடம் சொல்லி, மகிழ்ந்துவிட்டுப் போனார்!

சென்னைக்கு வரும்போதெல்லாம் மயிலாப்பூர் தெற்கு மாடவீதி கற்பகம் விடுதி என்ற மடத்துக்குச் சொந்தமான பகுதியில் தங்குவார். அதை இடித்துப் பழுது பார்த்தபோது, மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் ஒரு தனிப் பகுதியில் தங்குவார்.

வந்தவுடன் எனக்குத் தொலைபேசி அழைப்பு தவறாமல் வரும். பலரும் சந்திப்பார்கள். தனியே பல் வேறு அரசியல், சமுதாய நடப்புகளைப்பற்றி அறிந்து கொள்ளவும், கருத்தாடவும் இரவு 10 மணிக்குமேல் சென்னை கடற்கரை சீரணி அரங்கு மேடைக்குப் பின்புறம் மணல் அருகே அடிகளாரின் கார் வந்து நிற்கும்.

அவர்கள் முன்கூட்டியே தெரிவித்தபடி, சற்று 5 மணித்துளிகள் முன்பே சென்று காத்திருப்பேன். அவரது உதவியாளர் ஒரு தரை விரிப்புடன், அதில் என்னை அமர வைத்து ஓரடுக்கு டிபன் கேரியரில்  எடுத்துவந்த உணவை இலையில் இட்டு, உணவு உண்ணச் செய்வார். அடிகளார் இரவில் பால், பழம் மட்டுமே சாப்பிடுவார். அருகில்  அமர்ந்தபடி மணிக்கணக்கில் கருத்தாடிவிட்டு விடைபெறுவார். 11.30 அல்லது இரவு 12 மணி -  நாட்காட்டி குறிப்புப்படி, அடுத்த நாள் வந்துவிடும் - வீட்டிற்குப் போய்ச் சேரும்போது!

அமெரிக்காவில் தமிழ்நாடு பவுண்டேசனும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கமும் இணைந்து ஜூலை முதல் வாரத்தில் ஆண்டுதோறும் (பல ஆண்டுகள் இணைந்து, பிறகு பிரிந்து) நடத்தும் அந்த ஆண்டிற்குரிய விழாவிற்கு தவத்திரு. அடிகளார், நீதியரசர் ஜஸ்டீஸ் பி.வேணுகோபால் ஆகியோரை அழைத்திருந்தனர்.  ஏற்கெனவே நான் எனது மகள் அருள் - பாலு இல்லத்தில் டெட்ராய்ட் (Detroit) நகரில் தங்கியிருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எனக்கும் அழைப்பு விடுத்தனர் - ஓகியோ (Ohio)  வில் நடைபெற்றது அந்த நிகழ்ச்சி - அதில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பெற்ற பிரான்ஸ் நாட்டுசெவாலியே' விருதுக்கென பாராட்ட அழைத்திருந் தனர்!

தவத்திரு. அடிகளார் அவர்களும், நீதியரசர் அவர்களும், நாங்களும் (குடும்பத்தாருடன்) ஓகியோ பவுலிங்கீரின் பல்கலைக் கழக வளாகத்தில் சந்தித்து மகிழ்ந்தோம்.

அந்த கொட்டும் குளிரிலும்கூட அடிகளார் மேல் சட்டை இல்லாது, இங்கு வருவதுபோலவே ஒரு மேல் துணியை மட்டுமே தோளில் போட்டு வந்தார்.

உடனே எனது வாழ்விணையர் அவர்கள், ‘‘இப் படி குளிரில், இந்தக் கோலத்தில் வந்துள்ளார்களே'' என்று சொன்னார்!

நான் அவர்கள் அனைவர் எதிரில்சாமிக்கு (அப்படியே அய்யா அழைப்பதுபோல் அவரை அழைப்பேன்) இங்கே குளிர் விட்டுப் போய்விட்டது' என்றேன். ஒரே சிரிப்புடன் என் முதுகில் ஒரு தட்டும் அடிகளார் கையால் விழுந்தது - பேறு பெற்றேன்!

அந்த செல்லத்தட்டு எல்லோருக்கும் கிடைக் காதது அல்லவா?

‘‘தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையா ரும் இல்லாத இடத்தை வெறிச்சோடிப் போய்விடாமல் நண்பர் வீரமணி அவர்கள் சிறப்பாக காத்து கடமை யாற்றி வருவது மெத்தவும், மெச்சத்தகுந்தது தமிழ் கூறும் நல்லுலகம் இவருக்குக் கடன்பட்டிருக்கிறது'' என்று பெரியார் திடலில் கண்கலங்கப் பேசியதைக் கேட்டு, என் கண்களிலிருந்து ஊற்றுபோல கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது!

அந்த அறிவுரை எனக்கு ஒரு பாதுகாப்பு அரண்; ஒரு நல்ல கலங்கரை வெளிச்சம் - அன்றுமுதல் இன்றுவரை!

Comments