பல்கலைக் கழகங்களில் அறிவியலுக்குப் புறம்பான பாடத் திட்டம் இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) பிரிவுக்கு விரோதமல்லவா?

பல்கலைக் கழகங்களில் அறிவியலுக்குப் புறம்பான பாடத் திட்டம் - அரசமைப்புச் சட்டப் பிரிவு 51-(எச்) க்கு விரோதமல்லவா? என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:

மத்திய அரசாகிய - பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். பா... அரசு, இப்போது ஒரு புதுவிதமான வித் தையை அதிகாரப்பூர்வமாகவே கையாண்டு வருகிறது.

விஞ்ஞானத்தையே கேலிக் கூத்தாக்குகிறார்கள்

மத நம்பிக்கைகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். கொள்கைத் திட்டங்களை மக்கள்மீது திணிக்கும் முயற்சிகளுக்கும் அறிவியல் சாயம் பூசி, விஞ்ஞானத்தையே கேலிக் கூத்தாக்குகிறார்கள்.

அகில உலக (பன்னாட்டு) விஞ்ஞானி கள் மாநாடு முன்பு மும்பையில் நடந்த போது, உலகெங்குமிருந்து மும்பையில் கூடிய விஞ்ஞானிகள் அதிர்ந்து போகும் அளவுக்கு, ‘‘விநாயகர் காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி தெரிந்திருந்தது என்பதற்கு ஆதாரம் விநாயக புராணம்'' என்பது போன்ற அபத்தமான கருத்துக்களை பிரதமர் கூறக் கேட்டனர்!

நோபல் பரிசு பெற்று இன்று இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் உள்ள வெங்கட் ராமகிருஷ்ணன், இந்த மாதிரி அபத்தமான கருத்துக்களைக் கேட்க இனி இந்தியா பக்கமே வரமாட்டேன் என்று வேதனையோடு கூறினார்.

இதைவிட மகாவெட்கக் கேடு வேறு என்ன?

தங்கள் கையில் ஆட்சி சிக்கிக் கொண் டது என்பதனால் தங்களது பசு வழிபாட்டுக் கொள்கையை பாடப் புத்தகங்களில் விஞ்ஞான போர்வையும் அதற்குப் போர்த்தி, அதில் தேர்வு எழுதி பல்கலைக் கழக மாணவர்கள் பட்டதாரிகளாக வெற்றி பெற பல்கலைக் கழக மானியக் குழு சுற்றறிக்கை அனுப்புகிறது.

அரசமைப்புச் சட்ட நெறிமுறைக்கே எதிரானது!

மதச்சார்பற்ற (Secular) கொள்கையான இந்திய அரசமைப்புச் சட்டம் வகுக்கும் நெறிமுறைக்கே அது முற்றிலும் எதிரானது என்றாலும்கூட!

‘‘பசு மாட்டுச் சாணமும், அதன் கோமி யமும் (மூத்திரமும்) கரோனா தொற்றி லிருந்து 800 பேரை குணப்படுத்தி இருக் கிறது.

பசு மாடுகள் கொல்லப்படுவதால்தான் பூமி அதிர்வுகள் ஏற்படுகின்றன.

போபால் விஷ வாயுவால் தாக்கப்பட்ட போது, பசு மாட்டுச் சாணம் பூசப்பட்ட வீடுகளில் இருந்தவர்களை அந்த மாட்டுச் சாணம் விஷ வாயுவை முறியடித்துப் பாதுகாத்தது!

பசு மாட்டின் பால் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்குக் காரணம், அதில் தங்கத்தின் துகள்கள் கலந்திருக்கின்றன.''

மோடி அரசு இலக்கு நிர்ணயித்திருக்கும் 5 டிரில்லியன் பொருளாதாரத்தில் பசு மாடு முக்கிய பங்காளருமாம்!

‘‘மாட்டிலிருந்து கிடைக்கும் சாணம், கோமியம் உள்ளிட்ட 5 பொருள்கள்புனித'மானவை. இவை இதயத்திற்கு மருந்தாகும்! ரத்தத்தைச் சுத்திகரித்து, வாத, பித்த, கப தோஷங்களைச் சரிப்படுத்தும்.

எல்லா நோய்களையும் குணப்படுத்தும் பசுவின் சாணத்தில் செல்வம் அளிக்கக் கூடிய மகாலட்சுமி உறைகிறாள்'' என் றெல்லாம் தேர்விற்கான பாடத் திட்டத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது! இதைப் படித்து இனிமேல் நம் மாணவர்கள் விஞ்ஞானிகளாக மலர இருக்கிறார்களாம்!.

இது மட்டுமா? இன்னும் படியுங்கள்!

பசுவின் நிறத்திற்கேற்ப அதன் சாணத்தின் மருத்துவ குணம் மாறுமாம்!

‘‘சொரியாசிஸ் முதல் பக்கவாதம் வரை அனைத்து வியாதிகளையும் இந்த சாணம் சரி செய்துவிடும்'' என்றும் எழுதப்பட்டுள்ளது!

பாலின் சிறப்பு, ஊட்டச்சத்துபற்றிச் சொல்லும்போது, பசுவுக்கு ஓர் உயர் அந்தஸ்து - அறிவியல் ரீதியாக என்பதை விட, ஹிந்துத்துவா கருத்தியல் அடிப் படையில்! (‘‘கோமாதா குலமாதா'') அதேநேரத்தில் எருமை மாட்டிற்கு அதே அளவுக்கு முக்கியத்துவம் தராத நிலைக்கு எது அடிப்படை?

இதற்குமுன் இந்திய விஞ்ஞானிகள் அமைப்பு, இந்த கோமியம், பசு மாட்டு சாணம் நோய்த் தீர்க்கும் என்ற புரட்டைக் கேள்விக்குள்ளாக்கியதை அறவே புறந் தள்ளி, அலட்சியப்படுத்திவிட்டு, இதைப் பல்கலைக் கழக மானியக் குழுவே பாடத் திட்டமாக்கி, தேர்வுக்குரியதாக்கி மாண வர்கள் மூளையை இப்படி காயப் படுத்தலாமா?

அந்த சக்தி இருக்கிறது என்பதை உலக அறிவியல் ஆய்வு ஏடுகளின் ஆராய்ச் சியாளர்களாக எழுதும், சோதனைகளில் ஈடுபடும் அறிவியலாளர்கள் - விஞ்ஞானிகள் ஏற்கிறார்களா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை கடமைகளின் 51-(எச்) பிரிவு, அறிவியல் மனப்பான்மையை ஒவ்வொரு குடிமகனுக்கும் பரப்பவேண்டுமெனக் கட்டளையிட்டுள்ளது. அதைப் பரப்பும் லட்சணமா இது!

பரப்பாவிட்டாலும்கூட பரவாயில்லை; நேர்மாறான அபத்த மூடநம்பிக்கைச் சேற்றை இளம் மாணவர் மூளையில் அப்பலாமா?

வெட்கம்! வேதனை!!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

18.2.2021

Comments