தா(ழ்)ப்பாள் இல்லாத தா.பா.வின் நூல் இதோ! (4)

"அவரது மடத்தில், அவர் தங்கியிருக்கும் அறைக்கருகில், அவர் படிக்கும் நூலகம் அமைத்திருக்கிறது. ஒருநாள் அங்கு சென்று நூலகத்திற்குள் நுழைந்தேன்... ஆச்சரியம்....

ஏராளமான மார்க்சீய - வெளியீட்டு நூல்கள் ஒரு வரிசையில்...

தமிழ் இலக்கிய மூல நூல்கள் பலவும், திரு.வி..வின் நூல்கள் தனி வரிசை, பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன் கதைத் தொகுதிகள் என வரிசை வரிசையாக இருப்பதையும், பல நூல்களில் அவர் படித்துக் கோடு போட்டு, குறியீடுகள் போட்டிருப்பதையும் பார்த்து வியந்தேன்.

அவர் இருந்த இடம், தரித்த ஆடையை மட்டும் வைத்து மதிப்பிட்டு இருந்தால் தவறு செய்து இருப்போம்.

ஆகா, ஒன்றை மறந்துவிட்டேன். அந்தச் சிவப்பழம், சைவ மடத் தலைவர், பெரியாரின் எழுத்துக்களையும், அவரது படத்தையும், ‘மடத்தில்' வைத்து இருந்தார்.

"இவரது படம் எப்படி.... மடத்தில்?" என்று ஒருமுறை நான் இழுத்தபோது.

"எங்கள் மடத்துக்கே, இழந்த மரியாதையை மீட்டுத் தந்தவர் அவர்"  என்றவுடன் சிரித்து அங்கீகரித்து மகிழ்ந்தேன்.

அதேபோலப் பெரியாரும் அடிகளாரைப் பாராட்டுவதோடு, அவர் மேடைக்கு வந்தால், எழுந்து வணக்கம் தெரிவிப்பார். இதைக் கண்ட சில தி.. நண்பர்கள் பெரியாரிடம், "நீங்கள் எழுந்து வணக்கம் தெரிவிக்க வேண்டுமா?" எனக் கேட்ட போது, "அவர்கள்தான் அவரை மதிப்பது இல்லை. நாமும் மதிக்காவிட்டால், அது சரியாகுமா?" என்றார்.

நாளொரு வண்ணமாக இந்த உறவு வளர்ந்து வந்தது.

எட்டயபுரம் பாரதி விழா

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்' நடத்தி வரும் பாரதி விழாவிற்கு அடிகளார் தவறாமல் பங்கேற்று வந்ததை நாடறியும். ஒருமுறை அவர் வந்திருந்த போது, வேறு ஒரு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

"இந்த நிகழ்ச்சி முடிந்து, நமது நிகழ்ச்சி தொடங்க சிறிது நேரம் ஆகும், அதற்குள் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து விடலாம்" என்றார்...அவருடன் காரில் புறப்பட்டேன், எட்டயபுரத்தை விட்டு காட்டு வழியில் வண்டி வெகுதூரம் போய் கொண்டிருந்தது. ‘இங்கே எங்கே சாப்பிட?..' என வியந்து கொண்டிருந்தேன்.

ஒரு வெட்ட வெளிக்காட்டருகில் கார் நின்றது. ஒரு விரிப்பை கட்டாந் தரையில் பரப்பிய பின்னர் அவர் உட்கார்ந்தார். அவரது துணையாளர்கள் சாப்பாட்டுப் பாத்திரங்களை இறக்கி பங்கிடத் தொடங்கினர். "அவருக்கு அவரது சாப்பாடு" என்றார்... அவருக்கு வழங்கிய உணவில் புளிப்பு, உறைப்பு, இனிப்பு எதுவும் இருக்காதாம். எனக்கு வேறுவகை என்று வாங்கியிருக்கிறார்கள்...

"உங்கள் உணவில் என்ன வித்தியாசம்?" என்று கேட்ட போது, "அதில் காரம், புளிப்பு சேர்ப்பது இல்லை" என்றார். "கொஞ்சம் கொடுங்கள்" என்று ஒரு கரண்டி வாங்கிச் சாப்பிட்டேன். மழுமழு என்றிருந்தது. நான் முகத்தைச் சுளிப்பதைக் கண்டவர்,

"சுவைக்கு அடிமை ஆகலாமா?" என்றார்.

"இல்லாமல் சாப்பிடுவது எப்படி?" என்றவன், "அப்படி இயற்கை தரும் சுவைகளையும் நிராகரித்து ஏன் வாழ வேண்டும்?" என்றேன். "இது பல நுறு ஆண்டுகளாக நடக்கும் விவாதம், நாம் வேலைக்குப் போகலாம்" என எழுந்துவிட்டார்.

குன்றக்குடி அடிகளாருடன் சேர்த்து கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் பல.

அரசமரம் பிள்ளையார் கோயில்

மதுரை அரசமரம் பிள்ளையார் கோயிலில் ஆண்டு தோறும் இரவு முழுக்க ஓர் இலக்கிய விழா, பட்டிமன்றம் நடப்பது வழக்கம்.

ஒருமுறை "மனித குலச் சிக்கல்களைத் தீர்க்கப் பெரிதும் வழி காட்டுவது மார்க்சீயமா? வள்ளுவமா? காந்தீயமா?" என்று மூன்று அணிகளைக் கொண்ட ஒரு பட்டிமண்டபத்திற்கு அடிகளார் தயார் செய்து, கலந்து கொள்வோர் பட்டியலையும் தயாரித்துவிட்டார்.

அந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரை ஆற்றியவர் மார்க்சிஸ்டுக் கட்சியின் தலைவர் என்.சங்கரையா, நடுவர் அடிகளார்... மார்க்சீய அணிக்குழுவிற்கு என் தலைமை... இன்னொரு அணிக்கு புலவர் கீரன் என்றும், இன்னுமொரு அணிக்கு பேராசிரியர் பாலுச்சாமி என்றும் நினைக்கிறேன். பல்லாண்டுகள் கழிந்ததால் பெயர்கள் சரிவர நினைவுக்கு வரவில்லை.

அன்று திரண்டிருந்த மாபெரும் மக்கள் திரளை, வேறு எங்கும், என்றும் நான் கண்டதே இல்லை. இரவு பத்து மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி காலை ஆறு மணிக்கு முடிந்தது.

"காந்தீய நெறிவழிகளில், குறள் அமுதம் கலந்த மார்க்சீயமே மனிதகுலச் சிக்கலைத் தீர்க்கும்" என்று தீர்ப்புக் கூறியவர், மார்க்சீயத்தின் கூறுகளைத் திறம்பட, அழகுத் தமிழில் விளக்கினார். "இதுதான் நடைமுறைக்கு உகந்தது" என்றும் கூறினார். திருக்குறள் நீதிபோதனை நூலாகவே நின்றுவிட்டதே என்ற கவலையைத் தெரிவித்தவர்,  காந்தீயம் - காந்தியடிகளுடன் எரியூட்டப்பட்டுவிட்டதோ? என்ற அய்யத்தையும் எழுப்பினார். இருப்பினும் அது உயிர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் கூறி நிறைவுரை செய்தார். மறக்க முடியாத நிகழ்ச்சி; மறக்கக் கூடாத நல்லுரை."

Comments