தா(ழ்)ப்பாள் இல்லாத தா.பா.வின் நூல் இதோ! (3)

குன்றக்குடி அடிகளார்

"ஜீவாவுடன் இருந்த உறவு, நடந்த சம்பவங் களை 'ஜீவாவும் - நானும்' என்ற நூலில், ஒரு பகுதியை எழுதியுள்ளேன்.

நான் பட்டப் படிப்பை முடித்தவுடன், அதே கல்லூரியில் துணை ஆசிரியராக, ஆங்கில மொழித் துறையில் சேர்ந்தேன். காரைக்குடி தமிழ் இலக்கியச் சிந்தனை ஆறு ஓடும் பூமியாக அப்போது இருந்தது. புகழ்மிக்க கம்பன் விழாவை மிகச் சிறப்பாக சா.கணேசன் நடத்தி வந்தார். அங்கு வந்த தமிழ்ச் சான்றோர். புலவர் களைக் காணும், அவர்களது பேச்சைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அப்போதுதான் குன்றக்குடியில் புதிதாக ஆதீனப்பட்டம் சூட்டப் பெற்று அருணாசல தேசிக சுவாமிகள் பொறுப்பு ஏற்றிருந்தார். பிற் காலத்தில் அவரைப் பார்த்த பலர் இருக்கலாம். அவர் பதவி ஏற்ற போது மிகவும் இள வய தினராக இருந்தார். சரீரம் கட்டுடன் இருந்தது. பருமன் தெரியாதிருந்த நல்ல உடல் வாகு, வளையல் மாதிரி இரு காதுகளிலும் தங்கக் குண் டலம் ஆடும்... கருந்தாடி, முடி, இது தோற்றம்.

பேச்சின் குரல் ஈர்ப்பதாக இருந்தது. தமிழ்ச் சொற்கள்... அழகுபட ஒலித்தன. கேட்கக் கேட்க இனிமையாக இருந்தது.

நல்ல மேடைத் தோற்றம், நல்ல தமிழ்ப் பேச்சு... ஆனால், ஆன்மிக விளக்கம் தான்... பல பெரிய ஆதீனங்களின் சம்பிரதாய பேச்சு நடையிலிருந்து இவரது பேச்சு மாறுபட்டு ஒலித்தது. நேரடியாக அல்லாமல் சாடை மாடையாக சில சீர்திருத்தக் கருத்துக்களையும் அடுக்குவார். அவரது பேச்சில் தமிழின் அழகே மேலோங்கி நின்றது.

அழகப்பா கல்லூரியில், தமிழ்த் துறையில் புகழ்மிக்க பேராசிரியர்கள் பலர் இருந்தனர். அவர்களில் .சு.. மாணிக்கனாரும் ஒருவர். அவருடன் .நமசிவாயம், குழந்தை நாதன் ஆகிய தமிழ் விரிவுரையாளர்களும் இருந்தனர்.

நாங்கள் பெரும்பாலும் அடிகளாரைக் கிண் டலடித்து, விமர்சனம் செய்பவர்களாகத்தான் இருந்தோம். காரைக்குடியில் ஓர் இலக்கிய விழா நடந்தது. அதில் தமிழ்க்கடல் ராய சொ., ரொ. முருகப்பா, சா.கணேசன், அடிகளார், வாரியார் எனப் பலர் கலந்து  கொண்டனர்.

ராய சொ. பேசும் போது மடாதிபதிகள், தங்க அணிகலன்கள் அணிவதைக் கடுமையாகக் கண்டித்து "மண்ணைச் சுருக்கி, உள்ஒளி பெருக்கும் அழகா இது?" என கடுமையாகப் பொழிந்து தள்ளினார். மறுவாரம் மேடையில் குன்றக்குடி அடிகளாரின் காதுகளில் தொங்கிய தங்க வளையலைக் காணோம்... ராய சொ. சொன்னதாலா? அடிகளாரே முடிவு எடுத்தாரா? தெரியவில்லை.

சில மாதங்கட்குப் பிறகு காரைக்குடி உயர் நிலைப் பள்ளி ஆண்டு விழாவிற்கு அடிகளார் தலைமை தாங்கி பரிசுகள் வழங்குவதாக இருந் தது. கூட்டம் தொடங்கும் நேரம் நெருங்கியும் அவரைக் காணோம்... வாயிலில் பிரமுகர்கள், பெரும் வணிகர்கள் அவரை வரவேற்கக் காத் திருந்தனர். அவர் கார் கண்ணில் தென்படவே இல்லை... லேசான முணுமுணுப்பு இருந்தது.

சைக்கிளை ஓட்டிக் கொண்டு திடீரென்று வந்து சேர்ந்தார் அடிகளார். வரும் வழியில் கார் பழுதுபட்டதாம், வாடகை சைக்கிளை எடுத்து ஓட்டிக் கொண்டு வந்ததாக சொன்னவர்,  "ஒரு மனிதன் காலம் தாழ்த்தி வருவதால் பல நூறு பேரின் மதிப்பிட முடியாத நேரத்தைப் பாழடிக் கும் தமிழ் நாட்டார் வழக்கத்தைக் கைவிட வேண்டும்" என்ற முன்னுரையை பலத்த கைதட் டலுக்கு இடையே தொடங்கியவர், பாரதியின் புதுமைப் பெண்ணைப் படம் பிடித்துக் காட்டி விட்டு விடை பெற்றார்.

நாங்கள் எங்கள் விமர்சனக் கருத்தை மாற்றிக் கொண்டு, அவரை மதிக்க, புரிந்து கொள்ளத் தொடங்கினோம். "இவர் புதுமைச்  சாமியார். இவருடன் பழங்குகள்" என ஜீவாவும் சொன்னார். "அவர் இருக்கிற இடம், தரித்துள்ள உடை, அவரது தனிப்பட்ட அக வாழ்க்கை பற்றி எதுவும் பேசாதீர்கள். அவர் வெளியிடும் கருத் துக்களை மட்டும் வைத்து அவரோடு உற வாடுங்கள்" என் ஜீவா அறிவுரை கூறினார். அதை நான் பின்பற்றினேன்.

முதல் சந்திப்பு

அடிகளார் பேசியதைக் கேட்பவர்களில் ஒருவனாக மட்டுமே இருந்து கேட்டு வந்த என்னை ஓர் இலக்கிய விழாவில், பட்டிமன்றத் தில் கலந்து கொள்ள அவரிடமிருந்து அழைப்பு வந்தது. கூட்டம் நடக்கும் நாளன்று அவரது காரே நமசிவாயம், குழந்தைநாதன் ஆகியோரு டன் என்னையும் அழைத்துச் செல்ல வந்தது. குன்றக்குடி போனவுடன் அடிகளார் காரில் முன் வரிசை இருக்கையில் உட்கார்ந்தார்.

மறுநிமிடமே எங்களுடன் நெடுநாட்கள் பழகியவர் மாதிரி எங்கள் பெயரைச் சொல்லி, ஒவ்வொருவரிடமும் பேசத் தொடங்கினார்.

பொதுவாக மடாதிபதிகள் சமமாகப் பேச மாட்டார்கள். தங்களது வண்டியில் பிறரை ஏற்றிக் கொள்ளவும் மாட்டார்கள்.

இவரது நடவடிக்கை முற்றிலும் மாறுட்டதாக இருந்தது.

என் பக்கம் திரும்பியவர், "நீங்கள் எப்பொ ழுது கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்தீர்கள்?" எனக் கேட்டார். பின்னர், "எதற்காகச் சேர்ந்தீர் கள்?" என்றவர், "பொதுவுடைமைச் சிந்தனை, சைவ சிந்தாந்தத்திற்கு முரண்பட்டது அல்ல" என்றவர், "தமிழ்ச் சிந்தனையில் இது ஆதி முதல் இருந்து வந்துள்ளது. நடக்கத்தான் இல்லை" என்றார். அன்றைய கூட்டத்தில் அவரது உரை அதுபற்றிய விளக்கமாகவே இருந்தது...

மரியாதையும் கூடியது. நெருக்கமும் வளர்ந் தது."

(தொடரும்)

Comments