‘‘இந்தியக் கூட்டாட்சி முறையைத் தகர்த்திடும் மூன்று வேளாண்சட்டங்கள் 2020'' நூல் வெளியீடு

விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவர் நீதியரசர் .கே.ராஜன்

புத்தக வெளியீட்டில் தமிழர் தலைவர் புகழுரை

சென்னை, பிப். 27 ‘‘இந்தியக் கூட்டாட்சி முறை யைத் தகர்த்திடும் மூன்று வேளாண் சட்டங்கள் 2020'' என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய நீதியரசர் .கே.ராஜன் அவர்கள் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நூல் வெளியிட்டு - தலைமையுரை

கடந்த 20.2.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற ‘‘இந்தியக் கூட்டாட்சி முறையைத் தகர்த்திடும் மூன்று வேளாண் சட்டங்கள் 2020'' என்ற தலைப்பில் நீதிபதி .கே.ராஜன் அவர்கள் எழுதிய நூல்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டு தலைமையுரையாற்றினார்.

அவரது தலைமையுரை வருமாறு:

 ‘‘இந்தியக் கூட்டாட்சி முறையைத் தகர்த்திடும் மூன்று வேளாண் சட்டங்கள் 2020''

காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில், வரலாற்றில் நிலைக்கக்கூடிய - மற்றவர் கள் எல்லாம் தயங்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ஓய்வு பெற்ற நீதியரசர் .கே.ராஜன் அவர்கள் நமக் கென்ன என்று, தன்னுடைய ஓய்வூதியத் தொகையை வாங்கிக்கொண்டு உல்லாசமாக இருப்பதற்குப் பதிலாக,  உண்மையைத் தெளிவாகச் சொல்ல வேண்டும் - மற்றவர்கள் சொல்லத் தயங்குகிற உண் மையைக்கூட துணிவாகச் சொல்லவேண்டும் என்ற தெளிவோடு, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை  எதிர்த்து டில்லியில் 87 நாட்களாக விவசாயிகள் இரவு, பகல் என்றும் பார்க்காமல், கொட்டும் பனியா? கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? என்பதைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல், போராடிக்கொண்டி ருக்கிறார்கள் - இதுவரையில் எத்தனையோ பேர் தங்களுடைய இன்னுயிரை இழந்திருக்கிறார்கள் - அப்படிப்பட்ட உயிர்ப் பலியை ஏற்படுத்தியுள்ள மத்திய அரசின் அந்த மூன்று வேளாண் சட்டங் களைப்பற்றி - அவை எப்படி விவசாய விரோதச் சட்டங்கள் - விவசாய விரோத சட்டங்கள் மட்டு மல்ல, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக் கின்ற சட்டங்கள் - அரசமைப்புச் சட்டத்தைக் கபளீ கரம் செய்யக்கூடிய சட்டங்கள் என்பதைச் சட்ட பூர்வமாக - இதில் அரசியல் பார்வையோ அல்லது வேறு வெறுப்புணர்ச்சிகளுக்கோ, உள்நோக்கத் திற்கோ இடமில்லாமல், ஒரு சட்ட நிபுணர், சிறந்த ஆழ்ந்த புலமையுள்ள ஒருவர் என்ற உணர்வோடு, இந்தப் பிரச்சினையை, ஆழமாக, ஒரு வகுப் பெடுத்து நமக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கின்ற வகையில், அருமையான இரண்டு நூல்களை ‘‘இந்தியக் கூட்டாட்சி முறையைத் தகர்த்திடும் மூன்று வேளாண் சட்டங்கள் 2020'' என்ற தலைப்பில் தமிழ் மொழியிலும், அந்த நூலையே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ‘‘கிரீக்ஷீவீநீuறீtuக்ஷீமீ கிநீts 2020 ஞிமீனீஷீறீவீtவீஷீஸீ ஷீயீ திமீபீமீக்ஷீணீறீ ஷிtக்ஷீuநீtuக்ஷீமீ ஷீயீ மிஸீபீவீணீ''  என்ற தலைப்பில் எழுதியிருக்கின்ற மாண்பமை டாக்டர் ஜஸ்டிஸ் .கே.ராஜன் அய்யா அவர்களே,

இந்நிகழ்வில் தொடக்கவுரையை சிறப்பாக நிகழ்த்தியுள்ள கழக செயலவைத் தலைவர் மானமிகு தோழர் அறிவுக்கரசு அவர்களே,

இந்நிகழ்வில் நம் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய கழகப் பொருளாளர் மானமிகு தோழர் வீ.குமரேசன் அவர்களே,

அறிமுகவுரையாற்றிய கழகப் பொதுச் செயலா ளர் அன்புராஜ் அவர்களே,

டில்லியில் இருந்துகொண்டு, நமக்கு அருமை யான ஒரு உரையை ஆங்கிலத்தில் ஆற்றிய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினுடைய இணைச் செயலாளர் தோழர் டாக்டர் (முனைவர்) விஜூ கிருஷ்ணன் அவர்களே,

இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்தும், இறுதியில் நன்றியுரை ஆற்றவிருக்கக் கூடிய பகுத் தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் செயல்வீரர் மானமிகு தமிழ்ச்செல்வன் அவர்களே,

இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய திராவிட மாணவர் கழகத்தின் மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

இந்நிகழ்விற்கு வந்திருக்கக்கூடிய சான்றோர் பெருமக்களே, வழக்குரைஞர் பெருமக்களே, நண் பர்களே, பொறுப்பாளர்களே உங்கள் அனைவருக் கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில் நீதியரசர் அவர்களுக்கு நன்றி!

இங்கே எல்லோரும் மிகத் தெளிவாக விளக்க மாக எடுத்துச் சொன்னார்கள். இந்த நூலை எழு தியமைக்காக  தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில் நீதியரசர் அவர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும், பாராட்டவேண்டும்.

ஏனென்றால், இந்தக் காலகட்டத்தில், இப்படி யொரு அருமையான ஒரு நூல் வெளிவந்திருப்பது அதிலும் தெளிவான சட்ட நுணுக்கங்களோடு வெளிவந்திருப்பது சிறப்பானதாகும்!

இந்த நூல்களை எல்லா மக்களுக்கும் அனுப்பி வைக்கவேண்டும்; குறிப்பாக நீதிபதிகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும். இங்கே வந்திருக்கும் வழக்குரைஞர்கள் இந்நூல்களை வாங்கி, வழக்கு ரைஞர்களுக்கு வழங்கி, அவர்களைப் படித்து தெளிவு பெறச் சொல்லுங்கள்.

இந்த நூலை மற்றவர்கள் எழுதுவதைவிட, டாக்டர் ஜஸ்டிஸ் .கே.ராஜன் அவர்கள் எழுதுவ தற்கு மூன்று தனித் தகுதிகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை  இங்கே நண்பர்கள் தெளிவாகச் சுட்டிக் காட்டினார்கள்.

சட்ட நுணுக்கங்களை நுண்மான் நுழைபுலத்தோடு ஆய்வு செய்தவர்

ஒன்றை மிக முக்கியமாக சொல்லவேண்டு மானால், நீதியரசர் அவர்கள் நீண்ட காலமாக பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளைக் கொடுத்த அனுபவம் உள்ளவர். சட்ட நுணுக்கங் களை நுண்மா நுழைபுலத்தோடு ஆய்வு செய்தவர் அவர்.

இரண்டாவதாக, நம்முடைய நண்பர் அறிவுக் கரசு அவர்களும், குமரேசன் அவர்களும், மற்ற வர்களும் சுட்டிக்காட்டியதைப்போல,  நீதியரசர் .கே.ராஜன் அவர்கள், தமிழ்நாடு அரசின் சட்டத் துறை செயலாளராக இருந்து, பல சட்டங்களை எழுதுவதற்குக் காரணமாக இருந்தவர். சட்டங்க ளையே உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தவர் என்பதுதான் மிகவும் முக்கியம். எனவே, அவருக் குப் பரந்த அனுபவம் அதிகம் உண்டு.

ஒரு சட்டம் எப்படி இருக்கவேண்டும்? அதனு டைய நுணுக்கங்கள் என்ன? போன்ற அனுபவங்கள்  நீதிபதிகளாக இருக்கும் எல்லோருக்கும் வராது;  அவர்களை  நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், நீதியரசர் .கே.ராஜன் அவர்கள் அனு பவம் பெற்று நீதிபதியானார்.

 பலருக்கும் தெரியாத ஒரு செய்தி

அதற்கு முன்பே அவருக்கு சமூகநீதி உணர்வு உண்டு. மாவட்ட நீதிபதியாக இருந்த நேரத்தில், மண்டல் கமிசன் வந்தபோது - பலருக்கும் தெரியாத ஒரு செய்தியை நான் இங்கே சொல்கிறேன்.

திராவிடர் கழகத்தைத் தவிர, வேறு யாரும் மண்டல் கமிசனைப்பற்றி கவலைப்படாத  ஒரு காலகட்டத்தில், சில தலைவர்கள் பேசும்போதுகூட, ‘மண்டல கமிசன்', ‘மண்டல கமிசன்' என்றுதான் சொல்வார்கள். அது  மண்டல கமிசன்' அல்ல - ‘மண்டல் கமிசன்' என்று திருத்திச் சொன்னோம்.

அந்த நேரத்தில், அய்யா .கே.ராஜன் அவர்கள் மாவட்ட நீதிபதியாக இருந்தார். அவர் மண்டல் கமிசனுடைய தேவை, பரிந்துரையைப்பற்றி ஒரு புத்தகம் எழுதினார் என்றால், அவருக்கு இருந்த சமுதாய உணர்வு, சமூக அக்கறை  எப்படிப்பட்டது என்பதற்கு அந்த நூல் ஓர் அற்புதமான அடையாள மாகும். ஆகவே, அப்படி தயாரானவர் அவர்.

விவசாயக்  குடும்பத்தைச் சார்ந்த, விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவர்!

அதைவிட இன்னொரு சிறப்பு என்னவென்றால், நீதியரசர், சட்ட நிபுணர், சட்டத்தை எழுதியவர் என்பதைவிட, விவசாயக்  குடும்பத்தைச் சார்ந்த, விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவர். விவ சாயத்தைப்பற்றி அவருக்குத் தெரியும். எனவே, விவசாயிகளுடைய பிரச்சினைகளில், தேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்.

எனவே, மேற்கண்ட மூன்று தகுதிகள், இங்கே வெளியிடப்பட்ட நூல் நமக்குக் கிடைப்பதற்கு மிகவும் முக்கியமானதாகும்.

இதில் அரசியல் பார்வை கிடையாது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங் களால் சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு, விவசாயிகளுக்குக் கேடு. இந்தியா விவசாயிகளை நம்பித்தான் வாழ்கிறது என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பதில் என்ன பயன்? விவசாயிகளுடைய வாழ்வு எப்படிப்பட்டது என்பதை கவனத்தில்கொண்டுதான், அவருடைய சட்ட ஞானத்தை தன்னுடைய சமூக உணர்விற்கு நீதியரசர் .கே.ராஜன் அவர்கள் பயன்படுத்தி யிருக்கிறார்.

ஓய்வு பெற்ற நீதிபதிகள் எல்லோரும் இப்படி தங்கள் அறிவை, ஆற்றலைப் பயன்படுத்துவது இல்லை. ஒரு சில நீதிபதிகள்தான் துணிந்து மக்கள் மன்றத்திற்கு வந்து சமூக உணர்வோடு செய் கிறார்கள் என்றால், அதில், அய்யா நீதியரசர் .கே.ராஜன் அவர்கள் உண்மையைப் பேசத் தயங்காத வர்கள்.

ஆகமத்தை தோலுரிக்கக் கூடிய அளவிற்கு,

ஆய்வு செய்து நூல் எழுதியவர்!

குறிப்பாக, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் களாக வேண்டும் என்று சொன்ன நேரத்தில், ஆகமப்படி அர்ச்சகர் பயிற்சி எடுக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆகமங்கள் என் றால், அதுவரையில் யாருக்கும் புரியாத விஷயம் போன்று இருந்தது. இங்கே நண்பர்கள் சுட்டிக் காட்டியதுபோன்று, அந்த ஆகமத்தை தோலுரிக்கக் கூடிய அளவிற்கு, ஆய்வு செய்து அது நூலாகவும் வெளிவந்திருக்கிறது.

ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று, மதுரை மீனாட்சி கோவிலா? அந்தக் கோவிலில் எத்தனை பேர் ஆகமப் பயிற்சி பெறாதவர் அர்ச்சகராக இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து, அதனை அறிக்கையாகக் கொடுத்தார், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது.

அனைத்து ஜாதியினரும்

அர்ச்சகராகலாம் வழக்கு

சிவ ஆகமத்திற்குத் (சைவாகமம்) தனியாக, வைணவ (வைகானச) ஆகமத்திற்குத் தனியாக பயிற்சி கொடுத்து, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வழக்கில், நீதியரசர் .கே.ராஜன் அவர்கள் கொடுத்த அறிக்கையை உச்சநீதி மன்றம் சுட்டிக்காட்டி, தீர்ப்பை அளித்தது என்ற சொன்னால், அவருடைய பெருமைக்கு இதைவிட அதிகம் சொல்லவேண்டிய அவசியமில்லை!

அந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. கலைஞர் அவர்கள், ‘‘தந்தை பெரியா ருக்கு என்னால் அரசு மரியாதைதான் கொடுக்க முடிந்தது. ஆனால், அவருடைய நெஞ்சில் தைத்த  முள்ளை எடுக்க முடியவில்லை'' என்று வேதனைப் பட்டார். பிறகு அதற்காக ஒரு சட்டம் கொண்டு வந்து, அதனை கலைஞர் அவர்கள் சாதித்துக் காட்டினார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்று, அந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்தது. நீதியரசர் .கே.ராஜன் அய்யா அவர்களின் குழு வினுடைய பரிந்துரை அறிக்கை மிக முக்கியமானது.

ஆகவே, அவர்கள் எல்லாத் துறைகளிலும் சமூக உணர்வு படைத்தவர். எங்கே அநியாயம் நடைபெறுகிறதோ, அதனைச் சுட்டிக்காட்டத் தவறாதவர்.

விவசாயம் என்பதற்கு என்ன பொருள்!

அந்த வகையில் நண்பர்களே, விவசாயம் என்பதற்கு என்ன பொருள் என்பதை மிக அழகாக இங்கே விளக்கிச் சொன்னார்.

இந்த புத்தகத்தை எழுதுவதற்குமுன், அவரு டைய கட்டுரையை என்னிடம் கொடுத்திருந்தார். அதனை நான் படித்தபொழுது, ஓர் அரசமைப்புச் சட்ட வகுப்பிற்குள் நுழைந்ததுபோன்று, அவ்வளவு ஆழ்ந்து படித்தேன்.

நீதியரசர் அவர்களை நான் தொடர்பு கொண்டு, ‘‘உங்கள் கட்டுரை மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதனை ஒரு புத்தகமாகக் கொண்டு வரவேண்டும்'' என்று உற்சாகப்படுத்தினேன்.

நம்முடைய கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களிடமும் சொன்னேன்.  ஏனென்றால், அவர் பிஎஸ்.சி., அக்ரிகல்சர் பட்டம் பெற்றவர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் விவசாயத் துறை அதிகாரியாகப் பணியாற்றி, சிறப்பான அனுபவத்தைப் பெற்றவர்.

அந்தக் கட்டுரைகளையெல்லாம் ஒரு நூலாக ஆங்கிலத்தில் தயார் செய்தபொழுது, இதனை தமிழிலும் வெளிவருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றோம். அதுபோலவே, ஆங்கிலத் திலும், தமிழிலும் வெளிவந்திருக்கிறது.

தமிழ்கூறும் நல்லுலகம், விவசாயப் பெருங் குடிமக்கள் எல்லோரும் அய்யா நீதியரசருக்கும், அவருடைய உழைப்பிற்கும், அவருடைய அறி வுக்கும் தலைதாழ்ந்து நன்றி செலுத்தி, பாராட்டக் கடமைப்பட்டு இருக்கிறோம். ஆகவே, பாராட்டு தலையும், நன்றியையும் நான் அவருக்குத் தெரி வித்துக் கொள்கிறேன்.

(தொடரும்)

Comments