ஊரடங்கின் போது பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் கரோனா வழக்கு தள்ளுபடி

தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, பிப். 21-தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 19.2.2021 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: மத்திய அரசு கரோனா தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்த ரவை பிறப்பித்தது. தமிழக அரசும் இந்த உத்தரவை அமல்படுத்தியது.

இதையடுத்து, காவல் துறையினர், மாநிலம் முழுவதும் ஆங்காங்கு சோதனை சாவடிகள், வாகன தணிக்கை செய்தும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், கரோனா தொற்று தொடர்பாக வதந்தி பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. அதன்படி மாநிலத்தில் சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள், வன்முறையில் ஈடுபட்ட குறிப் பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்கு, முறைகேடான வழிகளில் -பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப் பட்ட வழக்குகள் போன்றவை தவிர மற்ற வழக்குகளிலும் பொது மக்கள் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது.

போராட்டங்களின்போது தடையைமீறி பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகவும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்காகவும், காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காகவும் சுமார் 1,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளுள் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்கு கள் மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவை தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது.

கூட்டுறவு சங்கங்களின் தற்காலிக ஊழியர்களை

பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப். 21- தமிழகம் முழுவதுமுள்ள கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு பிப். 19 அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் சார்பில் சிறப்பு அரசு பிளீடர்கள் பால ரமேஷ் எல்.பி.சண்முகசுந்தரம், மனுதாரர்கள் சார்பில் சி.பிரகாசம் உட்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 19.2.2021 அன்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், "கூட்டுறவு சங்கங்களில் தற்காலிகமாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களை அரசுப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்த கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடராத தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் இதேபோன்ற தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவை 8 வாரத்தில் அமல்படுத்த வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கணவனைப் பிரிந்த மனைவியின் செலவுக்கு பணம் தருவது கணவனின் கடமை

சென்னை, பிப். 21- தமிழ்நாட்டை சேர்ந்த கணவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ், அவருடைய மனைவி சென்னை கீழ் நீதிமன்றத்தில் 2009ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இதில், மனைவியின் பராமரிப்புக்கு மாதம் ரூ.1.75 லட்சம் வழங்கும்படி கணவருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, மனைவியின் பராமரிப்பு செலவுக்கான தொகை, நிலுவைத் தொகையை வழங்காததால் அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் கணவர் மீது வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்..பாப்டே அமர்வில் 19.2.2021 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கணவரின் தரப்பில் ஆஜரான வக்குரைஞர், `வழக்கில் சம்பந்தப்பட்ட கணவர் தொலைபேசி துறையில், தேச பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது மிகவும் கஷ்டத்தில் இருப்பதால், அவரிடம் பணமில்லை. எனவே, பணத்தை செலுத்த 2 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும்,’ என கோரினார். 

இதனைக் கேட்ட தலைமை நீதிபதி, பிரிந்த மனைவியின் பராமரிப்பு செலவுக்கான  தொகையை செலுத்தும் பொறுப்பை கணவர் தட்டிக் கழிக்க முடியாது என்று கூறியதுடன், மாதம்தோறும் செலுத்த வேண்டிய  1.75 லட்சத்துடன், ஏற்கெனவே நிலுவையில் உள்ள  2.60 கோடியையும் 4 வாரங்களுக்குள் செலுத்த உத்தரவிட்டார்.  அப்படி செய்யாவிட்டால், கைது செய்து சிறையில் அடைக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டியது இருக்கும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

Comments