தி கிரேட் இண்டியன் கிச்சன் The Great Indian Kitchen

காலந்தோறும்பிராமணீயம்' என்று சொல்வது போல் இன்றளவும் பெண் களுக்கான சுயசிந்தனையை வெளிப் படுத்த நினைக்கும்போது, அதனைத் தடுக்கும் வகையில் ஒளிந்திருக்கும் மத நம்பிக்கை, ஆணாதிக்க சிந்தனையை  போட்டுடைத்திருக்கும் திரைப்படம் தான்தி கிரேட் இண்டியன் கிச்சன்”.

திராவிட மொழிக்குடும்பத்தின் இளைய மொழியான மலையாள மொழி யில் இந்த கொடிய கரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு சில காட்சிகளைத்தவிர, ஒரு வீட்டிலேயே முழு கதையையும் நகர்த்தி 100 நிமிடங்களில் எடுக்கப்பட்ட திரைப்படம்.

கணவன், மனைவி, மாமனார், மாமியார் என  ஒரு சிறிய குடும்பத்திற்குள் நடக்கும் இயல்பான தினசரி வாழ்க் கையைக் காண்பித்து. அதில் பெண்கள் காலை எழுந்திருக்கும் நிகழ்வு முதல் இரவு படுக்கையறை வரை 24 மணிநேரம் சுற்றும் கடிகாரத்தினைப்போல் சுழன்ற டிக்கும் நிகழ்வுகளைக் காண்பித்திருக் கிறார் படத்தின் கதையாசிரியரும், இயக் குநருமான ஜியோபேபி.

சாதாரணமான நிகழ்வாக ஆரம்பித்த படக்காட்சிகள் சில நிமிடங்களுக்குள் பல கேள்விகளையும், சிந்தனைகளையும் பரவச்செய்கிறது. தீட்டென்று சொல்லி ஒதுக்கும் போதும், வாகனத்தில் இருந்து தவறி விழுந்த கணவனைத் தூக்கிய போது மதமெனும் பழைமைவாதத்தினை முன் நிறுத்தும் போதும், நடன வகுப்பு ஆசிரியர் வாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற ஆவலை வேண்டாம் என்று தவிர்த்த போதும் பெண்களை இன்றள வும் பேதம் பார்க்கும் ஆண்கள் நிலையை வெளிப்படுத்தியிருக்கிறது.

காலை பல் துலக்க 'பிரஷ்' எடுத்துக் கொடுக்கும் காட்சி முதல் இரவு கணவன் விளக்கை அணை என்று சொல்லும் போதும் - அவள் அதற்கு விளக்கம் சொல்லும் காட்சிகள் வரை  பெண்களை போகப்பொருளாகவும், அடிமைகளாக வும் நடத்திக்கொண்டிருக்கும் ஆண் களை அம்பலமாக்கியிருக்கிறது.

இவ்வளவு இன்னல்களில் இருந்தும் விடைபெற எண்ணி அனைவரும் இருக் கும் போதே புகுந்த வீட்டில் இருந்து வெளியேறி தன்னுடைய வீடு நோக்கி வரும் போது சபரிமலையில் பெண்களை அனுமத்திக்கக் கோரி நடைபெறும் போராட்டக் களத்தைஙக கடந்து வீடு வந்ததும், அங்கு தன்னுடைய தம்பி தன் தாயிடம் தண்ணீர் கேட்கும் போது தாய் அவளது தங்கையிடம் சொல்லும் போது, கதாநாயகி இடைமறித்து அவனைப் பார்த்து, "ஏன், நீயே எடுத்து குடிக்கக் கூடாதா?"  என்று ஆவேசமாகக் கேட்கும் போது ஒட்டு மொத்த பெண்களுக்காக எழுப்பும் குரலாகப் பார்க்கத் தோன்றும். இறுதிப் பாடல் அவளின் கோபத்தையும், சமூகத்தையும் வெளிப்படுத்தும் காட்சி களாக வைக்கப்பட்டிருக்கிறது. இப்பட முடிவில் படத்தின் பெயர்தி கிரேட் இண்டியன் கிச்சன்என்று மீண்டும் ஒரு முறை படித்த போது இயக்குநரின் வஞ்சப்புகழ்ச்சியணி எனும் இலக்கணப் பெயர் தான் நினைவிற்கு வருகிறது.

சபரிமலை விவகாரம் படத்தில் வந் திருப்பதால் பிரபல ஓடிடி தளங்களான அமேசான் பிரைம் - (amazon prime)  மற்றும் நெட்பிளிக்ஸ்  (Netflix)   போன்ற உலகளாவிய வணிக தளங்கள் மறுத்த நிலையில் 'நீ ஸ்ட்ரீம்' (Neestream)  நேரடியாக வெளியிட்டிருக்கிறது.

இப்படத்தைப் பார்த்த பிறகு என் மனைவி (House wife) இல்லத்தரசியாக இருக்கிறார் என்கிற வழக்குச்சொல் மாறி அவர் வீட்டில் வேலை பார்க்கிறார் என்று வரலாம். பெண்கள் மற்றும் முற்போக் காளர்களால் திரையரங்கில் கொண்டாடித் தீர்க்க வேண்டிய திரைப்படம். கரோனா பரவும் காலம் ஆதலால் வீட்டில் இருந்து பார்க்கலாம்.

- வழக்கறிஞர் சோ.சுரேஷ்

Comments