தேசியத் திருவிழா

தைப் பொங்கல் திருநாள் தேசியத் திருவிழாவாகும். இது ஓர் ஜாதியாருக்கோ, இனத்தாருக்கோ, நாட்டாருக்கோ மட்டும் உரியதன்று. தமிழருக்கும், இந்துக்களுக்கும் மட்டுமல்லாமல், மதத்தால் வேறுபட்ட கிறிஸ்து வர்களுக்கும், முகம்மதியர்களுக்கும், பார்சிக ளுக்கும் மற்றும் பிற மதத்தினருக்கும் உரிய தாகும்.

பொங்கல் விழா ஒரு மதத்தின் அடிப் படையில் ஏற்பட்டதல்ல. இதில் எந்த விதமான அர்த்தமற்ற மதக்கொள்கையும் மூடப் பழக்க வழக்கங்களும் எள்ளளவும் கிடையா. மத வாதிகள் வேண்டுமானால், பொங்கல் கொண் டாட்டம் பற்றி ஆயிரங் கதைகள் சொல்லலாம். தத்துவார்த்தங்கள் கூறலாம். தேவேந்திரனை வழிபடும் திருவிழா என்றும், கோபாலகிருஷ் ணனைக் கொண்டாடும் திருவிழா என்றும் கதைக்கலாம்.

நாடு செழித்து, மக்கள் பஞ்சம், பிணி முத லியன இன்றி வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க வாழும் நல்வாழ்வின் தொடக்கத்தையே நம் மூதாதையர் பொங்கல் விழாவாகக் கொண் டாடி வந்தனர். மக்கள் இன்ப வாழ்வு வாழ வேண்டுமானால், இயற்கைப் பொருள்கள் தத்தம் தொழில்களைச் சரிவரச் செய்தல் வேண்டும். சூரியன், மழை போன்ற இயற்கை நிலைகள் காலாகாலங்களில் காய்வதாலும் பொழிவதாலும் மக்களுக்கு நல் வாழ்வை வழங்குகின்றன. இவ்விதம், இயற்கையன்னை செஞ்ஞாயிறையும், மாமழையையும் கொண்டு காலத்தால் செய்யும் உதவிகளைச் செய்து வரு வதை மக்கள் நன்றியுள்ளத்தோடு நினைந்து, விளைநிலங்கள் வழங்கிய செந்நெல்லைக் குத்தி அரிசியாக்கிப் பால் பொங்கல் இட்டு, கரும்பும், மஞ்சளும் பிறவும் வைத்து, பண்டிகை கொண்டாடினர் நம் மூதாதையர். ஆகவே, பொங்கல் திருவிழா அறுவடைத் திருவிழா - அதாவது உழவர் மகிழ்ச்சி விழா வைத் தவிர வேறில்லை. அய்ரோப்பிய நாடுகளிலும் கீழ்த் திசை நாடுகளிலும் (Harvest Festival) என்ற பெயராலே அறுவடைத் திருவிழா பலவிதமாகக் கொண்டாடப்பட்டு வருவதைப் பார்க்கலாம்.

இன்னொன்று, தைப் பொங்கல் திருநாள் தான் தமிழர்களாகிய நமக்குப் புத்தாண்டு தொடக்க நாளாகும். வடநாட்டாருக்குத் தீபாவளி வருஷப் பிறப்புப் போலத் தமிழ் நாட்டாருக்குப் பொங்கல் புத்தாண்டு பிறப் பாகும். இடைக்காலத்தில் ஆரியர் தொடர்பால், தை மாதத்துக்குப் பதிலாக, சித்திரை மாதம் புது வருஷ மாதமாகிவிட்டது.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து அதா வது தென்திசையிலிருந்து உத்தராயனத்துக்கு அதாவது வடதிசைக்கு வரும் பருவ மாறுதலை வைத்தே ஆண்டுத் தொடக்கத்தை வரையறுத்தார்கள் - இயற்கை வழி வாழ்க்கை நடத்திய நம் மூதாதையர்.

மேனாட்டார் தை மாதத்தை யொட்டி வரும் ஜனவரி மாதத்தைப் புத்தாண்டுத் தொடக்கமாக வைத்திருப்பது இங்கு சிந்திக்கத் தக்கதாகும்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது தைப் பொங்கல் விழா தமிழர் மட்டுமல்ல; தென்னாட் டில் வாழும் பல இனத்தினரும் மட்டுமல்ல; உலக மக்கள் அனைவருமே கொண்டாடக் கூடிய ஒப்பற்ற தேசியத் திருவிழாவாகும். உலகெங்கிலுமுள்ள சகல மதத்தினரும் இனத் தினரும் மொழியினரும் உவந்து கொண்டாட வேண்டிய ஈடு இணையற்ற திருநாளாகும்.

பசியும் பிணியும் நீங்கி மக்கள் நல்வாழ்வு வாழ, சூரியன் திசை மாறுவது போல, நம் வாழ்க்கையைப் பீடித்துள்ள வறுமையையும் மிடிமையையும் மற்றும் துன்பங்களையும் மாற்றி வாழ்வில் செழுமை உண்டாக்கும் பொங்கல் திருநாளைப் பூரிப்புடன் நாம் அனைவரும் கொண்டாடுவோமாக!

Comments